வெள்ளி, 9 ஏப்ரல், 2010

நாடாளுமன்றதேர்தலில் ஆளும்கட்சி முன்னணியில் ?

சிறீலங்காவில் நேற்று நடைபெற்ற பொதுத்தேர்தலில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னனி பெரும் வெற்றி பெற்றுள்ளது. 117 ஆசனங்களை கைப்பற்றியுள்ள ஆளும் கூட்டணி 24 தேசியப் பட்டியல் ஆசனங்களையும் பெறும் சாத்தியங்களை கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது: சிறீலங்காவில் நேற்று வியாழக்கிழமை (8) நடைபெற்ற பொதுத்தேர்தலில் சிறீலங்கா அரச தலைவர் மகிந்தா ராஜபக்சா தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னனி பெரும் வெற்றி பெற்றுள்ளது. 225 ஆசனங்களை கொண்ட சிறீலங்கா நாடாளுமன்றத்திற்கான தேர்தலில் 196 உறுப்பினர்கள் நேரிடையாக தேர்ந்தெடுக்கப்படுவதுண்டு. நேற்று நடைபெற்ற தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணி 117 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது, மேலும் 24 தேசியல் பட்டியல் உறுப்பினர்களையும் அது பெறக்கூடும் என தெரிவிக்கப்படுகின்றது. எனவே மொத்தம் 141 ஆசனங்களை பெற்று இலகுவாக அரசு அமைக்கும் சாத்தியங்களை அது ஏற்படுத்தியுள்ளது. மேலும் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெறுவதற்கு அதற்கு 9 ஆசனங்களே தேவை என்ற இலகுவான இலக்கும் எட்டியுள்ளது. சிறீலங்காவின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி 46 ஆசனங்களையும், தமிழ்த் தேசிய கூட்டமைப்பு 12 ஆசனங்களையும் கைப்பற்றியுள்ளன. ஜெனரல் சரத் பொன்சேகாவின் ஐனநாயக தேசிய முன்னனி 5 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது. எனினும் கண்டி மற்றும் திருமலை ஆகிய மாவட்டங்களில் இறுதி முடிவுகள் இதுவரை அறிவிக்கப்படவில்லை. தேர்தல் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதால் அவை தாமதமாகி வருவதாக தேர்தல் திணைக்கள வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்த தேர்தல் வெற்றி என்பது மகிந்தாவின் போர் வெற்றிக்கு கிடைத்த மிகப்பெரும் பரிசு என மகிந்த ராஜபக்சாவின் பேச்சாளர் சந்திரபாலா லியனகே தெரிவித்துள்ளார். சிறீலங்காவின் தேர்தல் வரலாற்றில் எந்த கட்சியும் இவ்வாறான வெற்றியை பெற்றதில்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார். ஆனால் தேர்தலில் மக்கள் வாக்களித்த வீகிதம் மிகவும் குறைவானது என தகவல்கள் தெரிவித்துள்ளன. மேலும் தேர்தல் வன்முறைகளை தொடர்ந்து 22 தேர்தல் தொகுதிகளில் இரு தொகுதிகளில் மீள் வாக்கெடுப்பு நடைபெறலாம் என்ற சந்தேகங்களும் ஏற்பட்டுள்ளன. அவ்வாறு நடைபெற்றால் எதிர்வரும் 19 ஆம் நாளே 16 ஆசனங்கள் தொடர்பான அறிவித்தல்கள் வெளிவரும். இதனிடையே மேலும் 9 உறுப்பினர்களின் ஆதரவுகளைப் பெற்று மகிந்தா ராஜபக்சா மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்றால் அவர் நாட்டின் அரசியல் யாப்புக்களில் சில மாற்றங்களை கொண்டுவரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. அதாவது ஒருவர் இரு தடவைகள் மட்டும் தான் அரச தலைவராக இருக்கலாம் என்ற அரசியல் சட்டத்தை மாற்றி ஒருவர் பல தடவைகள் அரச தலைவராக இருக்கலாம் என்ற சட்டத்தை அவர் கொண்டு வரலாம் என அனைத்துலக ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. எனினும் தற்போதைய அரசின் நடவடிக்கைகளில் மக்கள் நம்பிக்கை இழந்துள்ளதை தான் மிகவும் குறவான மக்கள் வாக்களித்தது எடுத்துக் காட்டுவதாக அரசியல் ஆய்வாளர் விக்டர் இவான் தெரிவித்துள்ளார். 50 விகிதமான மக்கள் வாக்களிப்பது தொடர்பில் கவலை கொள்ளவில்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார். புதிய அரசுக்கு மக்களிடம் உள்ள ஆதரவு தொடர்பில் சந்தேகங்கள் ஏற்பட்டுள்ளதாக மனித உரிமை செயற்பாட்டாளரும், அரசியல் ஆய்வாளருமான நிமல்கா பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். அதாவது அரைப் பங்கு மக்கள் வாக்களிக்கவில்லை என்பது அரசுக்கு உளவியலான ஆதரவுகளை மக்கள் வழங்கப்போவதில்லை என்பதை எடுத்துக் காட்டுவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். விடுதலைப்புலிகளை தோற்கடித்த தலைவர் மகிந்தா என்பதால் தான் அவருக்கே வாக்களித்ததாக தென்னிலங்கையை சேர்ந்த செத்மினி சற்துரிகா (28) தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக