சனி, 27 மார்ச், 2010

மக்கள் ஒன்றுதிரண்டு காப்பாற்றினர்

கடந்த புதன்கிழமை வன்னி ஆனைவிழுந்தானில் பாடசாலை மாணவியொருத்தியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்த முனைந்த படையினரின் முயற்சி அப்பகுதி மக்களால் ஒன்றுபட்டு முறியடிக்கப்பட்டுள்ளது. 24.03.2010 புதன்கிழமை அன்று பாடசாலையிலிருந்து திரும்பிக் கொண்டிருந்த குறித்த 15 வயது மாணவியை ஆனைவிழுந்தான் சந்தியில் காவலரண் அமைத்து நிலைகொண்டிருந்த இராணுவத்தினர் கட்டாயப்படுத்தி காவலரணிற்குள் அழைத்துச் சென்றனர். அதேநேரம் அப்பகுதியால் வந்துகொண்டிருந்த வயோதிபர் ஒருவர் இச்சம்பவத்தைப் பார்த்ததும் அயலிலுள்ள மக்களிடம் விரைந்து சென்று தகவலைச் சொன்னார். அப்பகுதி மக்கள் ஒன்றாகத் திரண்டு உடனடியாகவே அக்காவலரணை முற்றுகையிட்டு உள்நுழைந்து அம்மாணவியை மீட்டனர். உடைகள் கிழிக்கப்பட்ட நிலையில் இராணுவத்தினரிடமிருந்து அம்மாணவி மீட்கப்பட்டார். அதேநேரத்தில் அதற்கு அண்மித்த பகுதியில் ஈ.பி.டி.பி. கட்சியின் பரப்புரைக் கூட்டத்தில் டக்ளஸ் தேவானந்தாவும் பங்குபற்றிக் கொண்டிருந்தார். அங்கு விரைந்த மக்கள் இச்சம்பவம் பற்றி அவரிடம் முறையிட்டபோது, இது தொடர்பாக தான் உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக அவர் கூறியிருந்தார். ஆயினும் இதுவரை உருப்படியான எந்த நடவடிக்கையும் இச்சம்பவம் தொடர்பில் எடுக்கப்படவில்லை என அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கிளிநொச்சி, ஆனைவிழுந்தானில் நடைபெற்ற இச்சம்பவம் அங்குள்ள மக்களிடம் இராணுவத்தினர் மீதான ஆத்திரத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. கடந்த மாதம் மட்டக்களப்பிலும் கிணற்றடியில் குளித்துக்கொண்டிருந்த இராணுவத்தினர், பாடசாலை முடிந்து வீதியால் வீடு திரும்பிக் கொண்டிருந்த மாணவி ஒருவரை கலைத்துச்சென்று பாலியல் வன்புணர்வுக்குட்படுத்திருந்தனர். அதன்பின்னர் நடைபெற்ற நீதிமன்ற விசாரணையின் அடையாள அணிவகுப்பின் போது குறிப்பிட்ட மாணவி குற்றவாளிகளை இனங்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக