செவ்வாய், 16 மார்ச், 2010

முட்டாள் தவளையும் கருணாவின் முடிவும்

நாம் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் தமிழீழ விடுதலைப்போராட்டம் மே 19க்கு முன், பின் என இரண்டு காலக்கட்டங்களாக பிரித்தே தீரவேண்டும். காரணம் முள்ளிவாய்க்காலில் முடக்கப்பட்ட மாந்தநேயம், மனிதத்தின் பேரொளி, மனித பேரவலம், முடக்கப்பட்ட மாந்தநேயம், அழுகைக்குரல் என மனிதத்திற்கே சவால்விடும் அனைத்துப் பேரழிவுகளும் அங்கே நிறைவேறி முடிந்தது. இதற்கான காரணங்களை பல்வேறு தளங்களிலிருந்து பலவாறு அலசுகிறார்கள், ஆய்வுநடத்துகிறார்கள். ஒரு விடுதலை இயக்கத்திற்கான பின்னடைவு எதனால் ஏற்படுகிறது? என்பது குறித்தெல்லாம் பகுப்பாய்வு செய்கிறார்கள். ஆனால் மற்றப் போராட்டங்களில் இருப்பதைப் போன்றே தமிழீழ விடுதலைப் போராட்டத்திலும் துரோகங்கள் விஸ்வரூபம் எடுத்தன. துரோகத்தின் அடையாளங்கள் தம்மை மிகைப்படுத்திக் கொண்டன. நமக்கு இயல்பாகவே இலக்கியங்களும், கவிதைகளும், கதைகளும் நீதிநெறியை போதிப்பவையாகவே இருக்கின்றன. நாம் கட்டுரைகளாக வாசித்துக் கொண்டிருந்ததில் இருந்து சற்று மாறி, ஒரு கதை கேட்போம். ஒரு ஊர். பெயரை நீங்களே தீர்மானித்துக் கொள்ளுங்கள். அங்கே அழகிய காடு ஒன்று இருந்தது. அந்த காட்டிற்கு நடுப்பகுதியில் குளம், வற்றாத் தண்ணீருடன் எப்போதும் நீராதாரத்துடன் குளிர்ச்சியாக இருந்து கொண்டிருந்தது. அந்த குளத்திலே ஆயிரக்கணக்கான தவளைகள் மகிழ்ச்சியோடும், மனநிறைவோடும் வாழ்ந்து கொண்டிருந்தன. தவளைகளின் வாழ்வு, அதன் ஒவ்வொரு தன்மையும், அடையாளமும் அந்த தவளைகளுக்குள் உள்ள ஒற்றுமையை வெளிப்படுத்திக் கொண்டிருந்தன. அந்த குளத்தில் வசித்த தவளைகளுள் ஒன்று மிகத் தவறான பாதைகளுக்கு செல்ல தீர்மானித்தப் போது, தவளைகளின் கூட்டம் ஒன்றிணைந்து, தவறான பாதைக்குச் சென்ற அந்த தவளையை குளத்தைவிட்டு விலக்கி வைக்க முடிவு செய்தன. அதை தலைமையும் ஏற்றுக் கொண்டது. கெட்ட எண்ணம் கொண்ட அந்த தவளை குளத்தை விட்டு வெளியேறும்போது மனதிற்குள் சொல்லிக் கொண்டது. என்னையா வெளியேற்றுகிறீர்கள்? உங்களை ஒழிக்காமல் எனக்கு உறக்கம் இல்லையென. பாசம் மிகுந்த அந்த கூட்டத்தைவிட்டு வெளியேறிய தவளை, காட்டுப்பாதை வழியே நடந்து வந்துக் கொண்டிருந்தது. ஆனால் அதன் எண்ணமெல்லாம் தம்மை கூட்டத்தைவிட்டு வெளியேற்றிய அந்த தவளைக்கூட்டத்தை எப்படியாவது பழித் தீர்க்க வேண்டும் என்பதிலேயே உறுதியாக இருந்தது. அது காட்டை கடந்து கொண்டிருந்தபோது அதன் எதிரே ஒரு பாம்பு வந்தது. பாம்பைப் பார்த்த தவளை பரபரப்படையாமல், பாம்பின் நேர்எதிரே நின்று நீங்கள் மிக நல்லவராக தெரிகிறீர்கள். உங்களைப் போன்று திறன் வாய்ந்த, ஆற்றல் மிக்க ஒருவரை காண முடியாது. ஆனால் உங்களைப் பார்த்தால் பலமுறை தோல்விக் கண்டவர்களின் வாரிசாக தெரிகிறீர்கள். உங்களின் பட்டினித் தோற்றமே அதை வெளிப்படுத்துகிறது. வாருங்கள். எனக்குத் தெரிந்த ஒரு குளம் இருக்கிறது. அந்த குளத்தை நான் காட்டுகிறேன். அந்த குளத்திற்கு போகும் வழியையும் காட்டுகிறேன். அந்த குளத்தில் தாங்கள் எங்கே ஒளிந்து கொண்டிருந்தால் அங்கிருக்கும் தவளைகளை எல்லாம் பிடித்துக் கொல்லலாம் என்பதையெல்லாம் சொல்லித் தருகிறேன். நீங்கள் உங்கள் விருப்பம்போல் தவளைகளை கொன்று தின்னலாம். தவளைகளின் ரத்தத்தை நீங்கள் எவ்வளவாவது குடிக்கலாம் என்று சொன்னது. பாம்பிற்கு மகிழ்ச்சி நிலைகொள்ளவில்லை. சரி, வா என்று அழைத்துக் கொண்டு, குளத்திற்கான வழியை தவளையோடு சென்று அறிந்து கொண்டது. அது, தாம் தங்கும் இடத்தை தவளையிடம் கேட்டு தெரிந்து கொண்டது. பின்னர், ஒவ்வொரு நாளும் அந்த பாம்பு குளத்தில் இருந்த தவளைகளை தம் விரும்பிய வண்ணம் கொன்று, தின்று தீர்த்தது. குளத்தில் தவளைகள் ஒட்டுமொத்தமாய் ஒழிக்கப்பட்டது. பாம்பிற்கு ஒன்றும் புரியவில்லை. என்ன செய்வது என்று தெரியாமல் அக்குளத்தைவிட்டு வெளியேறி மீண்டும் காட்டு வழியே திரும்பி வந்துக் கொண்டிருந்தது.வரும் வழியில் தமது இனத்தையும் அந்த இன வாழ்வின் அடையாளத்தையும் காட்டிக் கொடுத்த தவளை அந்த பாம்பைப் பார்த்து, என்னய்யா, மகிழ்ச்சியாக இருக்கிறீர்களா? நிறைவாக சாப்பிட்டீர்களா? அனைவரையும் கொன்று தீர்த்தீர்களா? என்று பாம்பை பாராட்டும் முகமாக வாழ்த்தியது. ஆனால் அனைத்தையும் கொன்று தீர்த்த பாம்புக்கு பசி மீண்டுமாய் தூண்டியது. அது எங்கே சென்று இறை தேடுவது என்று புரியாமல் இருந்தபோது அந்த துரோகத் தவளை பாம்பிடம் வந்து செய்திகளை கேட்டவுடன் பாம்பிற்கு மகிழ்ச்சி தாளவில்லை. ஒரே தாவலில் அந்த தவளையை கவ்வி, விழுங்கத் தொடங்கியது. பாம்பின் வயிற்றுக்குள் இறங்குவதற்கு முன்னால் அந்த தவளை நினைத்துக் கொண்டது. ஐயோ, நம் இனத்தை காட்டிக் கொடுத்தோமே? அந்த துரோகத்திற்கு விலையாக நமது உயிரே பறிப்போகிறதே? என்று கதறியபடி செத்துப் போனது. இந்தக் கதை யாருக்குப் புரிகிறதோ இல்லையோ. நிச்சயம் கருணாவுக்குப் புரியும். ராஜபக்சேவுக்கு புரியும். வாசிக்கும் உங்களுக்கும் புரியும் என்று நினைக்கிறேன். -கண்மணி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக