சனி, 27 மார்ச், 2010

சிறிலங்க-ரஷ்ய-சீன கூட்டணி ஐ.நா சபையின் முயற்சியை உடைக்க இந்தியா மீண்டும் துணைபோகுமா?

சிங்கள அரசு தமது விசுவாசிகள் மூலமாக ஐ. நா சபையின் நடவடிக்கையை முறியடிக்க பல பிரயத்தனங்களை எடுத்திருக்கின்றார்கள். குறிப்பாக மூனின் கடந்த வார அறிவித்தலின் பின்னர் தமக்கு வேண்டப்பட்ட 16 க்கும் மேற்பட்ட சிங்கள பேரினவாதிகளைக் கொண்டு இந்த ஆர்ப்பாட்டத்தை ஐ.நா சபையின் பொது செயலாளர் பான் கீ மூனுக்கு எதிராக அமெரிக்காவில் இலங்கை அரசாங்கத்தினால் அரங்கேற்றப்பட்டது. இதில் வேடிக்கை என்னவென்றால் இந்த ஆர்ப்பாட்டத்தின் பின்னர் இந்த போராட்டத்தில் ஈடுபட்ட 16 பேருக்கும் உணவு பொதி மற்றும் 100 டொலர்கள் பணமும் வழங்கப்பட்டது. பின்னர் இவர்களுக்கு ஐ.நா சபைக்கான இலங்கையின் நிரந்தர பிரதிநிதி பாலித்த கோகன்ன தமது வாசஸ்தலத்தில் வைத்து விருந்துபசாரம் வழங்கியுள்ளார். இதனிடையே ஈழத்தில் இடம்பெற்ற போர்க் குற்றங்களை ஆராய ஐக்கிய நாடுகள் செயாலாளர் நாயகம் நியமிக்க உத்தேசித்துள்ள நிபுணர்கள் அடங்கிய குழுவுக்கு சீனா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகள் தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ளன. இந்த இரு நாடுகளும் ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையில் நிரந்தர அங்கத்துவ நாடுகளாக அங்கம் வகிக்கின்றன. மொத்தம் 15 நாடுகளை உறுப்பினராக கொண்ட பாதுகாப்பு சபையில் ஐந்து நிரந்தர உறுப்பு நாடுகளாகவும், 10 தற்காலிக உறுப்பு நாடுகளாகவும் ஒவ்வொரு இரண்டு ஆண்டுகளுக்கு சுழற்சி முறையில் ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையினால் தெரிவுசெய்யப்படுவர். இந்த 15 நாடுகளில் ஒன்பது நாடுகள் ஆமோதிக்க வேண்டும். இரு வேறு விடயங்களில் இந்த ஒன்பது வாக்குகளையும் பாவிக்கலாம். சில விடயங்களுக்கு இந்த 15 நாடுகளில் ஏதாவது ஒன்பது நாடுகள் வாக்களிக்கலாம். ஆனால் உலகப் பாதுகாப்பு மற்றும் மிக முக்கிய விடயங்களுக்கு இந்த 15 நாடுகளில் ஒன்பது நாடுகளின் அமோக வெற்றி இருக்க வேண்டும். அதிலும் நிரந்தர உறுப்பு நாடுகளின் குறிப்பாக இந்த ஐந்து நாடுகளின் ஆதரவு தேவை. இல்லை என்றால் பாதுகாப்பு சபை எந்தவொரு நடவடிக்கைகளையும் செயல்படுத்த முடியாது. விசாரணை சபையை நியமிப்பதென்பது ஒரு இலகுவான விடயம் ஆனால் ஒரு இறைமையுள்ள சிறிலங்கா என்ற நாட்டுக்கெதிராக எந்த நடவடிக்கைகளையும் எடுக்க இந்த நிரந்தர உறுப்பு நாடுகளின் ஆதரவு தேவை. ரஷ்யா, சீனாவைத் தவிர பிற மூன்று நிரந்தர உறுப்பு நாடுகளான பிரித்தானியா, பிரான்ஸ் மற்றும் அமெரிக்கா கடுமையான அழுத்தங்கள் ஐ.நா சபை மீது திணித்துக் கொண்டிருக்கின்றது என்பது தான் நம்பகரமான செய்தி. இதனை ரஷ்ய பிரதமர் விளடீமிர் பூட்டின் மற்றும் சீனத் தலைவர்கள் கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்திருக்கின்றார்கள். பான் கீ மூன் அறிவித்த அந்த குறித்த நிபுணர்கள் குழுவை அமைத்து அதன் அறிக்கையை பாதுகாப்புச் சபையில் சமர்ப்பித்தால், சீனாவும், ரஷ்யாவும் தமது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி முறியடிக்க திட்டமிட்டுள்ளார்கள் என்று செய்திகள் வந்து கொண்டிருக்கின்றது. இதில் வேடிக்கை என்னவென்றால் ரஷ்யா எப்படி சீனாவுடன் தோழமை கொண்டுள்ளதோ அதை விட நல்ல உறவை இந்தியா பல தசாப்தங்களாக ரஷ்யாவுடன் வைத்துள்ளது. ஆக ஈழத் தமிழருக்கு எதிராக நடக்கும் திரை மறைவு ராஜதந்திர களத்தில் இந்தியாவும் சீனா, ரஷ்யா, சிறிலங்கா நாடுகளுடன் கைகோர்த்துள்ளார்களா என்பது தான் இப்பொழுது எழும் கேள்வி. உண்மையிலயே இந்தியா ஈழத் தமிழர் மீது கரிசனை வைத்துள்ளது என்றால் ரஷ்யா சிறிலங்காவிற்கு அளிக்கும் ஆதரவை இந்தியாவினால் நிறுத்த முடியும். அதேவேளை ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகத்தின் இந்த செயற்பாடு குறித்து அணிசேரா நாடுகளின் தலைமைப் பொறுப்பை வகிக்கும் எகிப்து ஜனாதிபதி ஹொஸ்னி முபாரக்கும் தனது எதிர்ப்பை வெளியிட்டுள்ளார். இந்தியா நினைத்தால் சிறிலங்காவை கூண்டில் நிறுத்த முடியும். இந்தியாவின் முதல் எதிரியான சீனாவிடம் தோழமை கொண்டு செயல்படும் சிறிலங்காவை ஏன் இந்தியா இன்னும் ஆதரித்து இந்திய மக்களுடன் அறவிடப்பட்டும் வரிப்பணத்தை சிறிலங்காவிடம் கொடுப்பதென்பது இந்தியா தமிழினத்திற்கே துரோகம் செய்கின்றது. ஏறத்தாழ ஏழு கோடி தமிழ் மக்கள் தமது இறைமையான நாடு இந்தியா என்று இன்றும் போராடும் பொழுது அவர்களின் தொப்புள்கொடி உறவுகள் வேண்டி நிற்கும் நீதியை மேற்குலகம் வாங்கித்தரப் போராடும் போது இந்தியா வெறும் மௌனியாக இருப்பதாக காட்டிக்கொண்டு திரைமறைவில் ரஷ்யாவை தூண்டி சிறிலங்காவிற்கு உதவியாக இருக்கச் செய்வதானது நிச்சயம் இந்தியா மிகவும் கொடிய துரோகத்தை தமிழர்கள் மீது திணிக்கின்றது என்பதை அவர்கள் வெகு விரைவிலேயே உணருவார்கள். ஐ.நா சபையின் நாயகம் அறிவித்திருக்கும் சர்வதேச விசாரணைக் குழு ஈழத் தமிழரின் உண்மையான இழப்பை அம்பலப்படுத்தி அவர்களுக்கு நேர்ந்த மனித அவலத்தை உலக சட்ட வரைமுறையின் கீழ் விசாரணை செய்து குற்றவாளிகளை சர்வதேச கூண்டில் நிறுத்தி தண்டனை பெற்று தர மேற்குலகின் ஆக்க பூர்வமான செயல்பாடுகளுக்கு முட்டுக்கட்டையாக இருக்கும் ரஷ்ய-சீனா-சிறிலங்க கூட்டணியைத் தோற்கடித்து நீதியை நிலைநாட்ட புத்தரை மற்றும் காந்தியை உலகத்திற்கு தந்த பாரத தேசம் முன்வருமா அல்லது தமிழரை மீண்டும் புதை குழிக்குள் தள்ளும் நிலை வருமா என்பதைக் காலம் தான் பதில் சொல்ல வேண்டும். நன்றி: infotamil

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக