வியாழன், 9 டிசம்பர், 2010

தேசிய பாதுகாப்பு சட்டம் ரத்து. சீமான் விடுதலை ஆவார்

திரைப்பட இயக்குனரும், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளருமான சீமான் மீதான தேசிய பாதுகாப்பு சட்ட நடவடிக்கையை ரத்து செய்து, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. நீதிபதிகள் தர்மாராவ், ஹரிபரந்தாமன் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் தாக்கப்படுவதை கண்டித்து, சென்னையில் நாம் தமிழர் இயக்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் இந்திய இறையாண்மைக்கு எதிராக சீமான் பேசியதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. பின்னர் அவர் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.பரபரப்பான அந்த சூழ்நிலையில் சென்னை பத்திரிகையாளர் மன்றத்துக்கு பத்திரிகையாளர்களை சந்திக்க சீமான் வந்தபோது, போலீசார் அவரை கைது செய்து வேலூர் சிறையில் அடைத்தனர்.
இதனை எதிர்த்து சீமான் சகோதரர் ஜேம்ஸ் பீட்டர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். நீதிபதிகள் தர்மாராவ், ஹரிபரந்தாமன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் இந்த வழக்கு இன்று (09.12.2010) விசாரணைக்கு வந்தது. மனு மீதான வழக்கு விசாரணையின்போது, தேசிய பாதுகாப்பு சட்டத்தினை ஒருவர் மீது பிரயோகிக்க மாநகர ஆணையருக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது என, சீமானின் வழக்கறிஞர் வாதிட்டார். சீமானுக்கு எதிராக கூடுதல் மாநகர ஆணையர் பிறபித்த உத்தரவு செல்லாது என அறிவிக்க வேண்டும் என்றும் கோரினார். வழக்கில் ஆஜரான அரசு வழக்கறிஞர், மாநகர காவல்துறை ஆணையர் பதவியில் இல்லாதபோது, கூடுதல் ஆணையருக்கு முழு அதிகாரம் உள்ளதாக வாதாடினார்.
அப்போது நீதிபதிகள் தர்மாராவ், ஹரி பரந்தாமன் ஆகியோர் குறுக்கீட்டு, இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் தாக்கப்பட்டால் இங்கு படிக்கும் சிங்கள மாணவர்கள் தாக்கப்படுவார்கள் என்று எதிர்காலத்தின் அடிப்படையில் சீமான் பேசியுள்ளார்.
தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ள அவரின் இந்த பேச்சை தொடர்ந்து தமிழகத்தில் வன்முறை சம்பவங்கள் எதுவும் நடந்ததா? என்று கேள்வி எழுப்பினர்.
இருதரப்பு வாதத்தையும் கேட்ட நீதிபதிகள், தேசிய பாதுகாப்பு சட்டம் பிரயோகிப்பதற்கு, மாநகர காவல்துறை ஆணையருக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது என்று ஏற்கனவே உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்ததை சுட்டிக்காட்டினர். எனவே, சீமானுக்கு எதிரான தேசிய பாதுகாப்பு சட்டத்தின் நடவடிக்கையை ரத்து செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதையடுத்து சீமான் இன்று மாலை அல்லது நாளை காலை விடுதலை ஆவார் என எதிர்பார்க்கப்படுகிறது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக