வெள்ளி, 12 மார்ச், 2010

அவசரகால சட்டத்தை நீக்குமாறு கனடா கோரிக்கை! மனிதஉரிமைகள் கடுமையாக மீறப்படுவதாக அமெரிக்கா காட்டம்!!

சிறிலங்காவில் அமுலில் இருக்கும் அவசரகால சட்டத்தை நீக்குமாறு கனடா அரசு கேட்டுள்ளது. இதேவேளை மனிதஉரிமைகள் மீறல்களை முடிவுக்கு கொண்டுவருமாறு அமெரிக்க அரசு சிறிலங்கா அரசை கேட்டுள்ளது. அவசரகால சட்டத்தை நீக்கினால் இரகசிய முகாமில் தடுத்துவைக்கப்பட்டுள்ள 10 000 இற்கும் மேற்பட்ட விடுதலைப்புலிகள் சந்தேக நபர்களை விடுவிக்கவேண்டிவரும் என சிறிலங்கா அமைச்சர் ஒருவர் முன்னர் கருத்துவெளியிட்டிருந்தார். கனடாவின் வெளிநாட்டலுவல்கள் நாடாளுமன்ற செயற்குழு செயலர் தீபக் ஒபராய் மேற்கண்ட கருத்தை சிறிலங்காவின் உயர் ஸ்தானிகருக்கு தெரிவித்துள்ளார். கொழும்பில் சிறிலங்காவின் உயர் ஸ்தானிகரை சந்தித்த ஒபராய் அவசரகால சட்டத்தை உடனடியாக நீக்கவேண்டும் என கேட்டுக்கொண்டார். அத்துடன் தமிழ் மக்களின் தேவைகளை நிறைவுசெய்ய கூடிய செயல் திட்டங்களை முன்னெடுக்கவேண்டும் எனவும் அரச சார்பற்ற நிறுவனங்களின் சேவைகளை தடுக்கவேண்டாம் எனவும் கேட்டுக்கொண்டார். இலங்கைத்தீவில் நடைபெற்றுவந்த போர் முடிவுக்கு வந்தநிலையில் 300 000 தமிழ் மக்களை கொண்ட கனடா நாடு தமிழ் மக்களைபற்றிய விடயங்களில் கவனம் செலுத்த தொடங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை மனித உரிமைகளை பேணி பாதுகாப்பதில் சிறிலங்கா அரசு தவறியுள்ளதாக இன்று வெளியிடப்பட்ட அமெரிக்காவின் வருடாந்த மனித உரிமைகள் அறிக்கை தெரிவிக்கின்றது. கடந்த வருடம் முழுவதும் அரச ஆதரவு துணைப்படைகளும் பாதுகாப்பு படைகளும் பொதுமக்களுக்கு எதிராக ஆயுத வன்முறை பிரயோகித்துள்ளனர் எனவும் சித்திரவதைகள் கடத்தப்படுதல் தடுத்துவைத்தல் மற்றும் கடத்திவைத்து பணம் பறித்தல் ஆகிய வன்முறைகளில் ஈடுபட்டிருந்தனர். எனினும் அவர்களுக்கு எதிராக எந்தவிதமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டதாக அறியமுடியவில்லை. இவ்வாறான மனித உரிமை மீறல்களை தடுப்பதற்காக சிறிலங்கா சட்டமைப்பின்படி அமைக்கப்படவேண்டிய மனித உரிமை கமிசன்களையோ அல்லது இலஞ்ச தடுப்பு கமிசன்களையோ அல்லது காவல்துறை கமிசன்களையோ அல்லது நீதிமன்ற கமிசன்களையோ அமைப்பதை தடுத்துவந்திருக்கிறது. அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது அரசப்படைகளும் அதன் துணைப்படைகளும் பலரை சட்டத்திற்கு புறம்பான முறையில் கொன்றுள்ளதாக பல தகவல்கள் தெரிவிக்கின்றன. ஊடகவியலாளர்கள் செயற்படமுடியாத சூழ்நிலையை ஏற்படுத்தி ஊடக அடக்குமுறையை தொடர்ந்தும் பின்பற்றிவந்துள்ளது எனவும் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விடுதலைப்புலிகளின் இறுதிக்கட்ட போர் நடவடிக்கைகளையும் விமர்சித்துள்ள இவ்வறிக்கை சிறிலங்கா அரசாங்கத்தின் தொடர்ச்சியான அடக்குமுறைகளை கடுமையான முறையில் வெளிப்படுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக