புதன், 25 ஆகஸ்ட், 2010

“தமிழனின் கண்ணீர் தலையைக்கொய்யும்”

இராணுவ அதிகாரிகளை நினைத்தபடி பந்தாடவும், அவர்களுக்கு பதவி உயர்வு, பதவி இறக்கம்,கட்டாய ஓய்வு என்று எதையும் செய்யும் வல்லமையைப் பெற்றிருந்தார் சரத் பொன்சேகா. புலிகளை அழிக்கும் தேவைக்கு சரத் பொன்சேகா அவசியமானவர் என்பதால் அவருக்கு இந்த அதிகாரங்களைக் கொடுத்திருந்தது அரசாங்கம். தான் கேட்ட அதிகாரங்கள் அனைத்தும் கிடைத்ததால் அவர் பதவியில் இருந்த போது தலைகால் புரியாமல் நடந்து கொண்டார் என்பது வெளிப்படையான விடயம்.
 குறிப்பாக தனக்குப் பிடிக்காத தனது திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு எதிராக இருந்த அத்தனை அதிகாரிகளையும் சரத் பொன்சேகா ஏதோ ஒரு வகையில் தண்டிக்கத் தவறவில்லை. சரத் பொன்சேகா இராணுவத் தளபதியாக இருந்த நான்கு வருட காலத்தில் 4786 இராணுவ அதிகாரிகளுக்கு எதிராக இராணுவ நீதிமன்ற விசாரணைகள் நடத்தப்பட்டன.


கடந்த வருடம் மே மாதம் அவரை தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடியவர்கள் இன்று அவருக்கு வழங்கிய அத்தனை கௌரவங்களையும் பறித்தெடுத்து விட்டனர். சரத் பொன்சேகா 2005ம் ஆண்டு ஓய்வு பெற்றுச் செல்வதற்கான நாட்களை எண்ணிக் கொண்டிருந்த போது தான் எதிர்பாராமல் அந்த மாற்றம் நிகழ்ந்தது. அப்போது ஜனாதிபதியாகப் பதவியேற்ற மகிந்த ராஜபக்ஸ முதல்காரியமாக சரத் பொன்சேகாவை இராணுவத் தளபதியாக நியமித்து தன்னருகே வைத்துக் கொண்டார். அவர் இராணுவத் தளபதியாகப் பொறுப்பேற்ற போது போர்நிறுத்தம் நடைமுறையில் இருந்தாலும், புலிகளுக்கு எதிரான வெற்றி ஒன்றே அரசாங்கத்தினதும், சரத் பொன்சேகாவினதும் குறியாக இருந்தது. அதற்காக அவர் இராணுவத்துக்குள் எதையும் செய்யலாம் என்றளவுக்குச் சுதந்திரம் வழங்கப்பட்டிருந்தது.

குறுகிய காலத்துக்குள் இவ்வளவு இராணுவ நீதிமன்ற விசாரணைகள் நடத்தப்பட்டதற்கும் இராணுவ ஒழுக்கவிதிகளை மீறியது மட்டுமே காரணமாக இருக்கவில்லை. தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சியும், விருப்பு வெறுப்புகளும் கூட இதற்குக் காரணமாக அமைந்தன. சரத் பொன்சேகா பதவியில் இருந்த போது எதையதையெல்லாம் செய்து தனக்கு எதிரானவர்களை பழிவாங்கினாரோ ஓரம்கட்டினாரோ அதேவழியில் இன்று அவரே நெருக்கடிகளைச் சந்தித்துக் கொண்டிருக்கிறார். கீழ்நிலை அதிகாரிகளை மேலதிகாரிகளாக நியமித்து மூத்த அதிகாரிகளை கேவலப்படுத்தும் முறையை இலங்கை இராணுவத்துக்கு அறிமுகப்படுத்தியவர் சரத் பொன்சேகா தான். இந்த வழியில் தான் மேஜர் ஜெனரல் ஜி.ஏ. சந்திரசிறி,மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வா.மேஜர் ஜெனரல் ஜம்மிக லியனகே போன்ற பல அதிகாரிகள் முன்னிலைக்கு வந்தனர்.

மூத்த மேஜர் ஜெனரல்கள் இருக்கும் போது இவர்கள் படை நடவடிக்கைகளில் முன்னிலைப்படுத்தப்பட்டனர். அத்துடன் அவருக்கு நெருக்கமாக அதிகாரிகளே நிர்வாகப் பகுதிக்குள்ளேயும் அதிகாரம் செலுத்தினர். இதன் விளைவாக டசின் கணக்கான மூத்த மேஜர் ஜெனரல்கள் முன்கூட்டியே ஓய்வு பெற்றனர். அன்று சரத் போன்சேகா போட்ட விதையே முளைத்து இன்று அவருக்கு எதிரான ஆயுதமாகியுள்ளது. சரத் பொன்சேகாவுக்கு எதராக நியமிக்கப்பட்ட இரண்டு இராணுவ நீதிமன்றங்களிலுமே, அவரை விசாரிக்கும் நீதியாளர்களாக இருப்பவர்கள் கீழ்நிலையில் இருந்த மேஜர் ஜெனரல்கள் தான்.

ஜெனரல் தரநிலையில் உள்ள தன்னை, தனக்குச் சமமான அல்லது அதற்கு அதிகமான தரநிலையில் உள்ள அதிகாரிகளால் தான் விசாரிக்க முடியும் என்பது சரத் பொன்சேகாவின் வாதம். ஆனால், இலங்கை இராணுவத்தில் சரத் பொன்சேகா ஒருவரே சேவைக்காலத்தில் ஜெனரலாக இருந்துள்ளார். ஓய்வுபெற்ற ஜெனரல்கள் பலர் இருந்தாலும் அவர்களை இராணுவ நீதிமன்றத்தில் நீதியாளர்களாக நியமிக்க முடியாது.
 ஜெனரல் தரத்துக்கு சமமான தரத்தில் உள்ள ஒரே ஒருவர் தற்போதைய விமானப்படைத் தளபதி எயர் மார்ஷல் றொசான் குணதிலக மட்டும் தான். அவர் இந்த விசாரணையில் பங்குபெறத் தயாரில்லை. எனவே, சரத் பொன்சேகாவின் நிலைப்பாட்டின் படி, அவரை விசாரிக்க இலங்கையின் பாதுகாப்புக் கட்டமைப்பில் எவருமே இல்லை. அதனால் தான் மேஜர் ஜெனரல்களை இராணுவ நீதிமன்ற விசாரணைக்குழுவுக்கு நியமித்தது அரசாங்கம். அதேவேளை மூத்த அதிகாரிகளை வழிநடத்தலாம் அவர்களுக்கு எதிரான நடவடிக்கைகளை எடுக்கலாம் என்ற வழிமுறையை இலங்கை இராணுவத்துக்கு சொல்லிக் கொடுத்த சரத் பொன்சேகாவே இன்று அந்த வழிமுறைக்குப் பலியாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

சரத் பொன்சேகா இராணுவத்தில் செய்த மாற்றங்கள் அனைத்துமே போரில் வெற்றி பெறவேண்டும் என்ற குறிக்கோளின் அடிப்படையில் அமைந்தவை. அவருக்கும் அரசாங்கத்துக்கும் அப்போது தேவைப்பட்டது வெற்றி ஒன்று தான். அதன் பெறுபேறு என்னவோ சாதகமாகத் தான் இருந்தது. ஆனால் நீண்ட கால நோக்கில் அது இராணுவக் கட்டமைப்புக்கு ஒத்துவராது என்ற உண்மை இப்போது தான் அவருக்குப் புரிந்திருக்கும். இந்த உண்மையைப் புரிந்து கொள்வதற்கு சரத் பொன்சேகா கொடுக்க வேண்டியுள்ள விலை மிகவும் அதிகமானது.

எது எவ்வாறாயினும் சரத் பொன்சேகா இலகுவில் தண்டனைகளில் இருந்து தப்பிக்க முடியாது என்பது மட்டும் தெளிவாகவே தெரிகிறது.
அவர் அரசியல் என்ற சகதிக்குள் சிக்கியிருப்பதால் இதிலிருந்து அவரால் சுலபமாக வெளியேற முடியாது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக