ஞாயிறு, 5 செப்டம்பர், 2010

தாதியர் நியமனத்தில் "தமிழ் யுவதிகள் ஒருவரும்' இல்லையா?"

வடக்கு, கிழக்குப் பகுதிக்கு அடுத்தபடியாக தமிழர்கள் செறிந்து வாழும் பிரதேசம் மலையகம் தான். கண்டி, நுவரெலியா, பதுளை, பண்டாரவளை, அப்புத்தளை என்று பல மாவட்டங்களில் தமிழர்கள் வாழ்ந்து கொண்டுதானிருக்கின்றார்கள். தமிழுக்கு சம உரிமை என்பதெல்லாம் வெறும் வெற்றுப் பேச்சுத்தான் என்பதை அண்மையில் நடந்த சம்பவம் ஒன்று நிரூபணப்படுத்தியிருக்கின்றது.


தமிழ் மக்கள் என்றால், வடக்கு, கிழக்கில் மட்டும் வாழ்பவர்கள் என்ற கருத்துப் பொதுவாக நிலவுகின்றதோ என்ற ஐயப்பாடு ஏனைய பகுதிகளைச் சார்ந்த தமிழ் மக்களுக்குத் தற்போது ஏற்பட்டிருப்பதிலும் வியப்பில்லைத்தான். நுவரெலியா, கண்டி, பதுளை மாவட்ட தாதியர்களுக்கான நியமனம் அண்மையில் வழங்கப்பட்டன. இந்நியமனத்தில் தமிழ் யுவதிகள் புறக்கணிக்கப்பட்டு விட்டதாகப் பொதுமக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.கண்டி ஹந்தானை தாதியர் பயிற்சிக் கல்லூரியில் இடம்பெற்ற இது குறித்த வைபவத்தில் 334 பேருக்கு நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டன.

இதில் ஒரு சிலருக்கு சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன, தாமே தமது கையால் நியமனக் கடிதங்களை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்க அம்சம் இதற்காகப் பலர் மேடைக்கு அழைக்கப்பட்டனர். இவர்களில் இரண்டு முஸ்லிம் யுவதிகளின் பெயர்கள் வாசிக்கப்பட்டது. அவர்களும் மேடையில் நியமனக் கடிதங்களைப் பெற்றுக் கொண்டனர். ஏனையோர் அனைவருமே பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்தவர்கள் என்பதை நாம் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
 இங்கே தமிழ் யுவதிகள் எவருக்கும் நியமனம் வழங்கப்பட்டிருக்கவில்லை. ஏன்? தமிழ் யுவதிகள் புறக்கணிக்கப்பட்டதன் காரணம் தான் என்ன? இவ்வாறு பலர் தமக்குள்ளேயே வினா எழுப்பிக் கொண்டனர். யாரிடம் எவ்வாறு இது குறித்துக் கேள்வி எழுப்புவது? அப்படியே கேள்வி எழுப்பினாலும் விடை தருவார் யார்? அது சரி... நம் மலையகத் 'தலைமைகள்' பார்வையில் இதுவிடயம் படவில்லையோ? அல்லது இதுவும் 'கண்டும் காணாத' நிலை தானோ?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக