சனி, 25 செப்டம்பர், 2010

இலங்கை கடற்படை மீது மரைன் போலீசார் வழக்கு

ராமேஸ்வரத்திலிருந்து மீன்பிடிக்க சென்ற மீனவர்களை, தாக்கிய இலங்கை கடற்படையினர் மீது, மரைன் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இலங்கை கடற்படையினர் நடுக்கடலில் நடத்திய துப்பாக்கி சூடு சம்பவங்களில், இதுவரை நூற்றுக்கணக்கான மீனவர்கள் பலியாகி உள்ளனர். கை, கால், கண்களை இழந்து ஊனமாகி வாழ்க்கையை தொலைத்தவர்கள் ஏராளம். இந்திய அரசு அவ்வப்போது இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தினாலும், சில நாட்கள் கட்டுப்பாட்டிற்குள் இருக்கும் இலங்கை கடற்படையினர், மீண்டும் தாக்குதலை தொடர்கின்றனர்.
 இதுவரை பாதிக்கப்பட்ட தமிழக மீனவர்களின் புகார்களை ஏற்று, போலீசார் ஒரு வழக்கு கூட பதிவு செய்ததில்லை. இந்நிலையில், கடந்த செப்., 20 ல் ராமேஸ்வரத்திலிருந்து மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் நள்ளிரவில் நடத்திய வெறித்தாக்குதலில், தங்கச்சிமடம் மீனவர்கள் கேபா(25), டொமினிக்(43) ஆகியோருக்கு வலது மற்றும் இடது முழங்கையில் முறிவு ஏற்பட்டது. மீனவர்கள் ஆரோக்கியராஜ், ஆரோக்கிய ஆசாத், குமார், சுகந்தன், முருகேசன் மற்றும் சின்னத்தம்பி ஆகியோருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. மீனவர் கேபாவிடம் விசாரித்த ராமநாதபுரம் மரைன் போலீஸ் டி.எஸ்.பி., தியாகராஜன், தமிழக மீனவர்களை தாக்கிய இலங்கை கடற்படையினர் மீது வழக்குபதிய உத்தரவிட்டார். இதை தொடர்ந்து மண்டபம் மரைன் போலீசார், இலங்கை கடற்படையினர் மீது இ.பி.கோ.147, 448, 324, 392, 427ஆகிய பிரிவுகளின் கீழ் கூட்டமாக தாக்குதல், கொடுங்காயம் ஏற்படுத்தும் ஆயுதங்களால் தாக்குதல் போன்ற குற்றத்திற்காக வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக