ஞாயிறு, 7 நவம்பர், 2010

ஈழத்தமிழா இனியாவது திருப்பிப்போடு தீபாவளியை ....

நேற்றய போராளி அரக்கனாக்கப்பட்டான் தீபாவளி வந்தது… இன்றய போராளி பயங்கரவாதியாக்கப்பட்டான்.. இனி என்ன வரும்…


அன்பான ஈழத்தமிழா தீபாவளி வாழ்த்துக்கள் கூறத்தொடங்கிவிட்டாயா நீ வாழ்க.. உனக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்..



உன்னிடம் கேட்க இருக்கிறது சில தீபாவளி கேள்விகள்..


தீயவனை கொன்றதற்காக கொண்டாடப்படுகிறது தீபாவளி என்கிறாயே.. தீபாவளி கொண்டாடப்படும் நாடுகளின் ஆட்சியிலும், அதிகாரத்திலும் நரகாசுரனைவிட நல்லவர்களா இருக்கிறார்கள் என்று என்றாவது உன் நெஞ்சைத் தொட்டு கேட்டிருப்பாயா.. இருந்தால் ஏற்று விளக்கை..


நரகாசுரன் அப்பாவி மனிதர்களைக் கொல்லத்தெரியாதவன்.. தாமே உயர்ந்தவர்கள் என்று அட்டகாசம் போட்ட தேவர்களுக்கு எதிராக போரிட்டவன்.. மக்களை கொன்றறியாத அவனைவிட மக்களை கூண்டோடு கொன்றொழிப்பதே அதிகாரம் என்று சொல்லும் இன்றைய மனிதக் கொடியவர்களுக்கு முன்னால் நரகாசுரனை ஒரு கொடியவன் என்று கூறி தீபமேற்றுகிறாயே உன் தீபத்தால் எந்த இருளை விலத்துகிறாய்.. சிந்தித்துப்பார் ..


நரகாசுரனை கொன்ற கடவுளுக்கு நன்றி சொல்ல ஆலயம் ஓடுகிறாயா .. ஓடு.. அதற்கு முன் உன்னிடம் ஒரு கேள்வி கடவுள் மக்களை காப்பாற்றவா நரகாசுரனை கொன்றார் ? இல்லை.. தேவர்களைக் காக்கவே கொன்றார்… அதிகார வர்க்கத்தில் இருப்பவர்களுக்காக போராடிய கடவுள்.. என்றாவது மக்கள் பக்கம் நின்றதாக அறிந்திருந்தால் ஓடிப்போ தீபமேற்று..


அன்று பணம் இல்லாதபோது கடவுள் இல்லை என்று முழங்கினார்கள் சில தமிழக தலைவர்கள்.. தீபாவளி தமிழன் பண்டிகை இல்லை என்றார்கள்.. ஆனால் அவர்கள் வரலாற்றை தட்டிப்பார்.. தீபாவளிக்கு திரைப்படம் வெளியிட்டு வருமானம் தேடும்போது நரகாசுரனின் மரணத்தில் அவர்கள் புகழும் பணமும் தேடினார்கள்.. நரகாசுரனுக்காக வாதாடிய இந்தப் போலி வக்கீல்களை என்றாவது நீ அடையாளம் கண்டிருக்கிறாயா.. ?


உலகம் முழுவதும் நீதிகேட்டு ஊர்வலம் போனாய்.. உன்னை நீயே தீயிட்டு கொழுத்தினாய்.. ஒரு வாய் தண்ணீர் குடிக்காமல் உயிர் நீத்துக் காட்டினாய்.. அந்த நரகாசூரன் இருந்திருந்தால் உனக்காக ஓடி வந்திருப்பான் என்பதை எண்ணிப்பார்க்க மறந்துவிட்டாயே.. இத்தனை நடந்த பிறகும், இந்தக் கொடியவர்களைவிட நரகாசுரன் ஒரு பெரிய கொடியவனாக உனக்கு தெரிகிறானே.. தமிழா உன் அறிவும் ஒப்புமையும் வாழ்க..


கரிய உருவம், தொப்பை வயிறு, வேட்டைப்பற்கள், இறைச்சி தின்னும் மாமிசன் என்று அவனை கோரமாக வரைந்தவன் யார்.. பக்கத்தில் இருந்து பார்த்தா வரைந்தான் அந்தப் பரதேசி என்று கேட்டுப்பார்க்க உன் அறிவுக்கு என்றாவது ரோசம் வந்திருக்கிறதா எண்ணிப்பார்..


இத்தனை காலமாக தீபாவளியை ஒளிப்படுத்த உயிர் கொடுத்த உத்தமனாக நரகாசுரனை மாற்றிக்காண ஏன் காண மறுத்தாய்.. ?


வெள்ளை நிற அரக்கனை எந்தக் கதையிலாவது நீ படித்திருக்கிறாயா? கறுப்பனென்றால் அரக்கனாகிவிடுவானென்று கன்னங்கரிய இயேசுக்கிறீத்துவே வெள்ளையனாக்கப்பட்டு வெளிநாட்டு சிலுவையில் தொங்குகிறானே.. ஏனென்று கேட்டுப்பார்த்தாயா.. ?


நேற்றய போராளி அரக்கனாக்கப்பட்டான் தீபாவளி வந்தது… இன்றய போராளி பயங்கரவாதியாக்கப்பட்டான்.. இனி என்ன வரும்… நூறு ஆண்டுகளுக்குப் பிறகு உன் உறவுகளையே அரக்கர்களாகவும் பயங்கரவாதிகளாகவும் நீயே கருதி அவர்கள் அழிவுக்கு தீபாவளி வாழ்த்துக் கூறுவாய்..


புதுமாத்தளனுக்குப் பிறகு தீபாவளியை திருப்பிப் போட வேண்டிய நிலையில் இருக்கிறான் ஈழத் தமிழன்..


புரட்டிப் போட்ட புரட்சித் தீபாவளி வாழ்த்துக்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக