திங்கள், 27 செப்டம்பர், 2010

பாகிஸ்தானுக்கு ஆயுத சப்ளை : அதிபர் ஒபாமா விரும்பவில்லை

இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தானுக்கு ஆயுதம் வழங்குவதை அமெரிக்கா விரும்பவில்லை' என, அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, பாகிஸ்தான் அதிபர் சர்தாரியிடம் உறுதியுடன் கூறியதாக, "ஒபாமா'ஸ் வார்' என்ற புத்தகத்தில் அதன் ஆசிரியர் எழுதியுள்ளார்.அமெரிக்கப் புலனாய்வு எழுத்தாளரான பாப் உட்வேர்ட் சமீபத்தில், அமெரிக்கா மேற்கொண்ட சமீபத்திய போர்களைப் பற்றி, "ஒபாமா'ஸ் வார்' என்ற புத்தகம் எழுதி வெளியிட்டுள்ளார். மொத்தம் 417 பக்கங்கள் கொண்ட இப்புத்தகத்தில், பாகிஸ்தான் அதிபர் சர்தாரி, ஒபாமாவைச் சந்தித்த போது நடந்த உரையாடல்களை பதிவு செய்துள்ளார்.
அதில், பாகிஸ்தான் இந்தியாவை தன் பரம எதிரியாகக் கருதுவதால் தான், கடல் வழியாக பயங்கரவாதிகளை மும்பையைத் தாக்க அனுப்பியதாக உட்வேர்ட் தெரிவித்து உள்ளார்.
அவர் எழுதியிருப்பதாவது: கடந்த 2009, மே 7ம் தேதி சர்தாரி ஒபாமாவைச் சந்தித்த போது அவரிடம், "இந்தியாவுக்கு எதிராக உங்களுக்கு ஆயுதம் வழங்குவதை நாங்கள் விரும்பவில்லை' என்று கூறினார். அதற்குப் பதிலளித்த சர்தாரி, "உலகத்தைப் பற்றிய எங்கள் பார்வையை நாங்கள் மாற்ற முயல்கிறோம். ஆனால் அந்த மாற்றம் ஒரே இரவில் நடக்காது' என்றார். அந்த விவாதம் நடந்து கொண்டிருந்த போது, "அமெரிக்கா இந்தியாவுடன் நட்புறவு கொண்டிருக்கும் வேளையில் அது ஆப்கனில் தலையிட்டிருப்பது குறித்து பாகிஸ்தான் மிகவும் கவலைப்படுகிறது' என்று அன்றைய அமெரிக்க புலனாய்வுத் துறை இயக்குனர் டென்னிஸ் பிளேர், ஒபாமாவிடம் கூறினார்.
உடனே, அமெரிக்கத் துணைஅதிபர் ஜோ பிடென், "பாகிஸ்தானுடனான நமது உறவில் அடிப்படையிலேயே முரண்பாடு உள்ளது. இந்திய ஆதரவு மனப்பான்மை கொண்ட ஹமீத் கர்சாய் போன்ற பஸ்தூன் இனத்தவர் தலைமையில் ஆப்கனில் அரசு அமைவதை பாக்., விரும்பாது. அதனால் தான், தலிபான்களைத் தனக்கு வேலியாக இருப்பதற்காக பாக்., ஆதரவளித்தது. ஆனால், ஆப்கனில் தலிபான்களை ஒழித்துக் கட்டிவிட்டு அங்கு கர்சாய் தலைமையிலான அரசை உறுதிப்படுத்துவதுதான் நம் கொள்கை' என்றார். அதே ஆண்டு, அக்., 7ம் தேதி புலனாய்வு உயரதிகாரிகளுடன் ஒபாமா நடத்திய கூட்டத்தில், "பாகிஸ்தான், இந்தியா இடையே நிலையான உறவு அமையும் வரை, ஆப்கனில் நிலையான அரசு சாத்தியமில்லை. இருநாடுகளுக்கு இடையிலான பதட்டத்தைக் குறைப்பதற்கு நாம் முயல வேண்டும். நிலையான பாகிஸ்தான் அமைவது குறித்து இந்தியாவுடன் நாம் ஏன் பேச்சுவார்த்தை நடத்தக் கூடாது? உலகின் முக்கிய இடத்துக்கு இந்தியா வளர்ந்து வரும் நிலையில், நிலையான பாகிஸ்தான் அதற்கு உதவும்' என்று ஒபாமா கூறினார். இவ்வாறு பாப் உட்வேர்ட் தன் புத்தகத்தில் எழுதியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக