வியாழன், 15 ஜூலை, 2010

புனர்வாழ்வு என்றபோர்வையில் போராளிகள் சித்திரவதை -BBC

அரசாங்கத்தினால் தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் தமிழீழ விடுதலைப்புலிகளின் போராளிகள், வசதி வழங்கல்கள் இன்றி துன்புறுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் அவர்கள் தொலைபேசி மூலமும், கடிதங்களின் மூலமும் தமக்கு தகவல் தெரிவித்துள்ளதாக பி.பி.சி செய்தி சேவை தெரிவித்துள்ளது.

தாம் முகாம்களுக்குள் வைத்து, தாக்கப்படுவதாகவும், நாளாந்தம் துன்புறுத்தப்படுவதாகவும் தமது கடிதத்தில் முன்னாள் விடுதலைப்புலி போராளிகள் தெரிவித்துள்ளனர்.


எனினும் முன்னாள் போராளிகளுக்கு புனர்வாழ்வளிக்கும் பொருட்டே, அவர்கள் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்து வருகிறது.


இந்த நிலையில், கடந்த 2009ம் ஆண்டு இடம்பெற்ற இறுதி யுத்தத்தின் போது பதிவான யுத்த குற்ற விசாரணைகளுக்கும் அரசாங்கம் தொடர்ந்தும் ஒத்துழைப்பு வழங்க மறுக்கிறது.


இறுதியாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, கடந்த இறுதி யுத்தத்தின் போது, ஒரு பொது மகன் கூட கொல்லப்படவில்லை என தெரிவித்திருந்தார். எவ்வாறாயினும் பல சர்வதேச மற்றும் உள்நாட்டு மனித உரிமை அமைப்புகள், இறுதி யுத்தத்தில் ஆயிரக்கணக்கான பொது மக்கள் கொல்லப்பட்டமையை உறுதி செய்கின்றன.


இந்த நிலையில் கைது செய்து புனர்வாழ்வு வழங்கல் என்ற அடிப்படையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் போராளிகள், தமது கடிதத்தில், தாம் 'நாய்கள்" என அழைக்கப்படுவதாகவும், ஒவ்வொருநாளும் தாக்கப்படுவதாகவும் கூறியுள்ளனர்.


தாம் முகச் சவரம் செய்து பல நாட்கள் ஆகிவிட்டதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.


இதேவேளை தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள், மின்சார கட்டணங்களை செலுத்துமாறும், சுத்திகரிப்பு பணிகளுக்கான பணத்தை செலுத்துமாறும் அதிகாரிகளால் அழுத்தம் கொடுக்கப்படுவதாக அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


எனினும் தம்மிடம் பணம் இல்லை என கூறினால் தம்மை கொழும்பு பூஸ்ஸா முகாமிற்கு மாற்றிவிடுவதாகவும் அதிகாரிகளால் தாம் அச்சுறுத்தப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இது தொடர்பில் பி.பி.சி, அமைச்சர் டியூ குணசேகரவிடம் தொடர்பு கொண்டு கேட்டப்போது, இந்த முறைப்பாட்டு கடிதங்களை தமக்கு எழுதினால், அது தொடர்பில் பார்த்துக் கொள்வதாக கூறியதாக பி.பி.சி தெரிவித்துள்ளது.


இதற்கிடையில் இவ்வாறு அனுப்பி வைக்கப்பட்ட மற்றுமொரு கடிதத்தில், தாம் விடுதலை செய்யப்படுவோமா, அல்லது சுட்டுக் கொல்லப்படுவோமா என்பதே தெரியாதிருப்பதாக முன்னாள் போராளிகள் குறிப்பிட்டுள்ளனர்.


இறுதி யுத்தத்தின் பின்னர் சரணடைந்த சுமார் 10 ஆயிரத்துக்கும் அதிகமான விடுதலைப் போராளிகளை கைது செய்ததாக கூறி அரசாங்கம் தடுத்து வைத்துள்ளது.


அவர்கள் புனர்வாழ்வளிப்பு நடவடிக்கைகளுக்காக தற்போது இராணுவ முகாம்களிலும், பாடசாலைகளிலும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.


எனினும் அவர்களை பார்வையிடுவதற்கு ஊடகங்களுக்கோ, உறவினர்களுக்கோ அனுமதி வழங்காமல் அரசாங்கம் தடை விதித்து வருகிறது.


அவர்களுக்கு தற்போது தொழில்சார் மற்றும் தொழில்நுட்ப பயிற்சிகள் வழங்கப்படுவதாக அரசாங்கம் கூறி வருகிறது. ஆனால் அவ்வாறான அர்த்தமுள்ள பயிற்சிகள் எவையும் தமக்கு கிடைக்கவில்லை என தமது கடிதங்களில் போராளிகள் தெரிவித்துள்ளனர்.


இதேவேளை திருகோணமலை பகுதியில் உள்ள முகாம் ஒன்றில் இருந்து பெண் ஒருவரால் எழுதப்பட்டுள்ள கடிதம் ஒன்றில், தடுத்து வைக்கப்பட்டுள்ள பல இளைஞர்கள் காணாமல் போயுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.


சிலர் தலைகீழாக தொங்கவிடப்பட்டு தாக்கப்படுகின்றனர். சிலர் தரையில் படுக்க வைக்கப்பட்டு, இடைப்பட்டிகளால் தாக்கப்படுகின்றனர். தாக்குதலின் பின்னர் காயம் ஏற்படின் அவர்கள் வைத்தியசாலைகளுக்கு அழைத்துச்செல்லப்படுவதுமில்லை. என தெரிவித்துள்ளனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக