வியாழன், 19 ஆகஸ்ட், 2010

விடுதலைப்புலிகள் மிகவும் வல்லமை பொருந்தியவர்கள்......கோதாபய ராஜபக்க்ஷ

விடுதலைப்புலிகள் அமைப்பினைப் பொறுத்தவரையில் அவர்கள் மிகவும் வல்லமை பொருந்தியவர்களாகவே இருந்தனர்.விடுதலைப்புலிகள் இராணுவத்தினருக்கு சமமான பலத்தினை கொண்டிருந்தனர்.அத்துடன் இராணுவத்தினரால் பயன்படுத்தப்பட்ட சகல ஆயுதங்களும் யுத்தத்தின் போது விடுதலைப் புலிகளாலும் பயன்படுத்தப்பட்டுள்ளது.


மோதல்களின் இறுதிக்கட்டத்தின் போது 6,000 இராணுவத்தினர் கொல்லப்பட்ட அதேவேளை 30,000 படையினர் காயமடைந்துள்ளனர். விடுதலைப்புலிகளை எதிர்த்து போரிட்ட படையினருக்கே இவ்வாறான இழப்பு ஏற்பட்டுள்ளதெனில் இருதரப்பினரிடையேயும் எவ்வாறான உக்கிரமோதல் இடம்பெற்றுள்ளதென்பதையும் விடுதலைப்புலிகளால் எவ்வாறான ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதென்பதையும் அறியமுடியும்.

விடுதலைப்புலிகள் மிகவும் பலம்வாய்ந்ததொரு போராளிகள் அமைப்பு. ஆனால், சர்வதேசம் அவர்களை சிறியதொரு குழு என நினைத்தே செயற்பட்டு வந்துள்ளது.இதேவேளை, இராணுவத்தின் இழப்பினை எடுத்து நோக்கினால் விடுதலைப்புலிகள் தரப்பிலும் அதற்கு சமனான இழப்பு ஏற்பட்டிருக்க வேண்டும்.ஆனால், பொதுமக்களின் இழப்பு குறித்துத்தான் பரவலாக பேசப்படுகின்றது.விடுதலைப் புலிகளின் இழப்பு பற்றி பேசப்படுவதில்லை.
அரசாங்கத்துக்குச் சொந்தமான சொத்துகள் குறிப்பாக பாடசாலை,அலுவலகங்களின் கட்டடங்கள் ஆரம்பத்தில் இராணுவத்தினரின் தேவைக்காக பயன்படுத்தப்பட்டது.ஆனால், அவற்றில் பெரும்பாலானவை மீண்டும் ஒப்படைக்கப்பட்டு விட்டது.தனியாரின் சொத்துகள் இராணுவத்தேவைக்கு பயன்படுத்தவில்லை.அதேவேளை, இராணுவத்தினரைத் தற்காலிகமாக தங்கவைப்பதற்காக சில தங்குமிடங்கள் அமைக்கப்படுகின்றதே தவிர இராணுவத்தினரை குடியேற்றும் திட்டங்கள் எதுவும் இல்லை.அவ்வாறான திட்டங்கள் எதுவும் அமுல்படுத்தப்படவும் இல்லை.

யாழ்ப்பாணத்தில் உள்ள உயர்பாதுகாப்பு வலயம் பற்றி நோக்குமிடத்து பலாலி இராணுவ முகாமின் விஸ்தீரணம் குறித்து ஆராயப்பட்டு வருகின்றது.பலாலி இராணுவ முகாமிற்குள் தனியார் காணிகள் உள்ளடக்கப்பட்டால் அதற்காக மாற்றுக் காணிகள் வழங்கப்படும் அல்லது நஷ்ட ஈடு வழங்கப்படும்.ஆனால், விடுதலைப் புலிகள் மீண்டும் உருவாவதனை தடுப்பதற்காக வடக்கில் இராணுவத்தின் பிரசன்னம் தொடர்ந்தும் இருக்கும்.

குறிப்பாக கடலோரப் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருக்கும். காரணம் விடுதலைப் புலிகளுக்கு ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் கடல் வழியாகத்தான் ஆயுதங்கள் வந்தடைந்தன.அதேவேளை, வடக்கில் படையினரின் சோதனைச் சாவடிகள் அகற்றப்பட்டு பாதுகாப்பு பொறுப்பு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்படும்.அத்துடன் மோதலின் பின்னர் எம்மிடம் சரணடைந்த முன்னாள் போராளிகள் சரணடைந்த தினத்திலிருந்து இருவருடங்களுக்குள் விடுதலை செய்யப்படுவர்.

விடுதலைப்புலிகள் தமது படைப்பலத்தினை வலுப்படுத்தவே ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் சமாதானத்தை விரும்பியிருந்தனர்.அதனைப் போன்றே மோதலின் இறுதித் தருணத்திலும் சமாதானம் ஏற்படும் என்ற நம்பிக்கையுடன் விடுதலைப்புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் நம்பியிருந்தார் எனத் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக