செவ்வாய், 29 ஜூன், 2010

இந்த நாட்டில் கடைசி தேசப்பற்றாளன் இருக்கும் வரையில் பான் கீ மூனின் குழுவினர் இங்கு கால்பதிக்க இடமளிக்க போவதில்லை-ஹெல உறுமய

உயிரைக் கொடுத்தேனும் பான் கீ மூனின் மூவர் கொண்ட குழுவை நாட்டுக்குள் காலடி வைக்க விடமாட்டோம். இந்த நாட்டின் கடைசி தேசப் பற்றாளன் இருக்கும் வரை பான் கீ மூனின் எண்ணம் ஈடேறாது.


இவ்வாறு ஜாதிக ஹெல உறுமயவின் சட்ட ஆலோசகர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். கொழும்பிலுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான தலைமையகத்திற்கு முன்பாக நேற்று இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.



அவர் மேலும் கூறியவை வருமாறு:


முப்பதற்கும் மேற்பட்ட நாடுகளின் ஆதரவுடனும் உயர்ந்த தொழில்நுட்பங்களையும் பயன்படுத்தி 2001ஆம் ஆண்டில் தலிபான்களுக்கு எதிராக ஆரம்பித்த யுத்தத்தில் ஒரு முடிவும் காணாது அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகள் தத்தளித்துக் கொண்டிருக்கின்றன.


தலிபான்களிடம் விமானங்கள் இல்லை, ஆட்லறிகள் இல்லை. இவையெல்லாம் இருந்த புலிகள் இயக்கத்தை நாம் மூன்று வருடங்களில் தோற்கடித்தோம்.


இந்தப் பொறமை காரணமாகவே இலங்கைப் படையினரைத் தண்டிப்பதற்காக பான் கீ மூனை கைப்பொம்மையாக பாவித்து மேற்கத்தேய நாடுகள் தமது நோக்கத்தை நிறைவேற்ற முனைகின்றன.


பான் கீ மூனிடம் ஒன்றை நாம் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம் “நீங்கள் உலகின் பல்வேறு பகுதிகளிலும் சென்று நினைத்த நோக்கத்தை சாதித்தமை உண்மைதான். ஆனால், இது ஈராக் கிடையாது. இது ஆப்கானிஸ்தான் கிடையாது. இது சூடான் கிடையாது. மாறாக இது தேசப்பற்றாளர்கள் நிறைந்த இலங்கை நாடு என்பதை பான் நீங்கள் மறந்து டாதீர்கள்.”


எம்மைக் காப்பதற்காக 24ஆயிரம் படையினர் தமது உயிர்களை காவு கொடுத்தனர். அத்துடன் 70 ஆயிரம் படையினர் அவயவங்களை இழந்துள்ளனர். அத்தகைய படையினருக்கு நன்றிக்கடன் செலுத்துவதற்கான காலம் எழுந்துள்ளது.


எம்மைப் பாதுகாத்த குற்றத்திற்காக தண்டனைத் தீர்ப்பை எதிர்நோக்கும் எமது படையினரைப் பாதுகாப்பதற்காக உயிர்த்தியாகம் செய்வதற்கு முன்வருமாறு அன்பார்ந்த நாட்டு மக்களைக் கேட்டுக்கொள்கின்றேன்.


ஒருவர் பின் ஒருவர் உயிர் துறந்தேனும் பான் கீ மூனிற்கு காவடியெடுக்கும் மூவரைக் கொண்ட குழு இலங்கைக்கு அடியெடுத்து வைக்க அனுமதிக்க மாட்டோம் என்பதை கூறிவைக்க விரும்புகின்றேன்.


இந்த நாட்டில் கடைசி தேசப்பற்றாளன் இருக்கும் வரையில் பான் கீ மூனின் குழுவினர் இங்கு கால்பதிக்க இடமளிக்க போவதில்லை என எச்சரிக்கின்றேன். இப்படி உதய கம்மன்பில கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக