செவ்வாய், 16 மார்ச், 2010

பிரெட்றிக்கா ஜெய்ன்ஸ்

சண்டே லீடர் பத்திரிகையில் கடந்த 28ம் திகதி எழுதப்பட்டிருந்த கட்டுரையில் பிரதி பிரதம நீதியரசர் சிறானி பண்டாரநாயக்கவை அவமானப்படுத்தும் வகையிலான கருத்துக்கள் வெளியிடப்பட்டிருந்தது. இக்கருத்துக்கள் தொடர்பாக உச்ச நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டதுடன் நேற்று வழக்கு விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டபோது கட்டுரையின் உரிமையாளர் பிரெட்றிக்கா ஜெய்ன்ஸ் மன்றில் ஆஜராகி மன்னிப்பு கோரினார். அவர் சார்பாக ஆஜராகிய சட்டத்தரணிகள், தமது கட்சிக்காரர் தவறை உணர்ந்துள்ளதாகவும் , தவறுக்காக எவ்வித நிபந்தனைகளும் இல்லாமல் மன்னிப்பு கோருவதாகவும் தெரிவித்துள்ளனர். அதேநேரம் கட்டுரையில் உள்ள பாரதூரமான விடயங்களை அவர் பின்னரே உணர்ந்துள்ளதாகவும் கூறினர். அவருடைய மன்னிப்பு கோரலை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், மன்னிப்புகோரும் விடயத்தினை சண்டே ரைம்ஸ் பத்திரிகையின் முதற்பக்கத்தில் பிரசுரிக்க உத்தரவிட்டுள்ளதுடன் கட்டுரையில் உள்ள தவறுகளைத் திருத்தி அவற்றை முன்பக்கத்தில் பிரசுரிக்கவும் உத்தரவிட்டுள்ளது. பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ச வெள்ளைக் கொடியுடன் சரணடைந்தவர்களை சுட்டுக்கொல்லுமாறு உத்தரவிட்டதாக ஜெனரல் பொன்சேகா தெரிவித்தார் என செய்தி வெளியிட்ட பிரெட்றிக்கா ஜெய்ன்ஸ், அவ்வாறு அவர் அதை தெரிவித்தார் என்பதற்கான ஒலிப்பதிவு தன்னிடம் உண்டு என தெரிவித்தபோதும் இதுவரை அவர் அதை வெளியிடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக