ஞாயிறு, 5 செப்டம்பர், 2010

அரசு காட்டும் அசமந்தம் மறப்பதற்குரியதல்ல...

போரினால் அனைத்தையும் இழந்து முகாம்களிலும் இடைத்தங்கல் முகாம்களிலும் தமிழ் மக்கள் துன்பப்படும்போது, இராணுவத்தினரைக் குடியேற்றுவதிலும் வன்னிப் பெருநிலப்பரப்பின் பெரும் பகுதியை அரச காணியாக்குவதிலும் ,அரசியலமைப்பு சீர் திருத்தத்திலும் அரசு தீவிரம் காட்டி நிற்பதை அவதானிக்க முடிகின்றது. வன்னிப்பெரும் போர் நடைபெற்று முடிபுற்றவேளை சுமார் 3 இலட்சம் தமிழ் மக்கள் முட்கம்பி வேலிக்குள் அடைக்கப்பட்டிருந்தனர்.


அவர்களை விடுவிப்பதில் அரசு காட்டிய அசமந்தம் மறப்பதற்குரியதல்ல. உலக நாடுகள், ஐக்கிய நாடுகள்சபை எனப் பலரும் கோரிக்கை விட்டும் அரசு அசைந்த பாடில்லை. மாறாக ஜனாதிபதித் தேர்தல் அறிவிப்பு விடப்பட்டதன் காரணமாக முகாம்களில் அடைக்கப்பட்ட மக்களை விடுவிப்பதற்கு அரசு இணங்கிக் கொண்டது.தேர்தலில் வெற்றி பெறும் நோக்கை மட்டும் மையமாகக் கொண்டு முகாம்களில் அடைக் கப்பட்ட தமிழ் மக்கள் விடுவிக்கப்பட்டனரேயன்றி அவர்களின் நலன் கருதியோ ,அன்றி அவர்களின் சுதந்திர உரிமை கருதியோ அவர்கள் விடுவிக்கப்படவில்லை என்ற உண்மை உணர்தற்குரியது.

இதுதான் நிலைமை. இப்போதுகூட வவுனியாவில் உள்ள முகாம்களிலும் வன்னியில் இடைத்தங்கல் முகாம்களிலும் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் மக்களின் அவலத்தை சிந்திப்பதற்கு யார் உளர்? மழைகாலம் ஆரம்பிக்க இருக்கின்ற நிலையிலும் அந்த மக்களை உரிய இடங்களில் குடியமர்த்துவதற்கு அரச மட்டத்தில் எடுக்கப்படும் முயற்சிகள் அசமந்தம் நிறைந்ததாகவும், கரிசனையற்றதாகவும் இருப்பதனை காணமுடிகின்றது.ஆக,இலங்கை அரசின் நிறுத்திட்டமானமுடிபு, இன்னுமொரு விடுதலைப் போராட்டத்தை தமிழ் மக்கள் நினைத்தும் பார்க்கக் கூடாது.அதற்கேற்றவாறு தமிழர் தாயகம் என்பதை உடைத்து அங்கு சிங்கள மக்களைக் குடியேற்றி, தமிழர்களின் வாக்குப் பலத்தைக் குறைப்பது.

அதேநேரம் இராணுவக் குடியிருப்புக்களை அமைப்பதன் ஊடாக ஒவ்வொரு தமிழ்க் குடிமகனும் அவதானிக்கப்பட்டு அவனின் சுதந்திர சிந்தனை மேலெழாமல் பார்த்துக் கொள்வது. இத்திட்டத்தை முன்னெடுத்து அதனை முழுமைப்படுத்தும் வரை மீள்குடியேற்றம் என்பது வெறும் பசப்பு வார்த்தையாக மட்டுமே இருக்கும். முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள மக்கள் அனுபவிக்கின்ற அவலங்கள்,துன்பங்கள் பற்றி சிந்திப்பதற்கு இந்த நாட்டில் யாருமே இல்லை.

தற்போதைய அரசு தனது இருப்பை நிலைநிறுத்தும் முயற்சியில் மிகக் கடுமையாக ஈடுபட்டுள்ளது.அதற்காக அரசியல் அமைப்புச் சீர்திருத்தம் என்ற பெயரில் மாற்றங்கள் நடக்கின்றன.இலங்கை சிங்கள மக்களின் பூமியாக இருக்கவேண்டுமாயின் இந்த அரசு இன்னும் பல ஆண்டுகளுக்கு நீடிக்கவேண்டும் என்பதை ஏற்றுக்கொள்ள பெரும்பான்மை இனமக்கள் தயாராகவே இருக்கின்றனர் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக