செவ்வாய், 10 ஆகஸ்ட், 2010

முன்னாள் புலிகள் மற்றும் ஆதரவாளர்களுக்கு எப்போது விடுதலை கிடைக்கும் என்ற கேள்விக்குச் சரியான விடை அரசதரப்பில்??

இறுதிப்போரில் சரணடைந்த கைது செய்யப்பட்ட புலிகள் இயக்க முன்னாள் உறுப்பினர்கள் பற்றிய செய்திகள் இப்போது அதிகமாக வெளிவரத் தொடங்கியுள்ளன. அரசாங்கத் தரப்பே இவர்களைப் பற்றிய செய்திகளை நாளாந்தம் கொடுக்க நினைக்கிறது.


இரண்டொரு மாதங்களுக்கு முன்னர் இந்த நிலை இல்லை. சரணடைந்த புலிகள் இயக்க முன்னாள் உறுப்பினர்கள் பற்றிய தகவல்களை வெளியிடுவதற்கு அப்போது தயங்கிய அரசாங்கம் படைத்தரப்பும் இப்போது அவர்கள் பற்றிய செய்திகள் தினம் வெளிவருவதை விரும்புகின்றன.



கொழும்பில் இருந்து வெளியாகும் ஆங்கிலப் பத்திரிகைகளில், முன்னாள் புலிகள் பற்றிய செய்தி கடந்த சில வாரங்களாகப் பெரும்பாலும் ஒவ்வொரு நாளும் வெளியாகியிருப்பதைக் காணமுடியும். சில செய்திகள் முன்னரே வெளியான போதும் அவை திரும்பத் திரும்ப வெளியாகின்றன. இதற்குக் காரணம் இல்லாமல் இல்லை.


தடுப்புக்காவலில் உள்ள புலிகள் இயக்க முன்னாள் உறுப்பினர்கள் பற்றிய கேள்வி இப்போது உலகளவில் அதிகரிக்க ஆரம்பித்து விட்டது. அதிலும் புலிகளின் முக்கிய தலைவர்களான பாலகுமாரன், யோகி போன்றோரின் நிலை பற்றி எழுந்துள்ள சர்ச்சைகளுக்குப் பின்னர் இத்தகைய செய்திகள் அதிகமாக வெளிவருவதை அரசதரப்பு விரும்புவதாகத் தெரிகிறது.


தடுப்புக்காவலில் தற்போது சுமார் 8000 முன்னாள் புலிகள் இருப்பதாக இராணுவத்தின் புனர்வாழ்வு ஆணையாளர் தெரிவித்துள்ளார். இவர்களில் 1350 பேருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்வதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ள 706 பேர் தற்போது பூசாவில் தடுத்து வைக்கப்பட் டுள்ளனர்.


இவர்களை விட மேலும் 600 பேர் வவுனியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்னர். 1350 பேருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்படவுள்ளதாக பொலிஸார் தரப்பில் கூறப்பட்டுள்ள போதும் இராணுவத்தின் புனர்வாழ்வுப் பிரிவோ சுமார் 700 பேரே புலிகளின் தீவிர உறுப்பினர்கள் என்றும், அவர்கள் மீதே சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் கூறியுள்ளது.


தற்போது பொலிஸ் மற்றும் புலனாய்வுப் பிரிவின் விசாரணைக்காக பூசாவுக்கு அனுப்பப்பட்டுள்ளவர்கள் புலிகளின் தீவிரமான உறுப்பினர்கள் என்பதுடன் நீண்ட காலம் சேவையாற்றியவர்கள். தாக்குதல்கள், புலிகளின் முக்கிய செயற்பாடுகளுடன் தொடர்புடையவர்கள். இவர்களை இப்போதைக்கு அரசாங்கம் விடுவிக்கப் போவதில்லை என்பது உறுதியாகவே தெரிகிறது.


ஆனால் தற்போது புனர்வாழ்வு முகாம்களில் புனர்வாழ்வு பெற அனுப்பப்பட்டுள்ள சுமார் 7000 வரையான முன்னாள் புலிகள் – தீவிர உறுப்பினர்களைப் போன்று நீண்டகாலம் தடுத்து வைக்கப்படுவதற்கு வாய்ப்புகள் இல்லையேன்றே கருதப்படுகிறது. இவர்களில் பலரும் சம்பளத்துக்காக புலிகளுடன் பணியாற்றியவர்களும், கட்டாய ஆட்சேர்ப்பின் போது இணைந்து கொண்டவர்களுமே.


ஆனாலும் இவர்களைப் படையினர் தடுத்து வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். தடுப்புக்காவலில் உள்ள முன்னாள் புலிகளின் விவரங்களை வெளியிட வேண்டும் என்று விடுக்கப்படும் கோரிக்கைகளுக்கு அரச தரப்பில் இருந்து எந்தப் பதிலும் வரவில்லை. மனிதஉரிமை அமைப்புகள் இதுபற்றி எழுப்புகின்ற குரலுக்கு அரசாங்கம் செவிசாய்க்காதது போன்று நடந்து கொள்கிறது.


தடுப்புக்காவலில் உள்ளோரின் பட்டியல் வெளிவந்தால் தான் போரின் பின்னர் காணாமல் போனவர்கள் பற்றிய உண்மை ஓரளவுக்கு வெளியே வரும். ஆனால் அரசாங்கம் இந்த விடயத்தில் வெளிப்படையாக நடந்து கொள்ள மறுக்கிறது. இலங்கை அரசுக்கு சார்பாக கருத்து வெளியிட்டு வரும் கலாநிதி ரொகான் குணரட்ண அண்மையில் ஒரு பேட்டியில், தடுப்பு முகாம்களில் உள்ளவர்கள் பற்றிய தரவுகள் முறையாகப் பேணப்பட வேண்டும் என்று கூறியிருநதார்.


இதுபற்றிய உண்மையை வெளிப்படுத்துவதன் மூலமே புலம்பெயர் நாடுகளில் புலிகளின் பிரசாரங்களை முறியடிக்க முடியும் என்றும் கூறியுள்ளார். அவரது ஆலோசனைப்படி தான், அண்மைக் காலமாக தடுப்புக்காவலில் உள்ள முன்னாள் புலிகள் பற்றிய செய்திகள் வருகின்றனவோ தெரியவில்லை.


தடுப்புக்காவலில் உள்ள 8000 இற்கும் அதிகமான முன்னாள் புலிகள் மற்றும் ஆதரவாளர்களுக்கு எப்போது விடுதலை கிடைக்கும் என்ற கேள்விக்குச் சரியான விடை அரசதரப்பில் இல்லை. ஆனால் நிச்சயமாக இவர்கள் குறுகிய காலத்துக்குள் விடுவிக்கப்படமாட்டார்கள். அத்துடன் ஒரே தடவையிலும் விடுவிக்கப்படுவது சாத்தியமற்றது.


இராணுவத்தின் புனர்வாழ்வு ஆணையாளர் பிரிகேடியர் சுதந்த ரணசிங்க இதனை உறுதிப்படுத்தியுள்ளார். இந்த 8000 பேரையும் ஒரே தடவையில் விடுவிப்பது பாதுகாப்புப் பிரச்சினையை ஏற்படுத்தும் என்ற அச்சம் இருப்பதாக அவர் கூறியுள்ளார். எனவே முன்னாள் புலிகளின் விடுதலை என்பது கட்டம் கட்டமாகவே சாத்தியமாகும் என்பது தெளிவு.


கட்டம் கட்டமாக என்னும் போது அதில் கூட ஒரு நிபந்தனை விதிக்கப்படுகிறது. புனர்வாழ்வு நடவடிக்கைளை அவர்கள் சரியாகப் பூர்த்தி செய்ய வேண்டும் என்பதே அது. அதைவிட புனர்வாழ்வு பெற்றவர்கள் அரச விரோத நடவடிக்கைகளில் ஈடுபடவில்லை என்பதை உறுதிப்படுத்தவும் அரசாங்கம் முனைகிறது.


அதில் திருப்தி காணப்பட்டால் மாத்திரமே தடுப்பு முகாம்களில் உள்ளவர்களின் விடுதலை சாத்தியமாகும். இந்தப் புனர்வாழ்வு மற்றும் விடுதலை நடவடிக்கைகள் அடுத்த ஓரு ஆண்டுகளில் முடிந்து விடும் என்று எவரும் கற்பனை செய்து கொள்ள முடியாது. ஜே.வி.பி.யினருக்கு புனர்வாழ்வு கொடுக்கவே ஐந்து வருடங்கள் ஆகின புலிகளுக்கு புனர்வாழ்வு கொடுக்க அதைவிட அதிக காலம் பிடிக்கும் என்று சூசகமாகக் கூறியுள்ளார் பிரிகேடியர் சுதந்த ரணசிங்க.


ஜே.வி.பி.யினர் மரபுவழிப் போரை நடத்தியவர்கள் அல்லர் ஆனாலும் அவர்களுக்குப் புனர்வாழ்வு கொடுக்க 5 வருடங்கள் தேவைப்பட்டன என்று கூறியுள்ளதன் மூலம் அவர், முன்னாள் புலிகளின் புனர்வாழ்வு நடவடிக்கைகள் 5 வருடங்களுக்கு அப்பாலும் நீடிக்கப்போவதை உறுதிசெய்துள்ளார்.


இங்கு ஜே.வி.பி.யினரையும் புலிகளையும் வெவ்வேறு கண்ணோட்டத்துடனேயே புனர்வாழ்வு கொடுக்கின்றனர் என்பது தெளிவாகியுள்ளது. ஜே.வி.பி.யினரின் செயற்பாடுகள் மரபு வழியில் இருக்கவில்லை என்று கூறியுள்ளதன் மூலம் அவர்களின் செயற்பாடுகள் தீவிரமற்றவை என்று மதிப்பிட முனைந்துள்ளார் பிரிகேடியர் சுதந்த ரணசிங்க.


புலிகளைத் தீவிரமானவர்களாகக் காட்டியுள்ளதன் மூலம் இந்தப் புனர்வாழ்வுத் திட்டத்தை நீண்டகாலத்துக்கு நகர்த்தும் யோசனை அரசுக்கு இருப்பதாகத் தெரிகிறது. அதேவேளை சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ள முன்னாள் புலிகள் தாக்குதல்கள், படுகொலைகள், ஆயுதக்கடத்தல்கள் போன்ற குற்றச்சாட்டுகளுக்கு முகம் கொடுக்க வேண்டிய நிலையில் உள்ளனர்.


இவர்கள் மீதான வழக்குகள் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்படுவதற்கே வாய்ப்புகள் உள்ளன. இந்தச் சட்டத்தின் கீழ் எதிரியின் ஒப்புதல் வாக்கு மூலத்தையே அவருக்கு எதிரான சாட்சியமாகப் பதிவு செய்ய முடியும். விசாரணைகளின் போது கட்டாயப்படுத்திப் பெறப்படும் ஒப்புதல் வாக்கு மூலங்கள் எத்தனையோ பேரினது வாழ்வைச் சூனியமாக்கியுள்ளன.


எனவே இவர்கள் விடயத்தில் இதுபோன்று நடப்பதற்கு அதிகம் வாய்ப்புகள் உள்ளன. நேரடிச் சாட்சிகள் இல்லாது போனாலும் புலிகளின் தீவிர உறுப்பினர்கள் என்று அடையாளம் காணப்பட்டவர்களைக் குறைந்தது 10 வருடங்களுக்கேனும் சிறையில் அடைப்பதே அரசின் திட்டம் போலுள்ளது.


எனவே ஒப்புதல் வாக்குலத்தைக் கொண்டு அவர்களுக்கு எதிராக வழக்குத் தொடுக்கப்படலாம். பிரிவினைவாதச் சிந்தனைகளை முன்னாள் புலிகளிடத்தில் இருந்து மு ற்றாக அழிக்க நினைக்கிறது அரசாங்கம். அதற்காக புலிகளின் தீவிர செயற்பாட்டாளர்களை எவ்வளவு காலத்துக்கும் சிறையில் அடைப்பதற்கும் அரசாங்கம் தயாராகவே உள்ளது.


அதற்கெதிரான சர்வதேச விமர்சனங்களையெல்லாம் அது கண்டு கொள்ளப் போவதில்லை. அவர்களை வெளியே விடுவது ஆபத்தானது என்ற அச்சத்தில் இருந்து அரசாங்கம் விடுபடும் வரை இந்த நிலையே தொடரும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக