புதன், 12 ஜனவரி, 2011

ஹம்பாந்தோட்டை துறைமுக அபிவிருத்தி குறித்து இந்தியா கவலை கொண்டுள்ளதாக விக்கிலீக்ஸ் தகவல்

ஹம்பாந்தோட்டை நகரில் சீன அரசாங்கத்தின் ஒத்துழைப்புடன் முன்னெடுக்கப்பட்டு வரும் துறைமுக அபிவிருத்தி திட்டம் தொடர்பில் இந்தியா கவலை கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.அமெரிக்க இரகசிய இராஜதந்திர ஆவணங்களை வெளியிட்டு வரும் விக்கிலீக்ஸின் பிந்திய வெளியீடுகளில் இந்த விடயம் தொடர்பான தகவல்கள் அடங்கியுள்ளதாக ஏஷியன் ட்ரிபியூன் செய்தி வெளியிட்டுள்ளது.ஏப்ரல் மாதம் 27 ஆம் திகதி 2007 ஆம் ஆண்டு என திகதியிடப்பட்ட இராஜதந்திர தகவல் பரிமாற்ற கோப்பில் இது தொடர்பான தகவல்கள் பரிமாறப்பட்டுள்ளன.
இந்திய வெளிவிவகார அமைச்சின் இணை செயலாளர் மோகன்குமார் புதுடில்லியிலுள்ள அமெரிக்க தூதரகத்தின் அரசியல் பிரிவு அதிகாரி டெட் ஒசிசுடன் நடத்திய பேச்சுவார்த்தையின் போது இலங்கையில் சீனாவின் தலையீடு தொடர்பில் இந்திய அரசாங்கம் கவலை கொண்டுள்ளதாக கருத்து வெளியிட்டார்.ஹம்பாந்தோட்டையில் சுமார் 500 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவில் சீனா நீர்மாணித்து வரும் துறைமுகம் தொடர்பில் அமெரிக்க அரசாங்கம் முழுமையான ஆய்வொன்றினை மேற்கொள்வது தமக்கு உதவியாக அமையும் என மோகன் குமார் இந்த சந்திப்பின் போது அமெரிக்க தூதரக அதிகாரியிடம் தெரிவித்துள்ளார்.இந்த இரகசிய ஆவணத்தில் சீனா இலங்கை அரசாங்கத்தின் மீது கூடுதலான ஈடுபாட்டை கொண்டிருப்பதாகவும் மோகன்குமார் சுட்டிக்காட்டியதாக தெரிவிக்கப்படுகின்றது.
மார்ச் மாதம் ஜனதிபதியின் சீன விஜயத்தை தொடர்ந்து இலங்கை சீனாவில் மென் தளமாக மாற்றமடைந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.விடுதலைப் புலிகளுக்கும் அரசாங்க தரப்பினருக்கும் இடையில் மோதல்கள் இடம்பெற்ற நிலையில் பாக்கு நீரிணையின் பாதுகாப்பு நிலைமைகள் மோசமடைந்துள்ளதாகவும் இந்திய கடற்படை தமது சுற்று காவல் நவடிக்கைகளை அதிகப்படுத்தியுள்ளதாகவும் இந்திய வெளிவிவகார அமைச்சின் இணைச் செயலளார் மோகன் குமார் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக