வெள்ளி, 12 மார்ச், 2010

பாரிய படைத்தளம்!

முல்லைத்தீவு மாவட்டத்தின் கேப்பாபுலவை மையப்படுத்திய இரண்டாயிரத்து ஐநூறு ஏக்கர் நிலப்பரப்பில் சிறீலங்காப் படையினரின் கூட்டுப்படைத்தளம் அமைக்கும் நடவடிக்கை குறித்த தகவல்கள் வெளியாயுள்ளன. வற்றாப்பளை புதுக்குடியிருப்பினை ஒன்றிணைக்கும் வீதியினை அண்மித்து அமைந்திருக்கும் கொண்டமடு, உடையாவெளி, வாவியடி, கேப்பாபுலவு, சூரிபுரம், சீனியாமோட்டை ஆகிய கிராமங்களை ஆக்கிரமித்தே இப் படைத்தளம் அமைக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றன. தமிழீழ விடுதலைப்புலிகளின் விமான ஓடு தளத்தினை உள்ளடக்கியதாக அமைக்கப்பட்டுவருகின்ற இக் கூட்டுப் படைத்தளத்தின் உள்ளேயே மாவட்டத்தின் தரைப்படைத் தலைமையகமும் அமைக்கப்பட்டுவருகின்றது. தமிழீழ விடுதலைப் புலிகளின் வன வளப் பாதுகாப்பு பிரிவினால் அமைக்கப்பட்ட தேக்கந் தோப்புப் பகுதியில் சிறீலங்காப் படையினருக்கான சிறப்பு சுற்றுலா விடுதி அமைக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. தேக்கம் தோட்டம் 200 ஏக்கர் விஸ்தீரணம் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது. புதுக்குடியிருப்பில் இருந்து கேப்பாபுலவு நோக்கிய நந்திக்கடலை அண்மித்த நிலப்பரப்பில் உலங்கு வானூர்தி இறங்கு தளமும், தரைப்படையினருக்கான பயிற்சி முகாமும் அமைக்கப்பட்டுவருவதாக குறிப்பிடப்படுகின்றது. குறிப்பிட்ட ஐந்து கிராமங்களினையும் உள்ளடக்கிய ஆக்கிரமிப்பால் 300 குடும்பங்களைச் சேர்ந்த 2000 இற்கும் மேற்பட்ட மக்கள் வாழ்விடம் உட்பட்ட தமது அடுத்த கட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்பதில் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்ளும் அபாய நிலை ஏற்பட்டுள்ள அதேவேளை குறிப்பிட்ட பகுதிகளை அண்மித்த பகுதிகளில் பாரிய வயல் வெளி காணப்படுகின்றமையால் புதுக்குடியிருப்பு, வற்றாப்பளை ஆகிய அயற்கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகளின் விவசாய நடவடிக்கைகள் பாதிக்கப்படுகின்றன. இதற்கு அண்மித்த பகுதிகளிலேயே அச்சலாவயல், கள்ளியடி போன்ற வயற்பரப்புக்கள் காணப்படுகின்றன. இதே போன்று கொண்டை மடுப் பிரதேசம் வன்னியில் மிகத் தொன்மை வாய்ந்த விவசாய நிலம் ஆகும். இதனைவிடவும் சீனியா மோட்டைக் குளத்திற்கு மேற்குப் புறமாக உள்ள வயல்வெளியில் வற்றாப்பளையைச் சேர்ந்த மக்களுக்குச் சொந்தமான நூறு ஏக்கர் வரையான வயல்ப்பரப்புக்கள் காணப்படுகின்றன. நந்திக்கடலை சமாந்தரமாகக் கொண்டதாக இக் கூட்டுப்படை முகாம் அமைக்கப்பட்டு வருகின்றமையால் நந்திக்கடலை நம்பி மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுவருகின்ற மீனவக்குடும்பங்கள் பெரும் நெருக்கடிகளை எதிர்கொள்ளவுள்ளனர். நந்திக்கடலுக்கு மறுபக்கம் முல்லைத்தீவு அதன் அருகான வட்டுவாகல், முள்ளிவாய்க்கால்கள், இரட்டை வாய்க்கால் மற்றும் புதுக்குடியிருப்பின் காட்டந்தோனியார் கோவிலை உள்ளடக்கிய மல்லிகைத்தீவுக் கிராமமும் அமைந்திருக்கின்றன. குறிப்பிட்ட பகுதிகளாலும் மீன்பிடித் தொழில் வன்னி மீனவர்களால் பாரிய அளவில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. வன்னியில் பாரிய இறால் உற்பத்தி குறிப்பிட்ட நந்திக்கடல் பரப்பிலேயே அதிகளவில் இடம்பெற்று வருகின்றமை தெரிந்ததே. இதேபோன்று படையினரின் புதிய ஆக்கிரமிப்பு பாதுகாப்பு வலயப்பகுதி வன்னியின் பெருமளவான கால்நடைகளின் மேய்ச்சல் நிலமாகவும் விளங்கிவருகின்றமை மிக முக்கிய விடயமாகும். ஆயிரக்கணக்கான எருமைகள், மற்றும் பசுக்கள் குறிப்பிட்ட பகுதிகளிலேயே பட்டிகளாக வளர்க்கப்பட்டு வருகின்றமை இன்னொரு முக்கிய விடயமாகும். இந்தப் படை ஆக்கிரமிப்பு முப்படை கூட்டுப்படைத்தளம் காரணமாக விவாசயம், மீன்பிடி, கால்நடை வளர்ப்பு என்பன பாரிய நெருக்கடிக்கு உட்படுவதற்கான அபாய சூழல் எதிர்கொள்ளப்பட்டுள்ளது. இதேவேளை இந்தக் கிராமங்களை உள்ளடக்கிய நான்கு வணக்கத்தலங்கள், பாடசாலை ஒன்று, முன்பள்ளிகள் நான்கு உட்பட்டவையும் செயலிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. குறிப்பிட்ட நிலப்பகுதிகள் அனைத்து தொழில்களுக்கும் பொருத்தமானதாகையால் அந்தப் பகுதி மக்கள் வேறு இடங்களில் தமக்கான சொத்துக்களையோ நிலங்களையோ தேடிக்கொள்ள முயலவில்லை. குறிப்பிட்ட பகுதிகளிலேயே காலங்காலமாக வாழ்ந்து நில ஆக்கிரமிப்புப் போரின் தொடராக இடம்பெயர்ந்து தமது உறவுகளையும் உடைமைகளையும் தொலைத்து தற்போது முட்கம்பி முகாம்களில் முடக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. புதுக்குடியிருப்பையும் வற்றாப்பளையினையும் இணைக்கும் பிரதான வீதி முல்லைத்தீவு ஊடாகவே உள்ளது. ஆனாலும் முல்லைத்தீவு ஊடான பயணத்தினை விடவும் மிகக் குறைந்த தூரத்தில் கேப்பாபுலவு ஊடான வீதி மக்கள் பயன்பாட்டில் இதுவரையில் இருந்து வந்தது. வற்றாப்பளை அம்மன் கோவில் பெருவிழாவில் கலந்துகொள்வதற்கு மக்கள் குறிப்பிட்ட வீதியினையே பயன்படுத்தி வந்திருந்தனர். இனிவருங்காலங்களில் அந்தக் கிராமங்கள் ஊடான போக்குவரத்து கனவில் தான் சாத்தியப்படும் என முதியவர் ஒருவர் கவலை வெளியிட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக