சனி, 29 மே, 2010

எந்த உறுதிமொழியையும் வழங்கவில்லை =பாலித்த கோகன்ன

இறுதிக்கட்ட போரின்போது சரணடைந்த விடுதலைப்புலிகளின் தலைவர்கள் சுட்டுக்கொலைப்படமாட்டார்கள் என்று தாம் எந்த உறுதிமொழியையும் ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூனின் ஆலோசகர் விஜய் நம்பியாருக்கு வழங்கவில்லை என்று ஐக்கிய நாடுகள் சபைக்கான சிறிலங்காவின் நிரந்தர வதிவிடப்பிரதிநிதி பாலித்த கோகன்ன தெரிவித்துள்ளார்.


சரணடையும் விடுதலைப்புலிகளின் தலைவர்கள் போர்க்கைதிகளாக நடத்தப்படுவார்கள் என்று தனக்கு சிறிலங்காவின் அரச அதிபர் மகிந்த ராஜபக்ச, பாதுகாப்பு அமைச்சின் செயலர் கோத்தபாய மற்றும் பாலித்த கோகன்ன ஆகியோர் தனக்க உறுதிமொழியளித்ததாக விஜய் நம்பியார் அல் ஜஸீரா தொலைக்காட்சிக்கு தெரிவித்தமை குறித்து பாலித்த கோகன்னவிடம் இன்னர் சிற்றி பிரஸ் செய்திநிறுவனம் கேட்டபோது அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இந்த விவகாரத்தில் தனது கருத்தை தெரிவித்துவிட்டதாகவும் ஏனையோர் இருவரிடமும் (மகிந்த மற்றும் கோத்தபாய) இது தொடர்பில் கருத்தை கேட்டறியும் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை என்ற செய்தியை நீங்கள் வெளியிடலாம் என்றும் கோகன்ன தெரிவித்தார் என்று இன்னர் சிற்றி பிரஸ் தெரிவித்துள்ளது.
சரணடைந்த புலிகளின் தலைவர்கள் கொல்லப்படமாட்டார்கள் என்று தன்னிடம் உறுதியளித்ததாக விஜய் நம்பியார் தெரிவித்த ஏனைய இருவரான மகிந்தவிடமும் கோத்தபாயவிடமும் கருத்தை கேட்டறியும் வாய்ப்பு கிடைக்காத காரணத்தினால், அவர்களின் அரசின் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் அண்மையில் நியூயோர்க் சென்றிருந்த சமயம், அவரிடம் இது குறித்து கேட்டறிவதற்கு முற்பட்டபோது -பீரிஸை இன்னர் சிற்றி பிரஸ் செய்தி நிறுவனம் சந்திப்பதற்கு கோகன்ன அனுமதிக்கவில்லை என்று அந்த செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.தேசிய ஊடாக கழகத்திற்கு சென்ற சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சர் பீரிஸ் அங்கு ஊடகவியலாளர்களை சந்திக்காமல் வெளிநடப்பு செய்தமை குறிப்பிடத்தக்கது.வோஷிங்டனில் அமைந்துள்ள தேசிய ஊடக கழகம் 2009 ஆம் சுதந்திர ஊடகவியலாளருக்கான தனது விருதினை படுகொலை செய்யப்பட்ட சிறிலங்காவின் சண்டே லீடர் ஆசிரியர் லசந்தவுக்கு வழங்கியிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக