செவ்வாய், 6 ஏப்ரல், 2010

ஈழத்தமிழ் அகதிகள் மீது தமிழகக் காவல்துறையினரின் துன்புறுத்தல்கள்

தமிழகத்தில் இருந்து சிறீலங்காவுக்கு செல்ல முற்பட்ட ஈழத்தமிழ் இளைஞர்கள் பலரை கைது செய்துள்ள இந்திய கடற்படை அவர்களை தமிழக காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளது. தமிழக காவல்துறையினர் தம்மை தொடர்ந்து துன்புறுத்தி வருவதால் அவர்களின் துன்புறுத்தல்களில் இருந்து தப்பிக்கவே தாம் சிறிலங்கா செல்ல முற்பட்டதாக ஈழத்தமிழ் இளைஞர்கள் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் ஈழத்தமிழ் மக்கள் மீதான துன்புறுத்தல்கள் அதிகரித்து வருவதாகவும், தமிழக காவல்துறையினர் மேற்கொள்ளும் துன்புறுத்தல்களுடன் ஒப்பிடும் போது சிறிலங்கா இராணுவத்தின் துப்பாக்கி குண்டுபட்டு உயிரை விடலாம் எனவும் அவர்கள் ஊடகவியலாளர்களிடம் தெரிவித்துள்ளனர். திருச்சி பகுதியில் உள்ள கரூர் முகாமில் இருந்த ஆறு இளைஞர்கள் படகு ஒன்றை வாடகைக்கு அமர்த்தி சிறீலங்கா செல்ல முற்பட்டிருந்தனர். கடந்த மாதம் 31 ஆம் நாள் அவர்களை ஏற்றிச் சென்ற படகோட்டி நடுக்கடல் பகுதியில் உள்ள மணல் திட்டு ஒன்றில் நள்ளிரவு நேரம் இறக்கிவிட்டு அது சிறீலங்கா என கூறிச் சென்றுள்ளார். ஆனால் அங்கு சிக்கிய இளைஞர்கள் மூன்று நாட்களாக உணவு மற்றும் குடிநீர் இன்றி கடும் துன்பங்களை சந்தித்திருந்தனர். அதன் பின்னர் இந்திய கடற்படையின் சுற்றுக்காவல் படகினை கண்ட அவர்கள், உதவிகேட்டபோது, அவர்களை கைது செய்த கடற்படையினர், காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர். இதேபோல அண்மையில் மற்றுமொரு தொகுதி இளைஞர்கள் சிறீலங்கா செல்ல முற்பட்டபோது இந்திய காவல்துறையினரால் கைது செய்யப்பட்டதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக