செவ்வாய், 6 ஏப்ரல், 2010

பெண்கள் எதிர்கொள்ளும் அவலம்

வன்னி வதை முகாமில் இருந்து தங்கள் வாழ்விடங்களில் மீள்குடியமர்த்தம் செய்யப்பட்ட தமிழக் குடும்பங்களில், ஆண் உறுப்பினர் அற்ற குடும்பத்துப் பெண்கள் பல சங்கடங்களை எதிர்கொண்டு வருகின்றனர். ஈழத் தமிழர்கள் மீது சிறிலங்க அரசு தொடுத்த இனப்படுகொலைப் போரில் தங்கள் குடும்பத்து ஆண் உறுப்பினர்களை இழந்த குடும்பத்துப் பெண்கள் பாதுகாப்பற்ற ஒரு சூழலிலேயே வாழ்ந்து வருகின்றனர். ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் அளிக்கப்பட்ட 15 தகரங்களைக் கொண்டு பாதுகாப்பான தற்காலிக வீடுகளை அமைத்துக்கொள்ளக் கூட முடியாத நிலையில், அவர்களுக்கு கழிப்பிட வசதியில்லாத காரணத்தினால், இரவு வரை காத்திருந்து தாவரங்கள் அடர்ந்த வனப் பகுதிக்குச் சென்று - ஒரு ஆபத்தான சூழலில், தனிமையை காப்பாற்றிக் கொண்டு நிறைவேற்றிக் கொள்கின்றனர். இதுமட்டுமின்றி, தாங்கள் வாழ்ந்த பகுதியில் மீள் குடியேற்றம் செய்யப்பட்ட மக்களை அங்கு முகாம் அமைத்துள்ள இராணுவத்தினரும், காவல் துறையினரும் மறு விசாரணை என்ற பெயரில் அலைக்கழிக்கின்றனர். இவை யாவும் வன்னி முகாமில் முழுமையாக செய்து முடிக்கப்ட்டப் பின்னரே அவர்கள் விடுவிக்கப்பட்டு, மீள் குடியமர அனுப்பி வைக்கப்பட்டனர். ஆனால், மீ்ண்டும் அவர்களிடம் ‘நீங்கள் புலிகள் இயக்கத்துடன் தொடர்புடையவர்களா’ என்றெல்லாம் கேட்கப்படுவதும், இராணுவ, காவல் துறையினருக்கும் தமிழர்களுக்கும் இடையிலான மொழிப் பிரச்சனையும் இந்த விசாரணையை மேலும் சிக்கலாக்குகிறது. ஆண் துணையற்ற நிலையை விசாரணையின் மூலம் இராணுவத்தினரும், காவல் துறையினரும் தெரிந்துகொள்ளும் நிலையில், தங்களுக்கு மீண்டும் பாலியல் அச்சுறுத்தல் உருவாகுமோ என்ற அச்சமும் இப்படிப்பட்ட பெண்கள் மத்தியில் நிலவுகிறது. நிதியுதவி நிறுத்தம் வன்னி முகாம்களில் இருந்து 1.9 இலட்சம் தமிழர்கள் மீள் குடியமர்த்தம் அல்லது தங்களது உறவினர்களுடன் தங்கிக் கொள்ள அனுமதிக்கப்பட்டு வெளியேற்றப்பட்டுவிட்ட நிலையில், மீள் குடியமர்த்தம் செய்யப்பட்ட குடும்பங்களுக்கு ஐ.நா.வின் அகதிகள் மறுவாழ்வு ஆணையம் அளித்துவந்த நிதியுதவி மார்ச் 8ஆம் தேதியுடன் நிறுத்தப்பட்டுவிட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உள் நாட்டிலேயே இடம் பெயர்ந்த தமிழர்களுக்கு அன்றாட நிவாரண உதவியில் இருந்து மறுவாழ்விற்கு நிதியுதவி வரை செய்துவந்த ஐ.நா. உள்ளிட்ட பன்னாட்டுத் தொண்டு நிறுவனங்களுக்கு அயல் நாடுகளில் இருந்து வரும் நிதியுதவியைப் பெற சிறிலங்க அரசு மறுத்துவிட்டதைத் தொடர்ந்து இந்த நிதிச் சிக்கல் ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக