சனி, 8 மே, 2010

புலிகள் தோற்கவில்லை .........................


நான்காம் கட்ட ஈழப்போர் ஒரு கசப்பான அனுபவத்தோடு நிறைவடைந்திருக்கிறது. இது ஈழ விடுதலையை பின்னுக்கு தள்ளியதாகவோ அல்லது போராட்டமே நிறைவடைந்ததாகவோ நாம் கருத்தில் எடுத்துக் கொள்ள முடியாது. ஈழ விடுதலைப் போரின் எதிர்காலம் குறித்து ஏராளமான வினாக்கள் நம்முன் விரிந்திருக்கிறது. தற்போதைய நிலையில் இன ஒடுக்குமுறையின் தனிபெரும் தலைவராக திகழ்ந்த ராஜபக்சே மீண்டும் இலங்கையின் அதிபராக பொறுப்பேற்க இருக்கிறார். இன்னும் இரண்டு ஆண்டுகள் தமக்கான பதவிகாலம் இருந்தபோதும் கூட இன ஒடுக்கு முறையின் அடையாளமாக அதன் வெற்றி நாயகனாக தம்மை முழுமைப்படுத்திக்கொண்டு தேர்தல் களத்திற்கு வந்தார். அவரோடு கைகோர்த்து அவரின் சாட்டையாக இருந்த சரத்பொன்சேகா அவரின் எதிரணியின் வேட்பாளராக இருந்து தோல்வியடைந்திருக்கிறார். இது ஒரு பகுதி. வேறொரு பகுதியில் திறந்த வெளி சிறைச்சாலையில் தமிழர்கள் இன்னும் கைதிகளாய் தொடர்கிறார்கள். மற்றொரு பகுதி தமிழர்கள் அயல்நாடுகளில் புலம்பெயர்ந்து சென்று தம்முடைய வாழ்வைத்தேடி வாழ்கிறார்கள். இந்நிலையில் தமிழீழம் குறித்த உறுதியோடு இருந்த அனைவரும் இனி தமிழீழம் தொடருமா? தனியரசு அமையுமா? என்ற தனியாத தாகத்தோடு ஏங்கிக் கொண்டிருக்கிறார்கள். இனி ஒரு வெற்றி வருமா? என்ற எதிர்பார்ப்பு எல்லோர் மனதிலும் ஒரு ஏக்கமாய் எதிரொலித்துக்கொண்டிருக்கிறது. இதைவிட பெரும் கேள்வி தமிழீழ விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்து நடத்திய மேதகு பிரபாகரன் அவர்களின் அடுத்தக் கட்டளை எங்கிருந்து உதிக்கும். இனி அவர்கள் மரபு வழி சமரிலிருந்துமாறி கரந்தடி தாக்குதலுக்கு தம்மை அர்ப்பணிப்பார்களா? என்கிற எதிர்பார்ப்பெல்லாம் தமிழீழ தனிஅரசு அமையவேண்டும் என்கிற எதிர்பார்ப்புள்ள எல்லோருக்கும் ஏக்கமாக இருக்கிறது. ஆனால் இப்போது நாம் செய்ய வேண்டியது தமிழீழ தலைமை அடுத்து என்னச் செய்யும். அல்லது இத்தோடு இந்தபோர் முடிந்துவிட்டதா? என்ற கேள்விகளை எல்லாம் எடுத்து மூட்டைக்கட்டிவிட்டு குழப்பங்களுக்குள் நம்மைபோட்டு கட்டி வைத்துவிடாமல் தெளிவாக வெளிவரவேண்டியதுதான் நம்முடைய தற்போதைய அவசிய செயலாகும். காரணம் நமக்குள் ஏற்படும் கருத்துச் சிதைவுகள், களமாறுபாடுகள், எதிரிகளுக்கு தொண்டாற்ற ஏதுவாகிவிடும். நாம் எந்த நிலையிலும் பகைவர்களுக்கு தொண்டுச் செய்ய அல்லது அவர்களுக்கு பயன்தரும் வகையில் நடக்க முன்வரக்கூடாது. ஆகவே, உடனடியாக இந்த நொடியே நாம் செயல்பட வேண்டும். செயல்பட வேண்டும் என்பது மட்டுமே நமது எண்ணமாக இருக்கவேண்டும். அனைத்தும் முடிந்துவிட்டது என நாம் கைகளைக் கட்டிக்கொண்டு வானத்தைப் பார்த்துக் கொண்டிருக்கக்கூடாது. இப்போது நடந்த இத்தோல்வியினால் நமக்கான இலட்சியம் அல்லது எண்ணம் நம்முடைய எதிர்பார்ப்பு தோல்வி அடைந்ததா என்றால் அறுதியிட்டுச் சொல்லலாம் இல்லை. இல்லவே இல்லை என்பது தான். எந்த ஒரு போராட்டமும் தோல்வி அடையுமா அல்லது வெற்றி அடையுமா என்று எதிர்பார்த்து முடிவு தெரிந்தப்பின் களம் காண்பதல்ல. அப்படியானால் அது போராட்டமும் அல்ல. அடிப்படையில் நமக்கான தேவை இருக்கிறது. அதை மீட்டெடுக்க வேண்டும். அல்லது அதை பெற வேண்டும். அதற்காக நாம் போராட வேண்டும் என்பதே போர்முறையின் இலக்கணமாக இருக்கிறது. கடந்தகால வரலாறு பலமுறை களதோல்வி கண்டிருக்கிறது. அந்த களதோல்வி மட்டுமே ஒரு போராட்ட லட்சியத்தை ஒடுக்கிப்போட்டது கிடையாது. மேலும் நம்முடைய குறிக்கோளை தேவையற்றது என மாற்றியதும் கிடையாது. நமக்கான தேவை தமிழீழ தனியரசு. இந்நேரத்தில் நாம் சிங்கள இனப்பகையரிடம் நமக்கான சலுகைகளை கையேந்தி பெறுவதற்கு இக்களத்தோல்வியை காரணமாக்கிவிடக் கூடாது. இது நம்முடைய லட்சியத்தை நம்முடைய தாகத்தை பெரும் பின்னடைவை ஏற்படுத்த ஒரு காரணியாகிவிடும். அல்லது இதையே காரணம் காட்டி நீங்கள் ஒன்றிணைந்து வாழுங்கள், ஒரு தேசியத்தின் குடையின் கீழ் நில்லுங்கள் என்று யாராவது வற்புறுத்தினால் அல்லது விளக்கம் கூறினால் அவர்களை நீங்கள் எளிதாக அடையாளம் கண்டுக் கொள்ளுங்கள். இந்த இனத்தின் மாபெரும் துரோகி அவர்கள்தான். இப்பொழுது நம்முடைய இனத்திற்கெதிரான தமிழீழ விடுதலைக் கொள்கையின்மேல் உறுதியான நம்பிக்கை நமக்குள் இன்னும் இன்னுமாய் ஆழமாக வேரூன்றவேண்டும். சிறு சிறு துளிகளிலிருந்து ஒரு மாபெரும் கடல்போல் தமிழ் மக்கள் அனைவரின் எண்ணங்களின் சங்கமமாக இந்த தமிழீழம் என்கிற கனவு மேலும் மேலுமாய் ஓங்கி உயரவேண்டும். தமிழீழத்திற்கெதிரான இனஒடுக்குமுறை நடவடிக்கை எடுத்த போர் குற்றவாளிகளை உலக சமூகத்திற்கு நாம் அடையாளம் காட்டவேண்டும். இந்த அடக்குமுறையாளர்களை தம்முடைய ஆயுதங்களாலும், கேடயங்களாலும் காத்துநிற்கும் இந்திய அரசை உலக நாடுகளின் அரங்கில் தோலுரிக்க வேண்டும். சிங்கள இனவெறி அரசின்மீது சிறு கீறல் விழாமல் காத்து நின்ற இந்திய அரசின் பார்ப்பனிய ஏகாதிபத்திய பொய்முகத்தை தோலுரிக்கவேண்டும். போரை நடத்துவதற்கு மட்டுமல்ல, அங்கே நடைபெற்ற இனப்படுகொலையை மறைப்பதற்கும் இப்பகையாளிகளை காப்பதற்கும் இந்திய அரசு மேலும் மேலும் உதவி செய்துக் கொண்டிருக்கிறது. இப்போர் நிகழ்ந்த இறுதிகட்ட நிகழ்வில் முள்ளி வாய்க்காலில் 20,000 தமிழ் மக்கள் ஒரே நாளில் கொலை செய்யப்பட்டார்கள். இக்கொலைக்கு இந்திய அரசு முழுகாரணமாக இருந்ததென இந்திய அரசின் அமைதிப்படை தளபதியாக செயல்பட்ட அசோக் மேத்தா குற்றம் சாட்டியபோது இந்திய அரசிடம் இருந்து அமைதியே பதில் மொழியாக வந்தது. இப்போது தமிழர்களின் இத்தாழ்நிலையை சிங்களம் பயன்படுத்திக் கொண்டு இலங்கைத்தீவை முற்றிலுமாக ஒரு சிங்கள இனவெறிநாடாக அங்கீகரிக்கும் செயலை முழு ஈடுபாட்டோடு செயல்பட தொடங்கும். அதற்காக சொந்த நாட்டுமக்களை அகதிகளாக அறிவித்து உலக நாடுகளிடம் பிச்சை ஏந்தி நிற்கும் ஒரு பயங்கரவாத கட்டமைப்பை அழிப்பதற்காக நாங்கள் நடத்திய போரில் ஏராளமான பொருட்சேதம் ஏற்பட்டிருக்கிறது. இந்த நாட்டை மறுகட்டமைப்பு செய்ய நிதி வேண்டும்என உலகமெல்லாம் சென்று பரப்புரை செய்யப்போகிறது. தமிழீழ மக்களின் வாழ்வை நிலைநிறுத்துவதாக சொல்லி உலக நாடுகளிடம் பெறும் நிதி ஆதாரத்தைக் கொண்டு சிங்கள பேரினவாதத்தை நிலைநிறுத்த ராஜபக்சே அரசு மேலும் வீச்சோடு பணியாற்றப்போகிறது. பன்னாட்டு செஞ்சிலுவை சங்கங்களும் உலக நாடுகளும் இந்த உண்மைகளை அறிந்துகொள்ளும் விதத்தில் நாம் முன்னைக்காட்டிலும் வேகமாக பணியாற்ற வேண்டிய தருணம் இது என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. ஆகவே, இத்தனைக்காலம் விழிப்போடு இருந்தோம் என்பதல்ல. இப்போது வேகமாக இருக்கவேண்டிய கட்டாயம் நமக்கு இருக்கிறது. போரில் பலியான, காயமுற்ற, வீடிழந்த ஈழத்தமிழர் ஒவ்வொருக்கும் சிங்கள அரசு கட்டாயமாக தண்டம் கட்ட வேண்டும் என உலக அரங்கில் நாம் ஓங்கி குரல் கொடுக்க வேண்டும். இதற்காக உலக நாடுகள் முழுக்க மனித உரிமை ஆர்வலர்களையும் தமிழீழ ஆதரவாளர்களையும் ஒன்றிணைத்து இந்த ஒருங்கிணைப்பின் மூலமாக மேலும் இப்போராட்டத்தை செரிவாக்கி வலுபெற செய்யவேண்டும். வெறும் கருவி களத்திலே நாம் தோற்றுவிட்டோம் என்ற தாழ்வு மனப்பான்மை நமக்குள் மேலோங்கக்கூடாது. அப்போது ஏற்படுத்திய அக்காயம் எல்லோர் மனதிலும் ஒரு வேதனையை ஆறா வடுவை அழுத்தமாக பதிவு செய்திருக்கும் என்பதில் இருவேறு கருத்துக்கு இடமில்லை. இப்போதுதான் நமக்கும் தெரிகிறது தமிழ்நாட்டுக்கென்று ஒரு அயலுறவுத்துறை அமைச்சர் இருந்திருந்தால் பிரணாப் முகர்ஜியை கொழும்பு செல்லுங்கள் என்று கேட்டிருப்போமா? அது நம்முடைய கையறு நிலைதான். நமக்கான ஒரு நாடு இல்லாத காரணத்தால் நாம் இந்தியர்களை கேட்டுக்கொண்டிருக்க வேண்டிய கட்டாயத்தை புரிந்து கொள்ள முடிந்தது. இலங்கையில் அல்ல, இந்தியாவிலும் நாம் அடிமைகளாய் இருப்பதை அந்த நிகழ்வு நமக்கு புரியவைத்தது. ஆகவே, அடிமைகளுக்காக அடிமைகளாகிய நாம் போராட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். இந்த போராட்டம் முள்ளிவாய்க்காலோடு முடக்கப்பட்டதல்ல. முள்ளிவாய்க்காலிலிருந்து முளைக்கபோவது.
 எந்த போராட்டமும் ஒரு அழிப்பின்மூலம் நிறைவடைந்ததல்ல. எந்த இயக்கமும் எந்த அடக்குமுறையாளர்களிடமும் தோற்று போனதில்லை. இப்போதும் புலிகள் வெற்றியடைந்திருக்கிறார்கள். இந்த வெற்றி இனிவரும் போராட்டத்திலே வெளிப்பட போகிறது. அதற்கு வெறும் ஈழத்தமிழர்கள் மட்டும் களத்தில் இருக்கக்கூடாது. உலகெங்கும் வாழும் தமிழர்கள் ஒன்றிணைந்து களத்திற்கு வரவேண்டும். இந்தியா, பாகிஸ்தான், சீனா, பிரிட்டன் போன்ற நாடுகள் கரம் கோர்த்ததே புலிகளின் வெற்றிக்கு அடையாளமாக இருந்தது என்பதை நாம் புரிந்து கொள்ளவேண்டும். ஆகவே தளரவேண்டாம். புதிதான களம் அமைப்போம். தமிழீழம் தமிழர்களின் தாகம் அல்ல. அது உயிராதாரம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக