ஞாயிறு, 22 ஆகஸ்ட், 2010

ஒரு இனத்தின் வாழ்வாதாரப் போராட்டம் இன்னொருவரின் பொழுதுபோக்கு........

அறுபதாண்டுகளுக்கும் மேலாக ஈழத்தில் நடந்துவரும் தமிழ் உரிமைப் போர் கடும் சவால்களை எதிர்நோக்கியிருக்கிறது. இப்போரில் நிகழ்ந்த படுகொலைகளும், இன்றும் இலங்கையின் திரைமறைவில் தொடரும் சுமார் 12000 போராளிகளின் சிறைவைப்பு, அவர்கள் மீதான வன்கொடுமைகள், மக்களின் நிலங்களை அரசு பறித்தல், சிங்களப் பேரினவாத அரசியல் ஆகியன உலகின் உணர்வுள்ள தமிழர்களின் ...மனங்களைச் சொல்லொணாத வேதனையில் ஆழ்த்தி வருவதைக் காண்கிறோம். இந்த வேதனைக்கு மருந்திட வேண்டிய உலகம் மௌனத்தில் ஆழ்ந்திருக்க, ஒரு விளையாட்டு நிறுவனம் வெந்த புண்ணிலே வேலைப் பாய்ச்சுவதுபோன்ற செயலொன்றைச் செய்திருக்கிறது.


பிரான்சைத் தலைமையிடமாகக் கொண்டு உலகின் 21 நாடுகளில் கிளைகளைக் கொண்டு இயங்கிவரும் யுபிசாஃப்ட் (UbiSoft) என்ற நிறுவனம், வரும் 2010 நவம்பர் மாதத்தில் தான் அறிமுகப்படுத்தவிருக்கும் Ghost Recon 4 / “Ghost Recon: Predator” என்ற ஒரு கணினி விளையாட்டில் ஈழத்தைப் போர்க்களமாகக் காட்டி, அதில் ஸ்ரீலங்கா ராணுவத்தைக் கதாநாயகர்களாகவும், தமிழ்ப் போராளிகளைத் தீவிரவாதிகளாகவும் காட்டுகிறது. இந்த நிறுவனம், அங்கு நடந்த இனவழிப்போ அல்லது தொடரும் மனிதவுரிமை மீறலோ குறித்து அறியாமலும் இதைச் செய்திருக்கலாம். அல்லது அறிந்தே இதனைச் செய்யலாம். எப்படி இருந்தாலும், இவ்விளையாட்டை வெளியிட வேண்டாம் என்று அந்த நிறுவனத்துக்கு நாம் ஒவ்வொருவரும் தெரிவிப்பது அவசியம். அவர்களுக்குத் தொலைநகல் அனுப்பலாம், தொலைபேசியில் அழைத்துப் பேசலாம். மின்னஞ்சலைக் காணவில்லை (கண்டுபிடிப்பவர்கள் சொல்லலாம்!). சிங்களப் பேரினவாதிகள் ஏற்கெனவே இந்த விளையாட்டுக்காகத் தங்கள் ஏகபோக ஆதரவை ஆரவாரமாக காட்டத் தொடங்கிவிட்டார்கள்.

இதற்கு முன் இஸ்ரேல்-பாலஸ்தீனம் அல்லது இங்கிலாந்து-வடக்கு அயர்லாந்து குறித்த கணினி விளையாட்டுக்கள் வெளிவரும் முன் எழுந்த சர்ச்சைகளால் அவ்விளையாட்டு நிறுவனங்கள் பின்வாங்கிக் கொண்டன. அவற்றைப் போலவே இந்த விளையாட்டும் வெளியிடப்படக் கூடாது. ஒரு இனத்தின் வாழ்வாதாரப் போராட்டம் இன்னொருவரின் பொழுதுபோக்கு விளையாட்டாக மாறக்கூடாது. உங்கள் நாட்டில் இருக்கும் UbiSoft நிறுவனத்தின் கிளைக்கோ அல்லது பிரான்சில் இருக்கும் தலைமையகத்துக்கோ உங்கள் கண்டனங்களை அனுப்புங்கள். இலங்கை அரசு ஒரு இனவழிப்பு அரசு என்றும், இவ்விளையாட்டு இனவழிப்பை நியாயப்படுத்தும் அநாகரிகச்செயல் என்றும், இவ்வகையான விளையாட்டுக்கள் இனங்களுக்கிடையேயான உறவுகளை மேலும் மோசமடையச் செய்யும் என்பதையும் அவர்களுக்குப் புரியவைப்போம். இன்னும் ஓரிரு மாதங்களில் வெளியாகப்போகும் இந்த விளையாட்டை வெளிவராமல் முடக்குவோம்! விரைந்து செயல்படுவோம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக