வியாழன், 22 ஏப்ரல், 2010

மறக்கடிக்கப்படுகிறதா கிழக்கு?


மே 2009ல் போர் முடிவுக்குவந்த பின்னர் வடபகுதி மாவட்டங்களைத் தன்னகத்தே கொண்ட வன்னியிலிருந்து இடம்பெயர்ந்த ஆயிரக்கணக்கான மக்களுக்கான உதவிகளை மேற்கொள்வதிலேயே அரசுசாரா தொண்டு நிறுவனங்கள் தமது கவனத்தினைக் குவித்திருக்கின்றன. 'வடமாகாணத்தின் வன்னிப் பகுதியில் புனர்வாழ்வு நடவடிக்கைகளை மேற்கொள்வதிலேயே அனைத்துலக சமூகம் தனது கவனத்தினைச் செலுத்துவதால் கிழக்கில் மேற்கொள்ளப்படவேண்டிய புனர்வாழ்வுப் பணிகளுக்கான உதவிகளைப் பெறுவது தொடர்ந்தும் கடினமானதாகவே இருக்கிறது' என உலக நலவாழ்வு நிறுவனத்தினது உடனடி மனிதாபிமான நடவடிக்கைக்கான தொழில்சார் அலுவலர் எட்வின் சல்வடோர் [Edwin Salvador] கூறுகிறார். 'உட்கட்டுமானங்களின் மீள்நிர்மானம், உணவுப் பாதுகாப்பு மற்றும் வாழ்வாதாரம் மற்றும் நலவாழ்வு சேவைகளை உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளைக் கிழக்குவாழ் மக்களுக்கு வழங்குவது சவால் நிறைந்த பணியாகவே இருக்கிறது' என அவர் தொடர்ந்தார். ஐக்கிய நாடுகளுக்கான அகதிகள் உயர் ஆணையத்தின் தகவலின்படி, கிழக்கு மாகாணத்தில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டின் கீழிருந்த பகுதிகள் அனைத்தையும் அரச படையினர் தம்வசப்படுத்தியதைத் தொடர்ந்து அங்கு மோதல்கள் முடிவுக்கு வர 200,000 இடம்பெயர்ந்த மக்கள் மீளக் குடியமர்த்தப்பட்டார்கள். மோதல்களின் போது கடுமையான பாதிப்புக்களுக்கு உள்ளான கிழக்கு மாகாணத்தின் அபிவிருத்தி மற்றும் புனர்வாழ்வுக்கான திட்டங்கள் அறிவிக்கப்பட்டிருந்தது. மட்டுப்படுத்தப்பட்ட மனிதவளம் மற்றும் போதிய நிதி வழங்கல் இன்மை என்பன கிழக்கு மாகாணத்தில் போரினால் பாதிக்கப்பட்ட இந்த மக்களுக்கான நலவாழ்வு சேவைகளை வழங்குவதில் பெரும் தாக்கதினை ஏற்படுத்தியதாக சல்வடோர் கூறுகிறார். 'கிழக்கு மாகாணத்தில் மோதல்கள் முடிவுக்குவர அவசரகால நிவாரணப் பணிகளை மேற்கொண்டுவந்த அனைத்துலக அரசுசாரா தொண்டு நிறுவனங்கள் அனைத்தும், வடக்கில் பெரும் மனிதாபிமான நெருக்கடி ஏற்பட்டதைத் தொடர்ந்து கிழக்கில் தாம் முன்னெடுத்துவந்த வேலைத்திட்டங்களைக் கைவிடவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார்கள். போதிய நிதியினைப் பெறுவதில் ஏற்பட்ட சிரமங்கள் மற்றும் அபிவிருத்திப் பணியினை மேற்கொள்வதில் போதிய அனுபவம் இன்மை என்பனவே இதற்காக காரணம்' என்கிறார் எட்வேட் சல்வற்றோர். கிழக்கு மாகாணத்தில் மோதல்கள் முடிவுக்கு வந்தபோது, சுகாதார சேவைகளுடன் தொடர்புடைய எண்ணற்ற தொண்டு நிறுவனங்கள் தொடக்கத்தில் அங்கு செயலாற்றி வந்ததாகக் கூறும் உலக நலவாழ்வு நிறுவனம் தற்போது Comité d’Aide Médicale [CAM] நிறுவனம் மட்டும் செயல்படுவதாக கூறியுள்ளது. மட்டுப்படுத்தப்பட்ட நிதியுடனிருக்கும் மாகாண நலவாழ்வு திணைக்கள அதிகாரிகளும் சுகாதார அமைச்சினைச் சேர்ந்தவர்களும் கிழக்கு மாகாணத்தில் போரினால் சேதமடைந்த சுகாதார வசதிகளை மீளவும் கட்டியெழுப்பும் பணிகளை முன்னெடுப்பதற்குத் தம்மால் முடிந்தவரை முயன்றுவருவதாக உலக நலவாழ்வு நிறுவனம் தெரிவிக்கிறது. கிழக்கு மாகாணத்தின் பிரதான நகரங்கள் தவிந்த சிறு நகரங்களிலிருக்கும் நலவாழ்வு வசதிகள் பல பத்தாண்டுகளாகத் தொடர்ந்த போரினால் சேதமடைந்து விட்டன. 'இவ்வாறாகச் சேதமடைந்த நலவாழ்வு வசதிகளைப் புனரமைக்கும் பணிகள் மந்த கதியிலேயே இடம்பெற்று வருகின்றன. இதன் காரணமாக தமக்கான மருத்துவ வசதிகளைப் பெறுவதற்காக மீளக்குடியேற்றப்பட்ட மக்கள் நீண்ட தூரங்களுக்குப் பயணிக்கவேண்டி இருக்கிறது' என சல்வற்றோர் தொடர்கிறார். 'இந்தத் தேவையினை நிவர்த்திசெய்யும் வகையில் நடமாடும் மருத்துவ சேவைகள் முன்னனெடுக்கப்பட்டு வந்தாலும், கிழக்கு மாகாணத்தின் பல பகுதிகளிலும் மக்கள் மீளக் குடியமர்த்தப்பட்டிருப்பதால் அனைத்துக் கிராமங்களுக்கும் சென்று நடமாடும் மருத்துவ சேவையினை முன்னெடுப்பது முடியாத காரியமாகவே இருக்கிறது' என கூறுகிறார். இது தவிர, பொருத்தமான நலவாழ்வுப் பணியாளர்களை தேடிக் கண்டுபிடிப்பதும் சவால் நிறைந்த பணியே. கிழக்கு மகாண நலவாழ்வு சேவைகளைப் பொறுத்தவரையில் முக்கியமான பல பதவிகளுக்கு இன்னமும் வெற்றிடங்கள் இருக்கத்தான் செய்கிறது. இதன் விளைவாக தற்போது சேவையிலிருக்கும் மருத்துவர்களும் தாதியர்களும் நிரந்தரமாக ஓரிடத்தில் தரித்திருக்காமல் சுழற்சிமுறையில் பணிசெய்யவேண்டியிருக்கிறது' என உலக நலவாழ்வு நிறுவனத்தினைச் சேர்ந்த எட்வின் சல்வடோர் கூறுகிறார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக