சனி, 8 மே, 2010

11 ஆயிரத்திற்கும் அதிகமான எமது உறவுகளை யாருடைய கண்களுக்கும் தெரியாமல் இன்னமும் சிறைகளுக்குள் மறைத்து வைத்து சித்திரவதை செய்து தமது காழ்ப்புணர்வை வெளிப்படுத்தி வருகின்றது சிறிலங்கா தேசம். எம்மீதான இத்தனை கொடுமைகள் புரியப்பட்டு கிட்டத்தட்ட ஒரு வருடம் ஆகின்றது. இந்த ஒரு வருட காலத்தில்; எமது இனத்தின் மீது புரியப்பட்ட கொடுமைகளுக்கு எதிராக அல்லது இந்த அநீதிகளுக்குப் பதிலாக எமக்கு இழைக்கப்பட்ட அவமானங்களுக்கு எதிராக நாம் என்ன செய்திருக்கின்றோம்? மாவிலாறு முதல் முள்ளிவாய்கால் வரை அநியாயமாக மரணித்த எமது உறவுகளின் ஆத்மாக்கள் சாந்தி அடைய நாம் என்ன செய்திருக்கின்றோம்? புலம்பெயர்ந்த நாடுகளின் தெருக்களில் நின்று கோஷம் போட்டிருக்கின்றோம். எம் தலைவன் காட்டிய வழியில் தொடர்ந்து நடப்போம் என்று இணையத் தளங்களிலும் வானொலி தொலைக்காட்சிகளிலும் வீர வசனம் பேசி இருக்கின்றோம் ஐ.நாவுக்கும் ஒபாமாவுக்கும் கடிதங்கள் போட்டிருக்கின்றோம். எம்மோடு உடன் இருந்த சிலருக்கு துரோகப்பட்டம் கட்டியிருக்கின்றோம் பல உயரிய தியாகங்களை மறைத்து அந்தத் தியாகங்களைக் கொச்சைப்படுத்தியிருக்கின்றோம். முழு மூச்சாக த.தே.கூட்டமைப்பை பிழவுபடுத்தியிருக்கின்றோம்;. நடிகர் விஜய்யின் படத்தை புறக்கணித்து இருக்கின்றோம். இலங்கைக்கு ஒரிரு தடவைகள் இரகசியமாகப் போய் வந்திருக்கின்றோம். புதிய புதிய இணையத் தளங்களைத் திறந்து ஒருவர் மீது ஒருவர் காறி உமிழ்ந்துகொண்டிருக்கின்றோம். இவற்றைத் தவிர எமது இனத்தின் மீது புரியப்பட்ட கொடுமைகளுக்கு எதிராக கடந்த ஒரு வருட காலத்தில் நாம் வேறு ஏதாவது செய்திருக்கின்றோமா என்று யாராவது கேட்டால் சிறிது நேரம் யோசித்துப் பார்த்துவிட்டு இல்லை என்றுதான் பதில் கூறவேண்டி இருக்கின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக