ஞாயிறு, 19 செப்டம்பர், 2010

தமிழ் மக்களின் பெருமூச்சு

 இலங்கையின் தமிழ் அரசியல் கட்சிகள் இன்று இருப்பதைப்போன்ற படுமோசமான பலவீனமான நிலையில் அவற்றின் வரலாற்றில் முன்னொருபோதுமே இருந்ததில்லை. தமிழ் மக்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகளுக்குப் பரிகாரம் காண்பதற்கு உருப்படியான அரசியல் அணுகுமுறைகளை வகுக்க இயலாமல் இந்தக் கட்சிகள் தடுமாறிக் கொண்டிருப்பதைக் காணக்கூடியதாக இருக்கிறது. உள்நாட்டுப் போரின் பின்னரான காலகட்டத்தில் இலங்கைத் தமிழ்மக்கள் தங்கள் மத்தியில் கட்டுறுதியான அரசியல் சமுதாயம் ஒன்று இல்லாமல் அரசியல் வெற்றிடத்தில் விடப்பட்டிருக்கிறார்கள்
கடந்த பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட தமிழ்க் கட்சிகள் மத்தியில் இருந்து தமிழ் மக்கள் பிரதிநிதிகளைத் தெரிந்தெடுத்திருக்கின்ற போதிலும், மேற்கூறிய அரசியல் வெற்றிடத்தை நிரவக் கூடியதாக பயனுறுதியுடைய அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு தங்களைப் போதுமானளவுக்கு தயார்படுத்த முடியாதவர்களாக அந்தப் பிரதிநிதிகள் இருக்கிறார்கள் என்பதே எமது அபிப்பிராயமாகும்.
போரில் வெற்றிபெற்றதன் விளைவாக சிங்கள மக்கள் மத்தியில் அமோக ஆதரவைக் கொண்டிருக்கும்  மகிந்த ராஜபக்ஷவின் அரசாங்கம் மிகவும் பலம் பொருந்தியதாக மாத்திரமல்ல, தீவிர சிங்கள பௌத்த தேசியவாத சக்திகளின் கடுமையான செல்வாக்கிற்கு உட்பட்டதாகவும் விளங்குகிறது. சிறுபான்மை இனத்தவர்களின் நியாயபூர்வமான அரசியல் அபிலாசைகளில் எந்தவொன்றையுமே ஏற்றுக்கொள்ளத்தயாரில்லாத இந்தச் சக்திகளை விரோதித்துக்கொள்ளக்கூடிய எந்த நகர்வையுமே ஜனாதிபதி ராஜபக்ஷவின் அரசாங்கம் செய்யப்போவதில்லை.அதனால் தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகளுக்கான தீர்வு தொடர்பில் அணுக முடியாததாக அரசாங்கம் இருக்கிறது.இத்தகைய சூழ்நிலை தமிழ்க்கட்சிகளை திரிசங்கு நிலைக்கு உள்ளாக்கியிருக் கிறது. பலம் பொருந்திய அரசாங்கத்தைப் பகைத்துக்கொள்ளாமல் இணங்கிச் சென்று"பெறக்கூடியவற்றைப்%27 பெறமுயற்சிப்பதுதான் இன்றைய நிலையில் விவேகமான அணுகுமுறையென்று புத்திமதி கூறுகின்ற தமிழ் அரசியல்வாதிகளின் எண்ணிக்கை உண்மையில் அதிகரித்தே காணப்படுகிறது.அத்தகைய அணுகுமுறையை இதுவரையில் கடைப்பிடித்தவர்களினால் உருப்படியாகச் சாதிக்க இயலுமாக இருந்த விடயங்களின் பட்டியல் கவலைக்குரியவகையில் மிகவும் குறுகியதாகவே இருக்கிறது. அரசாங்கத்தைப் பொறுத்தவரை, தமிழ் மக்களின் அரசியல் பிரதிநிதிகளுடன் அல்ல, அந்த மக்கள் மத்தியில் அதன் முகவர்களாகச் செயற்படக்கூடியவர்களுடனேயே ஊடாட்டங்க ளைச் செய்வதில் நாட்டம் கொண்டிருக்கிறது.
இனத்துவ அடையாளத்துடன் சிறுபான்மை இனத்தவர்கள் அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுப்பதை ராஜபக்ஷவும் அவரது அரசாங்கமும் விரும்பவில்லை என்பது வெளிப்படையானது.ஆனால், அத்தகைய இனத்துவ அடையாள அரசியலை நோக்கி சிறுபான்மையினத்தவர்களைத் தள்ளிவிட்ட படுமோசமான பாரபட்சங்களுக்கும் அடக்குமுறைகளுக்கும் காரணமான பேரினவாத அரசியல் முன்னரை விடவும் கூடுதலான அளவுக்கு தன் முனைப்புடன் இன்று தென்னிலங்கையில் ஆதிக்கம் செலுத்துகிறது. இலங்கையில் சிங்களத் தேசியவாதமும் தமிழ்த் தேசியவாதமும் பரஸ்பரம் ஒன்றை ஒன்று போஷித்து வளர்த்து வந்திருக்கின்றன. இறுதியில் போரில் வெற்றிபெற்ற சிங்களத் தேசியவாதத்தின் ஆணைகளுக்குத் தமிழ்த் தேசியவாதம் அடிபணிய வேண்டுமென்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுவே இனத்துவ அடையாளத்துடனான அரசியலை சிறுபான்மை இனத்தவர்கள் இனிமேல் முன்னெடுப்பது பொருத்தமானதல்ல என்ற வாதத்தின் பின்னணியில் இருக்கக் கூடிய தர்க்கமாகும்.
ஒருபுறத்தில், தமிழ்த் தேசியவாதத் தலைமைத்துவங்களின் தவறான அரசியல் நிலைப்பாடுகளும் போராட்டத் தந்திரோபாயங்களும் மறுபுறத்தில், பல தசாப்தங்களாகப் பாரபட்சங்களுக்கும் ஒடுக்குமுறைகளுக்கும் உள்ளாக்கப்பட்டு வந்த தமிழ் மக்களின் நியாயபூர்வமான அரசியல் அபிலாசைகளை மதிக்கத்தவறிய அரசாங்கங்களின் போக்கும் அந்த மக்களை இன்றைய பரிதாபகரமான நிலைக்குக் கொண்டுவந்து விட்டிருக்கின்றன. போர் முடிவுக்கு வந்தாலும் தமிழ் மக்களின் பிரச்சினைகள் முடிவுக்கு வரவில்லை. அவர்களின் நியாயபூர்வமான அரசியல் அபிலாசைகள் பூர்த்திசெய்யப்பட வேண்டியிருக்கின்றன. உள்நாட்டுப் போருக்கு வழிவகுத்த அடிப்படை அரசியல் காரணிகளை இல்லாமற் செய்வதற்கான அரசியல் செயன்முறைகள் தாமதமின்றி முன்னெடுக்கப்பட வேண்டியவையாக இருக்கின்றன. ஆனால், அதில் அரசாங்கத்துக்கோ, தென்னிலங்கை அரசியல் சமுதாயத்துக்கோ எந்தவிதமான அக்கறையுமே இன்று இல்லை. அரசியல் தீர்வு நோக்கிய பயனுறுதியுடைய அரசியல் செயன்முறைகள் முன்னெடுக்கப்படாத பட்சத்தில் இன்று வடக்கு, கிழக்கில் காணப்படக் கூடியதாக இருக்கின்ற அமைதி வெறுமனே மயான அமைதியாகவே இருக்கமுடியும்.
நிலைவரம் வேண்டி நிற்பதற்கேற்ப தங்களுக்கு இருக்கக் கூடிய வரலாற்றுப் பாத்திரத்தை தன்னுறுதியுடனும் அரசியல் துணிச்சலுடனும் வகிப்பதற்குத் தங்களைத் தயார் செய்யும் முயற்சிகளில் போதுமான அளவுக்குத் தமிழ் அரசியல்வாதிகள் அக்கறை காட்டவில்லை என்பதும் கடந்த கால அனுபவங்களிலிருந்து பெறக்கூடியதாக இருக்கும் முறையான படிப்பினைகளை அடிப்படையாகக் கொண்டு ஆரோக்கியமான அணுகுமுறைகளை வகுப்பதில் அக்கறை காட்டுவதாக இல்லை என்பதுமே எமது கவலையாகும். தமிழ் மக்களின் இன்றைய அவலநிலைக்கு பெருமளவுக்குக் காரணமாயிருந்த வெளிச்சக்திகளையே இன்னமும்கூட நம்பிச் செயற்படுவதில் தமிழ் அரசியல்வாதிகள் அக்கறைகொண்டிருப்பது துரதிர்ஷ்டவசமானதாகும். போருக்குப் பின்னரான காலகட்டத்தில் அரசியல் தீர்வொன்றின் அவசியத்தை அரசாங்கம் புரிந்து கொள்வதற்கு நிர்ப்பந்திக்கக் கூடிய வலுவான அரசியல் சக்திகள் தங்கள் மத்தியில் இல்லையென்ற குறை நீங்குவதற்கு எவ்வளவு காலம் செல்லுமோ என்று ஏங்கிய வண்ணம் தமிழ் மக்கள் பெருமூச்சு விட்டுக்கொண்டிருக்கிறார்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக