சனி, 14 ஆகஸ்ட், 2010

ஓடுங்கோ!... ஓடுங்கோ!... நில்லாதிங்கோ!... ஓடுங்கோ!...

கனவுபற்றிய ஆய்வுகள் நிறையவே உண்டு. உளவியலாளரான சிக்மன் புரொட்டின் கனவு பற்றிய கருத்துக்கள் மருத்துவ விஞ்ஞான ஆய்விற்குப் பேருதவி ஆயிற்று. எனினும் சில வகையான கனவுகளுக்கு காரணகாரியம் எதுவும் தெரியவில்லை.இப்படித்தான்.நேற்றிரவு ஆழ்ந்த தூக்கத்தில் ஒரு கனவு.கறுத்தக் கண்ணாடியும், வெள்ளைச்சாரம் நஷனலும் அணிந்த ஒருவர் பலாலி விமான நிலையத்தில் வந்திறங்கினார். அவர் விமானத்தால் இறங்கியதுதான் தாமதம் பொலிஸாரும், இராணுவத்தினரும் அங்கும் இங்கும் ஓடித்திரிந்தனர். இதை பார்த்தபோது வந்தவர் உயர்ந்த பதவியில் இருப்பவர் என உணர்ந்து கொண்டேன். ஆனாலும் ஒரு அதிசயம். அவருடைய கையில் கயிறு இருந்தது.


நானும் பயந்து போனேன். பாசக்கயிறு என்பது இது தானோ! அப்படியானால் எருமைக்கடா எங்கே? அங்கும் இங்குமாக பார்த்தேன். எங்குமே இல்லை. அப்படியானால் இவர் யார்? யாரிடமும் விசாரிக்க முடியவில்லை.

அந்த நேரத்தில் சொகுசுவாகனம் ஒன்று அவர் அருகில் வந்துநின்றது.சேர் ஏறுங்கள் என்று சிலர் பெளவியமாக கூற அவர் மறுக்கின்றார். நான் நடந்து வரப்போகிறேன் என்றார் அவர். நடந்து சென்றால் கால்வலிக்கும், கைவலிக்கும் ஆகையால் ஏறுங்கள் என்றனர் வந்தவர்கள்.

கறுத்தக் கண்ணாடிக்கு சுட்டு விரலால் ஓர் உந்தல் கொடுத்தபடி டேய் நான் நடந்து தான் வரப்போகிறேன் என அதட்டலாக கூறினார் அந்த மனிசன். பலாலி வீதியால் கையில் கயிற்றுடன் அவர் நடக்கத் தொடங்கினார். பலாலி வீதியின் இரு மருங்கையும் பார்கின்றார். உடைந்த வீடுகள், காடாய்க்கிடக்கும் வளவுகள், மக்கள் இல்லாத வெறுமை, இவற்றைப்பார்த்து புன்சிரிப்பை கொட்டுகின்றார்.

எனக்கு ஒன்றுமே புரியவில்லை. மக்கள் நடமாட்டம் உள்ள இடத்துக்கு அவர் வரவும் அவரைக் கண்டவர்கள் ஓட்டம்பிடிப்பதைக்கண்டு திகைத்துப்போனேன்.ஏன் ஓடுகிறார்கள்? ஓடுபவர்களில் பெரும்பாலானவர்கள் அரச பணி செய்பவர்கள் போல் தெரிகிறது.

ஒருவர் அலுவலகப் பாக்குடன் ஓடியபோது அவரை மறித்து ஐயா! ஏன் ஓடுகிறீர்கள் எனக்கும் சொல்லுங்கள் என்று கேட்டேன். அதற்கு அவர் கயிறுடன் நடந்து வரும் அந்த பெரிய மனிசனை சுட்டிக்காட்டினார்.
அவரைக்கண்டால் ஏன் ஓட வேண்டும் என்று கேட்டேன். டெங்கு ... டெங்கு ... என்றார். டெங்கிற்கும் அவருக்கும் என்ன தொடர்பு. இந்தக் கேள்விக்கு அந்தாள் என்னைக் கண்டபாட்டில் பேசிவிட்டு ஓடி மறைந்தார்.

எதிலும் தெளிவு தேவை. கயிற்றுடன் வருபவரிடமே கேட்கலாமே. அவர் என்னை நோக்கி வர நானும் ஐயா! தாங்கள் யார் என்று கேட்டேன். எனது கேள்வி அவருக்கு பிடித்திருக்க வேண்டும் போலும். மெல்லிய சிரிப்புடன் நான் தான் மேர்வின் சில்வா என்றார். ஆ! கடவுளே! ஓடுங்கோ... ஓடுங்கோ... நில்லா திங்கோ!... என்று கத்திக்கதறினேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக