திங்கள், 20 செப்டம்பர், 2010

எதையும் எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறேன்- திருமலை அரசியல் துறை பொறுப்பாளர் எழிலனின் மனைவி

எனக்கு பின்விளைவுகள் வந்தாலும் பிரச்சினையில்லை. நான் பயப்படவில்லை. வந்தால் எதையும் எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறேன். வாழ வேண்டும் என்ற விருப்பத்துடன் நாங்கள் வாழ்ந்து கொண்டிருக்கவில்லை இலங்கை அரசால் அமைக்கப்பட்டிருக்கின்ற நல்லிணக்க ஆணையத்தின் முன்பு விடுதலைப் புலிகளின் திருமலை மாவட்ட அரசியல் துறைப் பொறுப்பாளர் எழிலனின் மனைவி ஆனந்தி சசிதரன் சாட்சியமளித்துள்ளார்
 விடுதலைப் புலி உறுப்பினர்கள் இராணுவத்தினரிடம் சரணடைந்தது பற்றி நேரடியாகக் கண்ட ஒருவர் அதுவும் விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினர் ஒருவரின் மனைவி, போர் நடைபெற்ற இறுதிக் காலகட்டத்தில் அங்கு இருந்தவர் என்ற வகையிலும் இன்னும் பல்வேறு வழிகளிலும் ஆனந்தி சசிகரனின் இந்தச்சாட்சி முக்கியம் பெறுகிறது. அந்த வகையில் அவருடைய நேர்காணல் இங்கு தரப்படுகிறது.
18.05.2009இல் எனது கணவர் தள பொறுப்பாளர் போராளிகளுடன் சரணடைந்தவர் எனது கண்ணுக்கு முன்னாலேயே முல்லைத்தீவில் அவர் சரணடைந்தார் எனக்கு அவரைக் காட்டச் சொல்லியே அந்தக் கமிசனிடம் நான் கேட்டேன்.
- எந்த இடத்தில் சரணடைந்தார்கள்? வெள்ளி  முள்ளிவாய்க்காலிலா?
இல்லை. கடைசிநேரம் ஆமியின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் சனம் எல்லாம் வந்த பிற்பாடு முல்லைத் தீவு வட்டுவாகையைத் தாண்டி ஒரு இடத்தில் ‐ அது முல்லைத் தீவுப் பிரதேசம் தான் ‐ அதில் தான் அவர்கள் எல்லோருமாய் அணிதிரண்டு போய் சரணடைந்தார்கள். ஆங்கில மொழிக்கல்லூரி அதிபர் பாதர் பிரான்ஸிஸ் தலைமையில் தான் அவர்கள் போய் சரணடைந்தார்கள். அவ்வாறு சரணடைந்தவர்களின் மனைவிமாரும் கூட அவர் களைத் தேடிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் இது வரை அவர்கள் பற்றி எதுவித தகவலும்இல்லை.
- பாதர் பிரான்ஸிஸ் தற்போது எங்கிருக்கிறார் அவரோடு தொடர்பு ஏதும் கிடைத்ததா?
அவரும் எங்கேயென்று தெரியவில்லை. நான் இன்னுமொரு பாதரை ஒருமுறை வவுனியாவில் கண்டபோது பாதர் பிரான்ஸிஸ் எங்கேயென்று கேட்டேன். அவரும் தாங்கள் இதுவரை அவரைச் சந்திக்கவில்லை என்றும் தாங்களும் அவரைத் தேடிக்கொண்டு திரிவதாகவும் அவர் சொன்னார்
- எழிலனோடு சரணடைந்தவர்களில் மற்றைய முக்கியமானவர்கள் யார் யார் ?
அரசியல் துறைத் துணைப் பொறுப்பாளர் தங்கன். நிர்வாகத்துறைப் பொறுப்பாளர்   புவண்ணன். பிரியன், இளம்பரிதி, விளையாட்டுத்துறைப்பொறுப்பாளர; ராஜாவும் அவரோடை சேர;ந்த மூன்று பிள்ளைகள், லோறன்ஸ் திலகர்  யோகி, குட்டி, தீபன், பாபு ஆகியோருடைய பெயர்களைத் தான் தெரியும். ஏனையவர்களைத் தெரியும். ஆனால், அவர்களின் பெயர் தெரியாது.
- இவர்கள் சரணடைந்ததும் அவர்களை மட்டும் கூட்டிப் போனார்களா? அல்லது உங்களையும் சேர்த்துக் கூட்டிப் போனார்களா?
இவர் சரணடையப் போன போது நானும் பிள்ளைகளும் கூடப் போனோம். இடையில் என்னை இராணுவ அதிகாரிகள் மறித்து விட்டார்கள். இவர் போகும் போது இராணுவ அதிகாரிகள் இவரை இனங்கண்டு மாவிலாறு எழிலன் என்று தான் கூப்பிட்டார்கள். நீங்கள் ஒரு அரசாங்க உத்தயோகத்தராக இருக்கிறபடியால் நீங்கள் சனத்தோடு போங்கள். நாங்கள் அவரைப் பின்னர் விடுவோம் என்று இராணுவ அதிகாரிகள் கூறினார் கள்.
- உங்களை வவுனியா முகாமுக்குக் கொண்டு வந்தார்களா?
அவர்கள் சரணடைந்து அரை மணித்தியாலத்தில் எங்களை பஸ்ஸில் ஏற்றி மற்றப் பாதையால் ஓமந்தைக்குக் கொண்டு வந்துவிட்டார்கள். அதுக்குப் பிறகு எனக்கு அவரோடு எந்தத் தொடர்பும் இல்லை.
- நீங்கள் சரணடைந்த பிறகு எழிலனுடன் ஒரு முறையாவது பார்த்துப் பேசினீர்களா?
இல்லையில்லை. எனக்கு ஒரு தொடர்பும் இருக்கவில்லை. ஒரு கடிதத் தொடர்போ எதுவும் இல்லை. அவரைப் பார்த்தது என்று கூட எனக்கு சொல்வார்  எவருமில்லை.
- முன்னாள் போராளிகள் பலரை தற்போது அரசாங்கம் இப்போது விடுவித்து வருகிறது. . அப்படி விடுவிக்கப்பட்ட யாராவது வந்து எழிலனைப் பார் த்ததாகச் சொல்லி இருக்கிறார் களா?
அப்படி விடுபட்டவர்களை உடனே நான் கண்டு கேட்டிருக்கிறேன். இப்போது ஊனமுற்ற போராளிகள் பலரை விடுவித்திருக்கிறார்கள். அவர் களை நான் கண்டு கேட்டேன். தாங்கள் காணவில்லை என்று தான் அவர்கள் சொல்கிறார்கள். இப்போதும் விடுவிக்கப்படுகிறவர்களை நான் கண்டு இவரைப் பற்றி எதுவும் தெரியுமா கண்டீர்களா என்று கேட்பேன். ஆனால் இவர்  பற்றிய தகவல் எதுவும் தங்களுக்குத் தெரியாது என்றே அவர்கள் சொல்கிறார்கள்.
- யார் யார் உள்ளே இருக்கிறார்கள் என்பது பற்றி அவரவருடைய குடும்பங்களுக்குச் சொல்லி விட்டோம் என்று டி யூ குணசேகரா சொல்லி இருக்கிறார் உங்களுக்கு அவ்வாறு ஏதும் சொல்லப்பட்டதா?
நான் எனது மூன்று பிள்ளைகளையும் அழைத்துக் கொண்டு போய் கிளிநொச்சியில் வைத்து டியூ  குணசேகராவை சந்தித்து எனது நிலைமைகளை விளக்கி கடிதம் கொடுத்துக் கேட்டேன். அவர் எனக்கு அப்படி ஒரு பதிலையும் தரவில்லை. அவர் போய் ஒரு மாதத்திற்குப் பிறகு ஒரு கடிதம் அனுப்பி இருந்தார் அக்கடிதத்தில் அவர் இன்னொரு அமைச்சுக்கு எனது முறைப்பாட்டுக் கடிதத்தையும் அனுப்பி தான் கேட்டிருப்பதாக எனக்கு ஒரு பிரதி அனுப்பியிருந்தார் எனக்கு எந்தவிதமான பதிலும் அவரிடமிருந்து வரவில்லை.
- இப்போது இந்தக் கமிசன் முன்னால் நீங்கள் சாட்சியமளித்திருக்கிறீர்கள். உங்களுக்கு என்ன நம்பிக்கை இருக்கிறது. இதனால் மாற்றம் ஏதும் ஏற்படும் என்று நினைக்கிறீர்களா?
ஜனாதிபதியாலேயே ஒன்றையும் செய்யமுடியவில்லை. இதனால் என்ன செய்து விட முடியும்? சும்மா எனது மன ஆறுதலுக்குப் போய் சொல்லிவிட்டு வந்தது மாதிரித் தான் இருக்கிறது.
- அதேநேரத்தில் நீங்கள் போரின் இறுதிக்கட்டத்தில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டப் பகுதிக்குள் இருந்தீர்கள். அந்த இறுதி நாட்களில் விடுதலைப் புலிகள் பல அத்துமீறல்களைச் செய்தார்கள். சிறார்களைப் படையில் சேர்த்தார்கள். போர்ப்பிரதேசத்தில் இருந்து வெளியேறியவர் களைச் சுட்டார்கள் என்ற குற்றச்சாட்டுக்கள் எல்லாம் வந்து கொண்டிருந்தது. இன்றைக்கு நீங்கள் சாட்சியம் அளித்த போது அதுபற்றி ஏதாவது கேட்டார்களா?
இல்லை. அதுபற்றி எதுவும் கேட்கவில்லை. அந்த நேரத்தில் ஒரு திறந்த வெளி பங்கருக்குள் தான் நாங்கள் இருந்தோம். விடுதலைப் புலிகளின் நடவடிக்கைகளைக் கண்காணித்துக் கொண்டு நாங்கள் இருக்கவில்லை. முன்னர் எல்லோரும் விடுதலைப் புலிகளிளை ஆதரித்துக் கொண்டு இருந்தார்கள். இப்போது இராணுவத்தின் கட்டப்பாட்டுப் பிரதேசத்திற்குள் வந்து விட்டால் இராணுவத்துக்குச் சார்பான கதைகளைக் கூறிக்கொண்டு தான் இருக்க வேண்டும்.
- கடைசி நேரத்தில் என்ன நடந்தது?
கடைசி நேரத்தில் ஏதாவது ஒரு நாட்டில் இருந்து எங்களுக்கு ஏதாவது ஒரு தீர்வு கிடைக்கும். இவ்வளவு கஷ்டப்பட்டதற்கும் அவலப்பட்டதற்கும் ஏதோ ஒரு விடிவு வரும். ஒரு நல்ல மத்தயஸ்தினூடாக ஏதாவது வரும் என்று தான் நாங்க்ள எதிர் பார்த்தோம். ஆனால் ஒன்றும் வரவில்லை. எல்லாமே கை மீறிப் போய் நடைப்பிணங்களாகத் தான் இராணுவக்கட்டுப்பாட்டுப் பிரதேசத்திற்குள் நாம் வந்தோம்.
- எழிலன் போன்றவர்கள் தப்பித்து வேறு நாட்டுக்குப் போக முயற்சி செய்யவில்லையா?
அவர்கள் தாங்களும் போக முயற்சிக்கவில்லை. எங்களை ‐ குடும்பத்தினரையும் போக விடவில்லை. அவருடைய விசுவாசம். மற்றது பிழையான முன்னுதாரணமாய் இருக்கக்கூடாது. இவ்வளவு சனத்துக்கும் சேர்த்து வருவது தான் எங்களுக்கு வரும். வாழ்வோ சாவோ சனத்தோடையே சேர்ந்து போவோம் என்று தான் எங்களையும் தங்களுடன் வைத்திருந்தார்கள். நாங்களும் அங்கிருந்து வெளியேற வேண்டும் என்று நினைக்கவில்லை. அவரை விட்டு விட்டு நாங்கள் எப்படி வெளியேறுவது?
- நீங்கள் முன்னர் கூறியிருந்தீர்கள். மாவிலாறு எழிலன் என்று இனம்கண்டு இராணுவத்தினர் அழைத்துச் சென்றார்கள் என்று. தமிழ் சமூகத்திடமே ஒரு அபிப்பிராயம் இருக்கிறது. இந்தப் போர் ஆரம்பித்ததற்கே காரணம் மாவிலாறு போர் நடவடிக்கை தான் காரணமென்று. அதை எழிலன் சரியாகக் கையாளவில்லை என்று. அதனால் விடுதலைப் புலிகள் கட்டுப்பாட்டுப் பகுதிக:குள் இருந்த போதோ அல்லது இப்போதோ ஏதாவது அழுத்தங்கள் வருகிறதா?
எங்களுடைய சமூகத்தைப் பற்றி எனக்கு நன்றாகத் தெரியும். நான் 40 வருடம் அதோடு இருந்தனான். மாவிலாறை யூட்டுவது என்கிற முடிவு எழிலன் தன்னிச்சையாக எடுத்த முடிவில்லைத் தானே. அதுக்கென்று ஒரு மத்தியகுழு இருக்கிறது. அங்கு கதைத்துப் பேசிஎடுத்த முடிவு அது. மாவிலாறைப் பூட்டியதால் கையாள முடியாமற் போனது என்பது பொய்க்கதை. அதைப் பூட்டியதால் வரும் பிரச்சினைகள் குறித்து அவர்களுடைய அமைப்பு பொறுப்பாளர்கள் தீர்மானித்திருக்க வேண்டிய ஒன்று. நல்லது நடந்தால் நல்லதாகச் சொல்வதும் அதால் ஏதாவது சிறிது தவறு நடந்தாலும் கெட்டதாகச் சொல்வதும் சமூகத்தின் இயல்பு தானே!
- இப்போது உங்களுடைய தனிப்பட்ட நிலைமையைச் சொல்லுங்கள். நீங்கள் மூன்று பெண்களுக்குத் தாய் என்று நினைக்கிறேன். அவர்களுடைய நிலைமை எப்படி இருக்கிறது? உங்களுடைய அன்றாட வாழ்க்கை எப்படிப் போய்க் கொண்டிருக்கிறது?
நான் ஒரு அரச உத்தியோகத்தர் என்றபடியால் என்னால் அவர் களைப் பராமரிக்க அவர்களுடைய படிப்பைக் கவனிக்க முடிந்தாலும், . நிறைய சாவைக்கண்டது நிறைய சடலங்களைக் கண்டு வந்தது தந்தை இல்லை என்பது அவர்களை உளவியல்; ரீதியாகப் பெரிய பாதிப்புக்கு உள்ளாகியிருக்கிறது. அப்பாவைப் பார்க்க வேண்டும் என்பதை மட்டும் என்னால் பூர்த்தி செய்ய முடியாமல் இருக்கிறது. கூடியளவுக்கு அவர்களுடைய படிப்பையும் ஏனைய தேவைகளையும் பூர்த்தி செய்து கொண்டு இருக்கிறேன்.
- தற்போது எழிலன் எங்கு இருப்பார் அவருக்கு என்ன நடந்திருக்கும் என்று ஏதாவது தெரிகிறதா? உங்களுடைய ஊகம் என்ன?
அவருக்கு ஒன்றும் நடந்திருக்க வாய்ப்பில்லை. ஒன்றை மட்டும் தெளிவாக நினைக்க வேண்டும். போர்  நடந்த நேரத்தில் அவர் இல்லை என்று சொன்னால் இராணுவத்தில் ஷெல்லடியிலையோ அல்லது கிபீர் அடியிலையோ செத்திருக்கலாம் என்று நினைக்கலாம். இது போர் எல்லாம் முடிந்து அதன் பிறகு எனது கண்ணுக்கு முன்னால் இராணுவத்திடம் சரணடைந்தவர் அவர் அவர் எங்கோ இருக்க வேண்டும். இது இலங்கை ஜனாதிபதிக்குத் தெரியாத ஒன்றல்ல. இங்கு ஒரு சின்ன ஈ அசைந்தால் கூட அது அவருக்குத் தெரிந்திருக்கும். ஆனபடியால் அவரை எங்கோ மறைத்து வைத்திருக்கிறார்கள் என்று தான் நான் நினைக்கிறேன். போர் முடிந்த பிறகு அவரைக் கொல்லும் நோக்கில் இராணுவம் இருந்திருக்காது.
- எந்த இடத்தில் அவர்  சரணடைந்தார் என்று உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா? நாளை ஒரு ஆணையத்தில் உங்களால் சாட்சியமளிக்க முடியுமா?
முல்லைத் தீவு வட்டுவாகல் பாலம் தாண்டி வந்த பிறகு ஒரு வெட்டைப் பிரதேசத்தில் முள்வேலிக்கம்பிக்குள் முதலில் இருந்தோம். பின்னர் சிறிது நடந்து வந்து இன்னொரு வெட்டைக்குள் இருந்தோம். அதில் ஒரு சிறிய கட்டிடம் மட்டும் தான் இருந்தது. அதில் தான் அவர;கள் சரணடைந்தார்கள  திருப்பிப் போனால் நான் அந்த இடத்தை அடையாளம் காட்டுவேனா என்பது தெரியவில்லை. இது தான் அந்த இடம் என்று முகவரி குறிப்பிடத் தெரியவில்லை.
- இவரோடு சரணடைந்த மற்றப் போராளிகளுடைய குடும்பத்தினர்  இதே நிலைமையில் இருக்கிறார்களா? அல்லது வேறு சில பேர்எங்கு இருக்கிறார்கள் என்று யாருக்காவது தெரிய வந்துள்ளதா?
என்னை பஸ்ஸிலோ அல்லது வேறிடங்களிலோ காணும் அவர்களும் தாங்கள் தேடிக்கொண்டிருப்பதாகவும் ஐசிஆர்சிக்குப் போகிறோம் ஹியுமன் ரைட்ஸ்க்குப் போகிறோம் என்று சொல்கிறார்களே தவிர ஒருவரும் ஒருத்தரையும் காணவில்லை.
- ஊடகத்திடம் தைரியமாகப் பேசுகிறீர்கள், இன்றைக்கு வந்து நீங்கள் சாட்சியமளித்ததிருக்கிறீர்கள். இதனால் பின்விளைவுகள் ஏதாவது வரும் என்று அச்சமடைகிறீர்களா?
இல்லை இல்லை எனக்கு வந்தாலும் பிரச்சினையில்லை. நான் பயப்படவில்லை. வந்தால் எதையும் எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறேன். வாழ வேண்டும் என்ற விருப்பத்துடன் நாங்கள் வாழ்ந்து கொண்டிருக்கவில்லை என இன்றைக்கும் ஆணைக்குழுவுக்கு முன்னிலையிலும்; சொன்னேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக