செவ்வாய், 4 ஜனவரி, 2011

கரும்புலியாய் வாழ்ந்து, கரும்புலியால் வாழ்ந்து., கரும்புலிகளோடு வாழ்ந்து

புலனாய்வு வழிமுறையில் எதிரிகளைச் செயலிழக்கச் செய்வது பற்றியே அவனது சிந்தனை சுழலும். அவனுடைய எண்ணம் முழுவதும் கரும்புலிகளும், அவர்களது வெற்றிக்குத் தேவையான திட்ட நகர்வுகளுமே நிறைந்திருந்தன.அவன் இன்னமும் வாழ்ந்து சாதித்திருக்க வேண்டியவன். தமி...ழீழத்தின் திறவுகோல்களாய் அமைந்திருக்கக்கூடிய இராணுவ வெற்றிகளை நோக்கியே அவனது படையப்புலனாய்வுச் செயற்பாட்டுக்காலச் சிந்தனைகள் இருந்திருக்கும். அதற்கான அறிவும், ஆற்றலும், பட்டறிவும் அவனிடம் இருந்தது.
மன்னாருக்கான முதன்மைச் சாலையில் எதிரியின் தாக்குதல் நடைபெறலாம், என்ற கணிப்பை முன்கூட்டியே அறிக்கையாகக் கொடுத்த சாள்ஸ் அதே சாலையில் எதிரியின் கிளைமோர் தாக்குதலுக்கு உள்ளாகிவிட்டான். ஆபத்திருப்பது தெரிந்தும் அவ்விடத்தை நோக்கி அவனை பயணிக்க வைத்த சக்தி எது? அது விதியின் கொடிய கரமா?
இல்லை. அவனால் வழிநடத்தப்பட்ட போராளிகள் தொடர்புபட்ட பணி. தாயக மண்ணிலிருந்து வெகுதூரம் சென்று எதிரியின் கோட்டைக்குள் நிலைபெற்று நின்றார்கள் அவர்கள். அவர்களது நிலையை அவன் அறிவான். அவர்களது துடிப்பை…, அவர்களுக்கான நெருக்கடியை…, அவர்களைச் சுற்றி எதிரிகளின் விய+கத்தை…, அவன் அறிவான். – நெருக்கடி ஒன்றின் பின்னால் அவர்களுக்கு தனது வழிநடத்தலின் தேவையை – அவன் அறிவான்.
எதிரியின் தலைமை மையத்தினுள் நெருக்கடிக்குள் உறைந்திருக்கும் இளைய போராளி ஒருவனுக்கு – தனது பொறுப்பாளரின் குரல் – எப்படி இருக்கின்றாய்? என்ற விசாரிப்பு – உனக்கு ஏதாவது தேவையா? என்ற கனிவான கேள்வி – எப்படியாவது செய்யத்தான் வேண்டும் என்ற கறாரான அறிவுறுத்தல் – என்பன அவனை முடுக்கி, இயக்கி விடும் மந்திரங்கள் என்பதை அவன் அறிவான்.
அந்தத் தேவை – அந்தக் கட்டாயக் கடமை – அவனை மன்னாரை நோக்கிப் பயணிக்க வைத்தது. காலம் அவனுக்கிட்ட கடமை பாதுகாப்பு நோக்கிய சிந்தனையைப் புறந்தள்ளி, அவனை மன்னாரை நோக்கிப் பயணிக்க வைத்தது.
சாள்ஸ் ஒரு இளம் செயற்பாட்டுக்கள வீரனாக கொழும்பில் நின்ற காலத்தில் திட்டத்திற்குத் தெரிவுசெய்த கரும்புலி பிசகியபோது தானே கரும்புலியாய்ச் செல்லும் தயார் நிலையில் நின்றான். தனது பணிமுடிக்க உச்ச அர்ப்பணிப்பின் தயாரான நிலை அது. அந்த நிலையிலேயே இப்போதும் தன் பணிமுடிக்க ஆபத்தைப் புறம்தள்ளி முன்நகர்ந்தான்.
வெடிமருந்து வாகனத்தில் கரும்புலியுடன் தயாராகப் போகையில் எதிர்பாராமல் இலக்குவர, ~வெடிக்கவை| என்ற சாள்சின் கட்டளையைப் புறக்கணித்து அன்று அந்தக் கரும்புலி சாள்சை எம்மிடம் அனுப்பி வைத்தான். ~இந்த வேலை தொடர்ந்து நடக்கவேணும்| என்ற அந்தக் கரும்புலியின் வார்த்தையை மெய்யாக்கி அதற்காக வாழ்ந்தான். மாவீரனாகி அவர்களோடு கலந்துவிட்டான்.
கரும்புலியாய் வாழ்ந்து…………, கரும்புலியால் வாழ்ந்து…………., கரும்புலிகளோடு வாழ்ந்து…………, கரும்புலிகளுக்காக வாழ்ந்து…………, இறுதிவரை கரும்புலிகளோடு கலந்திருந்தான். கரும்புலிகள் கண்ட தமிழீழ தேசத்தின் விடுதலைக்கனவு நனவாகி சரித்திரத்தின் நாயகனாக வாழ்வான் சாள்ஸ்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக