சனி, 21 ஆகஸ்ட், 2010

தோல் இருக்க சுளை விழுங்கும்.........

தோல் இருக்க சுளை விழுங்கும் வடிவம். இது என்ன என்று நீங்கள் கேட்கலாம். இதுபற்றி விளங்கப்படுத்துவதை விட, இலங்கை தமிழர் விடயத்தில் அரசின் நடவடிக்கை தான் இது என்று கூறுவது விளக்கம் பெறுவதற்குச் சுலபமாக இருக்கும். அதாவது, தமிழ் மக்கள் கடந்த காலங்களில் பட்டதுன்ப, துயரம் ஏராளம். அந்த துயரம் இன் னமும் முடிந்தபாடாக இல்லை.


யுத்தகாலத்தின்போது எறிகணை, விமானக் குண்டுவீச்சு, பல்குழல்தாக்குதல் என அழிவுநடவடிக்கை தொடர்ந்தது. இதனால் அப்பாவித் தமிழ் மக்கள் பலியாகினர். இவை வெளிப்படையாக நடந்தன. இப்போது யுத்தம் முடிந்துவிட்டது. ஏ-9 பாதை திறக்கப்பட்டதோடு பிரச்சினை தீர்ந்துவிட்டதென மக்கள் நினைக்கலாம்.கூடவே மீள் குடியமர்வு பற்றிய தகவல்களும் வெளிவருவதால் எல்லாம் சரியாகிவிட்டது என்ற நினைப்பும் இருக்கும்.

இந்த நினைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கு கையடக்கத் தொலைபேசி, பிளாஸ்ரிக் பொருட்கள், அப்பிள், அன்னாசி, றம்புட்டான், வீட்டு உபகரணங்கள், வீடுதேடிவரும் தளபாடங்கள், தமிழகத்தின் சாறிவகைகள்... அடேங்கப்பா இதுவல்லவோ அமைதிநிலை, சுமுகநிலை என்ற நினைப்பில் நாம் இருக்கும்வேளையில்,

எங்கள் வன்னி மண்அரச உடைமை என்ற பெயரில் தென்பகுதி வாசிகளின் குடியேற்ற பூமியாக மாற்றப்படுகிறது. இதற்குமேலாக உயர் பதவிகள், நீதிமன்றங்கள், செயலகங்கள் என எங்கும் சிங்களவர் களின் நியமனங்கள். இவற்றையும் தாண்டி இராணுவக் குடியிருப்புத் திட்டங்கள், படை முகாம்களுக்கான இட ஒதுக்கீடுகள்...

நிலைமை இப்படியே நகர தமிழினத்தின் இறைமை, நாடாளுமன்றப் பிரதிநிதித்துவம், பல்கலைக்கழக அனுமதி, தனித்துவம் என அத்தனையும் பறிபோகும்.இந்தப் பரிதாப நிலை வெளியில் உடனடியாக தெரியப் போவதில்லை. இதைத்தான் தோல் இருக்க சுளை விழுங்குதல் என்பர். இலங்கை யில் இந்தப் பண்பாடு தொடரவே செய்கிறது. என்னசெய்வது! தடுப்பது யார்?

மாவிட்டபுரத்து சுண்ணக்கல் அகழ்வில் தொடங்கி கொக்கிளாய் காடழிப்பு வரை நடந்தேறும் சுளை விழுங்கலை அறியாத அப்பாவிகளாக தமிழ் மக்கள் இருப்பது தனக்குள் இருக்கும் புற்றுநோயை அறியாதவரின் நிலையாகவே அமையும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக