சனி, 13 மார்ச், 2010

கொழும்பு யாழ்ப்பாண வெற்றிலைகளுக்கு இடையில் அரசியல் முறுகல்

எதிர்வரும் ஏப்ரல் மாதம் 8ம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பில் நாளுக்கு நாள் முறுகல் நிலைகளும், கருத்து மோதல்களும் இடம்பெற்று வரும் நிலையில் யாழ்ப்பாணத்தில் சிறீலங்கா சுதந்திரக் கூட்டமைப்பிற்குள் பாரிய முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் வெற்றிலைச் சின்னத்தின்கீழ் ஈபிடிபியின் தலைவர் டக்ளஸ் தேவானந்தா உட்பட்ட குழுவினரும், அதே சின்னத்தில் அங்கஜன் இராமநாதன் ஆகியோரும் போட்டியிடுகின்றனர். இந்தநிலையில் அங்கஜன் இராமநாதன், மகிந்த ராஜபக்சவினால் டக்ளஸ் தேவானந்தாவிற்கு எதிராக கூடுதல் வாக்குகளைப் பெற்று அதன் மூலம் டக்ளஸ் தேவானந்தாவைத் தோற்கடிக்கவைக்கும் நோக்கில் யாழ்.தேர்தல் தொகுதியில் தேர்தலில் களம் இறக்கப்பட்டுள்ளமை தொடர்பிலான ஊர்ஜிதப்படுத்தப்பட்ட தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. ஆனாலும் இரண்டு தரப்பும் வெற்றிலைச் சின்னத்தில் பரப்புரை நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதால் பல இடங்களில் முறுகல் நிலை ஏற்பட்டே வந்துள்ளது. குறிப்பாக இரு தரப்பினரும் ஒரே பகுதி மக்களிடம் சென்று வெற்றிலைச் சின்னத்தில் தமக்கு மட்டுமே வாக்களிக்கும் படி கேட்டுக் கொள்வது, மற்றும் சுவரொட்டிகள் மீது தமது சுவரொட்டிகளை ஒட்டுவது போன்ற நடவடிக்கைகள் இரண்டு தரப்பிற்கும் இடையில் முறுகல் நிலையினை வலுப்படுத்தியது. இந்த நிலையில் நேற்று முன்னாள் யாழ். நகரை அண்மித்த பகுதி ஒன்றில் அங்கஜன் இராமநாதன் பயணித்த சொகுசு வாகனத்தினைக் கலைத்துச் சென்ற ஈபிடிபி வாகனம் மோதியுள்ளது. இதனை அடுத்து இரண்டு தரப்பிற்கும் இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் கைத்துப்பாக்கியினை எடுத்த ஈபிடிபியினர் அங்கஜன் இராமநாதன் உடனடியாக நாட்டைவிட்டே வெளியேற வேண்டும் என்றும், தவறினால் சுட்டுக் கொல்லப்படுவீர் என்றும் எச்சரித்துள்ளனர். சம்பவத்தினை அடுத்து பதட்டமடைந்த அங்கஜன் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறையிட்டுள்ளார். குறிப்பிட்ட அங்கஜன் வெளிநாட்டில் இருந்து தற்போதே இலங்கைக்கு வருகைதந்து தேர்தலில் குதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக