சனி, 27 மார்ச், 2010

ஐ.நா சபை: ஈழத் தமிழர் விடையத்தில் என்ன செய்யபோகிறது?


ஈழத்தில் கடந்த ஆண்டு இடம்பெற்ற போரின் இறுதிப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட போர்க் குற்றங்கள் தொடர்பில் அனைத்துலக மனித உரிமை அமைப்புக்களின் துணையுடன் விசாரணைகளை மேற்கொள்ள ஐ.நா செயலாளர் நாயகம் பான் கீ மூன் திட்டமிட்டுள்ளார் என்ற செய்தி மனிதாபிமானிகளினால் வரவேற்கப்பட்டுள்ளது. ஆனால் தமிழர்களோ பான் கீ மூனின் இந்த நடவடிக்கையினால் வெற்றி கொண்டாட முடியாது. காரணம் இந்த விசாரணைக் குழு எவ்வாறு இந்த விசாரணையை செய்து உண்மையான குற்றவாளிகளைக் கூண்டில் ஏற்றும் என்பதைப் பொறுத்துத் தான் தமிழரின் வெற்றி தங்கியுள்ளது. கடந்த காலங்களில் ஐக்கிய நாடுகள் சபை தமிழர்களின் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தியே வந்துள்ளது. அத்துடன் விடுதலைக்காகப் போராடிய விடுதலைப் புலிகளை பயங்கரவாதிகளாகவே கருதி அவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை முன்வைத்தார்கள். சிங்கள இராணுவக் காடையர்கள் பல ஆயிரம் தமிழர்களை கொன்று குவித்து தமிழினத்திற்கு சொல்லொணாத் துயரை விளைவித்த அரக்கர்களைப் பற்றி எதுவித கண்டனத்தையும் தெரிவிக்காமல் ஐக்கிய நாடுகள் சபை இருந்துள்ளது என்பது அவர்களின் கையாலாகத் தனத்தை உறுதிப்படுத்தியது. ஐரோப்பியர்கள் பல அமைப்புக்களை உருவாக்கி அவைகளை உலக தர அமைப்புக்களாக உருவாக்கி தமது பிரச்சனைகளைத் தீர்ப்பதற்காக கையாண்டார்கள். குறிப்பாக 'லீக் ஒவ் நேசன்ஸ்' என்ற அமைப்பை 42 நாடுகள் பங்களிப்புடன் உருவாக்கினார்கள். இந்த அமைப்பு முதலாம் உலகப் போர் முடிவடைந்தவுடனேயே ஆரம்பித்தார்கள். காரணம் இன்னுமொரு உலகப் போரைத் தவிர்ப்பதற்கு. ஆனால் இந்த அமைப்பினால் இரண்டாம் உலகப் போரை நிறுத்த முடியாமல் போய்விட்டது. அதன் விளைவே ஐக்கிய நாடுகள் சபை என்ற பெயருடன் அதன் முன்னய அமைப்புக்களின் அனுபவத்துடன் பயணிக்க ஆரம்பித்தது. குறிப்பாக உலக ஆதிக்க சக்தியாக அமெரிக்கா உயர்ந்தது. அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதியான பிராங்க்ளின் ரூசெவேல்ட்டினால் 1942-ஆம் ஆண்டு பரிந்துரை செய்யப்பட்ட பெயர் தான் ஐக்கிய நாடுகள் சபை. இந்த அமைப்பு 24 அக்டோபர் 1945 சட்டபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந்த அமைப்பு சில வல்லரசுகளின் கைப்பொம்மையாகவே இருந்து வந்துள்ளது. இந்த அமைப்பின் ஒரேயொரு பிரிவான சமூக, பொருளாதார அமைப்பு உலகின் பட்டி தொட்டியெல்லாம் சென்று வதைப்படும் மக்களுக்காக உதவி செய்கின்றார்கள். இதனால் ஐக்கிய நாடுகள் என்ற உலக அமைப்பின் பெயருக்கு நற்பெயர் பெற்றுத் தந்துள்ளது. மற்றும்படி ஐக்கிய நாடுகள் சபையினால் எந்த பலனும் உலக மக்களுக்கு இல்லை. குறிப்பாக அமெரிக்கா தலைமையில் சென்ற படைகள் இராக்கை சட்டவிரோதமாக ஆக்கிரமித்த பொழுது ஐ. நா சபை எதுவும் செய்யமுடியாமல் போய்விட்டது. ஆக ஐ.நா சபை அமெரிக்க வல்லாதிக்கத்தின் கைப்பொம்மையாக பாவிக்கப்பட்டது. ஈழத்தில் கொடுமை நடைபெற்று கொண்டிருந்த வேளை ஐ.நா சபை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக