சனி, 13 மார்ச், 2010

மீண்டும் உலகை ஏமாற்ற சுயாதீன நிபுணர் குழு அமைப்பு

உலகை ஏமாற்ற பல குழுக்களை அமைத்து இழுத்தடித்த மஹிந்த இப்போ மனித உரிமைகள் தொடர்பிலும் சுயாதீன குழுவை அமைக்கப்போவதாக கூறியுள்ளது. அரச சார்பற்ற பணியாளர்களின் முதூர் படுகொலை உட்பட பல கொலைகளுக்கு விசாரணைக்குழு அமைத்து இறுதியில் என்ன நடந்தது என்பதனை சர்வதேசம் மறந்தாலும் நிச்சயமாக தமிழர்கள் மறக்கமாட்டார்கள். இந்த நிலையில் ஐக்கிய நாடுகள் சபையினால் நிறுவப்படபோகும் ஆலோசனைக்குழுவினை நிறுத்த அல்லது வலுவற்றதாக்கவே தற்போதைய சுயாதீன குழு அமைத்தல் நாடகம் அமையப்போகின்றது. இது தொடர்பாக அமைச்சர் மங்கள சமரசிங்க கூறுகையில் இலங்கையில் கடந்த மூன்று தசாப்த காலங்களாக நிலவிய பயங்கரவாதத்துக்கான காரணம் என்ன? மற்றும் இனிவரும் காலங்களில் அவ்வாறான நிலைமை ஒன்று ஏற்படாமல் எவ்வாறு தடுப்பது என்பன தொடர்பில் விரிவாக ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்க சுயாதீன நிபுணர் குழுவொன்றை நியமிப்பதற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தீர்மானித்துள்ளதாக மனித உரிமைகள் மற்றும் இடர் முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்தார். நாங்கள் வெளிநாடுகளில் இருந்து 'இறக்குமதி' செய்யப்பட்ட தீர்வுத் திட்டங்களை இங்கு நடைமுறைப்படுத்தமாட்டோம். எமது மக்களின் தேவைகள் மற்றும் எதிர்பார்ப்புகள் என்னவென்று எமது 38 வருட அரசியல் அனுபவம் கொண்ட ஜனாதிபதிக்கு நன்றாக தெரியும். எனவே நாங்கள் எமக்கே தனித்துவமான வேலைத்திட்டங்களுடன் நாட்டை முன்னெடுப்போம். சுயாதீன நிபுணர் குழு தொடர்பான அறிவிப்பை ஜனாதிபதி முறையாக மேற்கொள்வார் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று வெள்ளிக்கிழமை காலை நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் அங்கு மேலும் கூறுகையில், "இம்மாதம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் தொலைபேசியில் தொடர்புகொண்ட ஐ. நா. செயலாளர் பான் கீ. மூன் இலங்கை தொடர்பில் ஆலோசனை பெற தான் ஆலோசனைக் குழுவொன்றை நியமிக்கப்போவதாக கூறியிருந்தார். ஆனால் அது தேவையற்றது என்று ஜனாதிபதி கூறிவிட்டார். தற்போது 124 நாடுகளை அங்கத்துவமாகக்கொண்ட அணி சேரா அமைப்பு ஆலோசனை குழுவை அமைப்பது தொடர்பில் எதிர்ப்பு தெரிவித்து பான் கீ. மூனுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது. ஐ.நா. வில் 194 உறுப்பு நாடுகள் உள்ளன. ஆனால் அணிசேரா நாடுகள் அமைப்பில் 124 நாடுகள் உள்ளன. இங்கும் எமக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் உள்ளது. எனவே ஆலோசனை குழு தேவையற்றது என்று நாங்கள் கருதுகின்றோம். இதனடிப்படையில் அரசாங்கம் ஒரு தீர்மானத்தை எடுத்துள்ளது. அதாவது இலங்கையில் கடந்த மூன்று தசாப்த காலங்களாக நிலவிய பயங்கரவாதத்துக்கான காரணம் என்ன? மற்றும் இனிவரும் காலங்களில் அவ்வாறான நிலைமை ஒன்றை எவ்வாறு தடுப்பது என்பது தொடர்பில் விரிவாக ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்க சுயாதீன நிபுணர் குழுவொன்றை நியமிப்பதற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தீர்மானித்துள்ளார். முக்கியமாக அல்பிரட் துரையப்பாவின் கொலையிருந்து அனைத்து விடயங்களும் ஆராயப்படும். யுத்தம் முடிவடைந்த பின்னர் இடம்பெற்ற விடயங்களும் ஆராயப்படும்"

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக