ஞாயிறு, 11 ஏப்ரல், 2010

தேர்தலின் பின் சிறிலங்காவின் அரசியல் நிலைவரம்

அணுசக்தி பாதுகாப்பு தொடர்பான மாநாட்டில் கலந்துகொள்வதற்காக அமெரிக்கா சென்றுள்ள இந்திய பிரதமர் மன்மோகன் சிங், அந்நாட்டு அரசு தலைவர் பராக் ஒபாமாவுடன் சிறிலங்காவின் தற்போதைய அரசியல்நிலைவரம் குறித்து முக்கிய பேச்சுக்களில் ஈடுபடவுள்ளார். இந்த சந்திப்பு நாளை திங்களன்றும் நாளை மறுதினமும் வோஷிங்டனில் இடம்பெறவுள்ளது. சிறிலங்காவில் நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் ஆளும் மகிந்த அரசு கூட்டணிக்கு மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலம் கிட்டக்கூடிய அதிக வாய்ப்பு ஏற்பட்டிருப்பதால், இனிவரும் காலங்களில் சிறிலங்காவில் ஏற்படக்கூடிய அரசியல் மாற்றங்களில் சர்வதேச சமூகத்தின் சக்தி எவ்வகையானதாக இருக்கப்போகிறது மற்றும் அதற்கான சாத்தியங்கள் என்ன என்பது குறித்து இந்த சந்திப்பில் பேசப்படலாம் என்று கொழும்பிலுள்ள இந்திய தூதரக வட்டாரங்கள் தெரிவித்தன. இதேவேளை, சிறிலங்கா நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக தெற்காசிய விவகாரங்களுக்கான அமெரிக்க துணை செயலர் ரொபேர்ட் ப்ளாக் கருத்து தெரிவிக்கையில் - "பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்றுக்கொள்ள விரும்புவதாக ஜனாதிபதி எப்போதும் கூறியிருந்தார். அவ்வாறு பெற்றுக்கொள்வதானது இலங்கையின் அரசியலமைப்பைத் திருத்துவதற்கு அவருக்கு இடமளிக்கும். "13 ஆவது திருத்தத்தை அமுல்படுத்துவதில் தான் உறுதிப்பாட்டுடன் இருப்பதாக அவர் (ராஜபக்ஷ) கூறியுள்ளார். இந்த 13 ஆவது திருத்தமானது மாகாணங்களுக்கு அதிகாரங்களைப் பகிர்ந்தளிக்கும். வடமாகாணம் உட்பட மாகாணங்களுக்கு அதிகாரங்களைப் பகிர்ந்தளிப்பதாக அது அமையும். "நல்லிணக்கம் தொடர்பாக எப்போதும் அவர் உறுதிப்பாட்டுடன் இருப்பதாக நான் நினைக்கிறேன். அதனை இப்போது முன்னெடுப்பது மிகவும் முக்கியமானது என்று நான் நினைக்கிறேன்" - என்று கூறியிருந்தார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக