ஞாயிறு, 11 ஏப்ரல், 2010

கைவிட்டுவிடாதீர்கள்……!!!

தனித்தவில் வாசித்தவர்களுக்கு புலித்தமிழர் தகுந்த பாடம் படிப்பித்திருக்கின்றார்கள். தமிழ் தேசியத்திற்கான மக்கள் முன்னணி நாடாளுமன்றத் தேர்தலில் தமிழீழ மக்களால் நிராகரிக்கப்பட்டமையானது சில பாடங்களைக் கற்றுத் தந்துள்ளது. வெறும் கோஷங்களுக்காக தமிழ் தேசியத்தைத் தூக்கிப் பிடித்துக் கொண்டு வந்தவர்களை யாழ்ப்பாணம் மற்றும் திருமலை மக்கள் சரியாகவே இனம்கண்டுள்ளனர். ஒரு சிலரை தோற்கடிப்பதற்காக கூட்டமைப்பின் கட்டமைப்பை உடைத்தவர்கள் இன்று விலாசமில்லாதவர்களாகியுள்ளனர். புலம்பெயர் அமைப்புகள் சிலவற்றின் – குறிப்பாக பிரான்ஸ் தமிழ் சங்கங்கள் கூட்டமைப்பின் – தவறான வழிநடத்தலின் விளைவே கஜேந்திரன்களின் தனிவழிப் போக்குக்கும் அவர்களின் படுதோல்விக்கும் காரணமாகிவிட்டது. அவர்களை உடைத்ததில் காட்டிய அக்கறையை இணைப்பதில் காட்டியிருந்தால் இன்றைக்கு கூட்டமைப்பு இன்னும் மூன்று ஆசனங்களைக் கூடுதலாகப் பெற்றிருக்கும். கடைசிவரை பிரான்ஸ் தமிழ் சங்கங்களின் கூட்டமைப்பு தளத்தில் உள்ள தமிழர்களின் மனநிலையை புரிந்துகொள்ளாமல் போனமையும் கஜேந்திரன்களின் படுதோல்விக்கு வித்திட்டது. அதுசரி..தவறான வழிநடத்தலில் கஜேந்திரன்கள் பிழையாகப் போயிருக்கலாம். இனி அவர்களை சரியான வழியில் பயணிக்க வைப்பது புலம்பெயர் தமிழர்களினதும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினதும் முக்கிய கடமையாகும். தளத்திலுள்ள தமிழர்கள் எங்களுக்கு சரியான பதிலைத் தந்திருக்கின்றார்கள். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கொள்கைகளை தாங்கள் ஆதரிக்கின்றோம் என்றும் அவர்களின் பின்னால் தளத் தமிழர்கள் அணி திரண்டு நின்கின்றார்கள் என்றும் எங்களுக்குச் சொல்லியிருக்கின்றார்கள். இவற்றையெல்லாம் சரிவரப் புரிந்துகொண்டு கஜேந்திரன்களை மீண்டும் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குள் உள்ளீர்ப்பது, பிரித்துவைத்த புலம்பெயர் தமிழர்களின் கடமையாகும். கஜேந்திரகுமார் பொன்னம்பலம் நாங்கள் நேசித்த – எங்களை இறுதி மூச்சுவரை நேசித்த மாமனிதர் பெற்றெடுத்த புதல்வர். அவர் தற்போது பயணிக்கும் பாதை பிழையானது என்று தேர்தலில் மக்கள் தெரிவித்துவிட்டார்கள். இனி அவராக யோசித்து தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து செயலாற்ற முன்வரவேண்டும். பொன்னம்பலங்களின் குடும்பம் தமிழர்களுக்கு நன்மையே செய்துவருகின்றார்கள் என்று தம்பி கஜேந்திரகுமார் நிரூபிக்கவேண்டும். அதற்காகவது பொறுக்கித்தன அரசியலைக்கைவிட்டு – தளத் தமிழர்களின் விருப்புகளை புரிந்து தம்பி செயற்பட வேண்டும் என்பதே அநேக புலம்பெயர் மக்களின் அவா. அடுத்தது செல்வராசா கஜேந்திரன். தேர்தலில் இவரின் பொங்குதமிழ் பாச்சா பழிக்கவில்லை. பொங்குதமிழ் நிகழ்வுகள் நடைபெறத் தானே காரணம் என்று தேர்தல் மேடைகளிலும் பேட்டிகளிலும் முழங்கினார். ஆனால் அவை எடுபடவில்லை. எனினும் பொங்குதமிழ் நிகழ்வுகளின் ஒரு நாயகனாகவே இன்றும் அந்தச் செல்லக்குழந்தையை நாங்கள் பார்க்கின்றோம். ஒரு பல்கலைக்கழக மாணவனாக – பல்கலைக்கழக மாணவர் தலைவராக – தமிழீழ சர்வதேச மாணவர் தலைவராக கஜேந்திரன் அவர்கள் தமிழீழத் தேசியப் போராட்டத்திற்கு பல உதவிகளைப் புரிந்திருக்கின்றார். தற்போது அவர் பிழையான வழிநடத்தலுக்கு உட்பட்டிருக்கின்றார். அவரும் மக்களின் தீர்ப்பை உணர்ந்திருப்பார். இனிமேலாவது தமிழ் தேசியத்தை அவர் வெறும் தேர்தல் கோஷமாக எடுக்கமாட்டார் என்பது உறுதியானது. அவர் இனித் தெளிவடைய வேண்டும். தமிழ் தேசிய மக்கள் முன்னணி என்பதைக் கலைத்துவிட்டு தமிழ் தேசியக் கூட்டமைப்பை மேலும் பலம்பொருந்திய அமைப்பாக - தமிழர்களுக்காக பேரம் பேசும் ஆற்றல் கொண்ட அமைப்பாக மாற்ற கஜேந்திரன்கள் முன்வரவேண்டும் என்பதே எங்களின் எதிர்பார்ப்பு. தமிழ் தேசிக் கூட்டமைப்பின் தலைமையிடம் புலம்பெயர் தமிழர்களாகிய நாங்கள் முன்வைக்கும் ஒரே வேண்டுகோள். கஜேந்திரன்களைக் கைவிட்டுவிடாதீர்கள். அவர்களைச் சரியான பாதையில் பயணிக்கவைப்பதறகாக நீங்கள் கடுமையான முயற்சிகளை மேற்கொள்ளவேண்டும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக