சனி, 13 மார்ச், 2010

முன்னாள் விடுதலைப் புலிகள் குடும்பங்களுக்கு தனியான சிறப்பு முகாம்

சிறிலங்காப் படைகளின் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருக்கும் 11,000 விடுதலைப் புலி உறுப்பினர்களுக்குமான புனர்வாழ்வு நடவடிக்கைகள் சர்வதேச சமூகத்தின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தடுப்பிலிருக்கும் கணவன், வெளியே இருக்கும் மனைவி மற்றும் பிள்ளைகள் என அனைவரையும் குடும்பத்துடன் ஒரே கூடாரத்தில் தங்கவைப்பதற்கு ஏதுவாக மாணிக்கம் பண்ணையின் [மெனிக் பாம்] ஐந்தாவது வலயத்தில் சிறப்பு புனர்வாழ்வு மையத்தினை அமைக்கும் திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இதுபோன்ற முதலாவது வசதி மல்வத்து ஓயாவின் ஓரத்திலிருக்கும் மாணிக்கம் பண்ணையின் வலயம் ஐந்தில் அமைக்கப்படவிருக்கிறது. விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் பொதுவாழ்வில் இணைவதற்கு வழிசெய்யும் திட்டத்தின் ஒருபகுதியாக இதுபோன்ற வசதிகள் திருகோணமலை, யாழ்ப்பாணம் மற்றும் மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களிலும் அமைக்கப்படவிருக்கின்றன. தங்களது குடும்பங்களுடனும் அன்புக்குரியவர்களுடனும் இணைந்திருந்தவாறே முன்னாள் போராளிகள் புனர்வாழ்வினைப் பெறக்கூடிய சந்தர்ப்பத்தினை இச்செயல்திட்டம் அவர்களுக்கு வழங்கும் என நீதி மற்றும் சட்ட மறுசீரமைப்பு அமைச்சர் மிலிந்த மொறகொட தெரிவித்திருக்கிறார். கணவன் மாத்திரம் விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர் எனின், மனைவி மற்றும் பிள்ளைகள் சுதந்திரமாக வெளியே சென்று வர அனுமதிக்கப்படுவார்கள். அதேநேரம் இப்புனர்வாழ்வுச் செயல்திட்டத்தினைத் தங்கு தடையின்றி முன்னெடுப்பதற்கு ஏதுவாக அங்கிருக்கும் பாதுகாப்பு நடைமுறைகளுக்கு ஏற்ப கணவன் இத்தகைய புனர்வாழ்வு நிலையங்களுக்கு வெளியே செல்ல அனுமதிக்கப்படமாட்டார். அரசாங்கத்தின் இந்த முனைப்புக்களுக்கு IOM மற்றும் வேறுபல உள்ளுர், வெளிநாட்டுத் தொண்டு நிறுவனங்கள் ஆதரவு வழங்கிவருகின்றன. அகில அலங்கை இந்து மாமன்றத்தையும் இதில் ஈடுபடச் செய்ததன்மூலம் தமிழ் மக்களுக்கும் புலம்பெயர்ந்த தமிழ் மக்களுக்கும் நம்பிக்கையைப் ஏற்படுத்த அமைச்சர் மொறகொட திட்டமிட்டுள்ளார். முன்பள்ளிகள், பகல்நேர சிறுவர் பராமரிப்பு நிலையங்கள் மற்றும் தனியான தொழிற்கல்வி, தொழில் நுட்பப் பயிற்சி மையங்களையும் இத்தகைய புனர்வாழ்வு மையங்களுக்குள் அமைப்பதற்கு அரசாங்கம் திட்டமிட்டிருப்பதாக அமைச்சர் மொறகொட தொரிவித்தார். விடுதலைப் புலிகள் அமைப்பு இல்லாதொழிக்கப்பட்டதன் பின்னான இந்தக் காலப்பகுதியில் தமிழ் மக்கள் மத்தியில் நம்பிக்கையினைக் கட்யெழுப்பும் முனைப்பாக இதுபோன்ற செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்படவிருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார். போர் முடிவுக்கு வந்து ஒருவருடம் கூட ஆகியவிடாத நிலையில் விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்களுக்கான புனர்வாழ்வு நடவடிக்கைகள் அதிக வெற்றியினைத் தந்திருப்பதாக மொறகொட மேலும் தெரிவித்தார். இலங்கை இராணுவம், இதரபல அமைச்சுக்களின் துணையுடன் நீதி மற்றும் சட்ட மறுசீரமைப்பு அமைச்சு விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்களுக்கான புனர்வாழ்வு நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்கிறது. கணவன் மற்றும் மனைவி என இருவருமே புலிகளமைப்பின் முன்னாள் போராளிகளாக இருக்குமிடத்து அவர்களை ஒரேயிடத்தில் தங்கவைத்துப் புனர்வாழ்வாளிப்பதற்கு ஏதுவாக வவுனியாவில் சிறப்பு வசதிகளை அரசாங்கம் ஏற்படுத்திவருகிறது. இதுபோன்ற 142 முன்னாள் போராளிக் குடும்பங்களும் குழந்தைகளுடனிருக்கும் 8 தாய்மாரும் இந்தப் புதிய முகாமிற்கு அனுப்பப்படவிருக்கிறார்கள். இந்த முன்னாள் போராளிக் குடும்பங்களுக்காக தனியான தொழில் நுட்ப மற்றும் தொழிற்கல்வி வகுப்புக்கள் ஒழுங்குசெய்யப்படும் என இராணுவ அலுவலர் ஒருவர் தெரிவித்திருந்தார். திருகோணமலையின் அல்லைக்கந்தளாயிலுள்ள சூரியவேவ பகுதியில் விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகள் 500 பேருக்குப் புனர்வாழ்வளிக்கப்பட்டு வருகிறது. இவர்களுக்கான கால்நடைவளர்ப்புத் திட்டமொன்றை அரசாங்கம் முன்னெடுக்கவிருக்கிறது. இலங்கை இராணுவமும் Ceylon Cold Stores என்ற நிறுவனமும் இணைந்தே இந்தத் திட்டத்தினை முன்னெடுக்கின்றன. Ceylon Cold Stores என்ற இந்த நிறுவனந்தான் இத்திட்டத்திற்கான நிதியுதவியினை வழங்குகிறது. பால் விநியோகத்தினை மேற்கொள்வதற்காக 1800 வரையிலான விவசாயிகள் வேலைக்கமர்த்தப்படவிருக்கிறார்கள் என இராணுவ அலுவலர் ஒருவர் தெரிவித்தார். இதற்குத் தேவையான நிலத்தினை அரசகாணியிலிருந்து பெறுவதற்கான முனைப்புக்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்தார். திருக்கோணமடுவின் கண்டல்காடுப் பகுதியில் அரசாங்கம் விவசாய மற்றும் கால்நடைப் பண்ணைகளை ஏற்படுத்தவிருக்கிறது. இலங்கை இராணுவத்தினரும் கடற்படையினரும் இங்கு நிலைப்படுத்தப்படுவர். இது போன்ற ஆறு பண்ணைகள் அமைக்கப்படும். ஒவ்வொரு பண்ணைகளிலும் விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகள் 500 போர் உள்வாங்கப்படுவார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக