செவ்வாய், 25 மே, 2010

உணர்வலைகள்......................?

2009 மே மாதத்தில் விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசாங்கத்துக்குமிடையிலான யுத்தம் முடிவுக்கு வந்தது. ஆனால், இந்த இறுதி யுத்தம் மிகப் பெரிய மனிதப் பேரழிவுகளை ஏற்படுத்தியது. உலகத்தின் கனத்த மௌனத்தின் முன்னே, அந்த மௌனத்தைச் சாட்சியாக வைத்து நடத்தப்பட்ட மனிதப் பேரழிவானது, மனித நாகரிகத்தையே தலைகுனியவைக்கும் அளவுக்குக் கொடுமையானது.

மனிதர்கள் எந்த வகையிலும் பெறுமதியற்றவர்கள் என்று ஆக்கப்பட்ட கணங்கள் அந்தப் போர்க்களத்தில், அந்த நாட்களில் நடந்தேறியது. போர் வெற்றி எல்லா விழுமியங்களையும் அழித்த நாட்கள் அவை.
அந்த நாட்களில், அந்தக்கொலை நிலத்தில் சாவுக்கு மத்தியில் வாழ்ந்து தப்பிய மனிதர்களின் உணர்வலைகள் இவை. தாங்கள் கடந்த ஆண்டு அந்தப் போர் நிலத்தில் எப்படியான நிலையில் வாழ்ந்தோம் என்பதை இப்போது இங்கே பகிர்ந்து கொள்கிறார்கள்.
சாப்பாடு இல்லை ஆனால் எறிகணைகள் தாராளமாக வரும். (வை.சிதம்பரநாதன்-கிளிநொச்சி)
என்னுடைய வாழ்வில் நான் ஒரு போர்க்களத்தைச் சந்திப்பேன் என்று எதிர்பார்க்கவேயில்லை. நான் போர்க்களத்திற்கு போகாதபோதும் போர் என்னை நோக்கி வந்தது. என்னை நோக்கி மட்டுமல்ல, என்னைப் போலிருந்த ஆயிரக்கணக்கான, இலட்சக்கணக்கான மக்களை நோக்கியும் வந்தது. நாங்கள் போரால் சுற்றிவளைக்கப் பட்டிருந்தோம். போர்க்களம் என்றால் அது சாக்களம்தான்.
அதாவது, மரணக்களம். அந்த மரணக் களத்தில்தான் நாங்கள் கடந்த வருடம் வாழ்ந்தோம். செத்துச் செத்து வாழ்ந்தோம். சாப்பாட்டிற்காகவும் குளிப்பதற்காகவும் நித்திரை கொள்வதற்காகவும் சமைப்பதற்காகவும் சமையல் பொருட்களை வாங்குவதற்காகவும் பிள்ளைகளைப் பாதுகாப்பதற்காகவும் என்று ஒவ்வொன்றுக்காகவும் செத்துச் செத்து வாழ்ந்தோம்.
முதலில் நாங்கள் எங்களைப் பாதுகாப்பதற்காக என்று பாதுகாப்பான இடங்களை நோக்கி இடம்பெர்ந்தோம். அப்போது எங்களுடன் எங்கள் உடைமைகளையும் எடுத்துச் சென்றோம். ஆனால், இந்த உடைமைகளே எங்களுக்கு சுமையாக மாறியது என்றால் நம்புவீர்களா? ஆனால், அப்படித்தான் நடந்தது. ஒரு கட்டத்தில் எங்களுடைய உடலே சுமையாகிவிட்டது. உடல் இருந்தபடியால்தானே எனக்கு காயம் ஏற்பட்டது. காயம் வந்தபடியால் தானே வலியும், வேதனையும் வந்தது. அப்போது உயிரே ஒரு சுமைபோலத் தான் எனக்குத் தோன்றியது. என்ன மனித வாழ்க்கை இது என்று எண்ணினேன். வாழ்வதைவிட சாவது மேல் என்று தோன்றியது. எதற்காக?
இப்படி பிடிவாதமாக போர் செய்கிறார்கள்?
சனங்களைப் பாதுகாக்கவும் என்று சொல்லிக் கொண்டே சனங்களைக் கொன்று குவித்த கொடுமையை நான் என் வாழ் நாளில் கண்டேன். மதகுருக்கள்கூட எதுவும் செய்ய முடியாத நிலை. அவலத்திற்குள் தள்ளப்பட்டிருந்தார்கள். நான் எவரையும் நம்ப முடியாத, யாரையும் நம்பிப் பிரயோசனம் இல்லை என்ற ஒரு நிலைக்குத் தள்ளப்பட்டேன். இப்படித்தான் எல்லா சனங்களும் இருந்தார்கள். சாப்பாடு இல்லை. ஆனால், எறிகணை கள் தாராளமாக வரும். வாழ்வதற்கு ஒரு வழியும் இல்லை. ஆனால், சாவுகள் தாராளமாக நடக்கும்.
எதைப் பற்றியும் யாரிடம் கேட்க முடியாது. எல்லாருக்கும் மேலாக சாவு அச்சுறுத்திக் கொண்டிருந்தது. சனங்களின் அவலக்குரலும் எறிகணைகளின் வெடி ஒலியும் வேறு விமானத்தின் இரைச்சலும் எந்த நேரம் உயிரைத் துளைத்துக் கொண்டேயிருந்தன.

அந்த மரண காலத்தில் இருந்து எப்போது விடுபடுவேன் என்று இருந்தேன். அது ஒரு நரக உலகம். அந்த உலகத்தில் இருந்து தப்புவேன் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை. இப்போது நான் உயிருடன் இருப்பது ஒரு அதிசயமான நிகழ்ச்சிதான். ஆனால், அந்த வாழ்க்கையின் அனுபவம் எங்களுக்குப் பல பாடங்களைக் கற்றுத்தந்தது. முள்ளிவாய்க்காலை விட்டு வெளியேறியபோது என்னால் எதையும் நம்படியவில்லை.
அது ஒரு கனவுபோலத்தான் இன்றைக்கும் இருக்கிறது.
தண்ணீர் எடுப்பதற்கும் உயிரை கொடுக்கவேண்டியிருந்தது. (பூ.சபாநாந்த் கோப்பாய்)
என் வாழ்வின் இறுதி நாட்கள் முள்ளிவாய்க்காலுடன் முடிந்துவிடும் என்ற எண்ணமே என் மனதில் அலைமோதியது. அதிலிருந்து மீள்வதற்காக என்னால் என்ன விலை கொடுக்க முடியுமோ அதைக் கொடுத்தேனும் அதிலிருந்து விடுபடவேண்டும் என்ற எண்ணமே தினம் தினம் மேலோங்கியிருந்தது. ஆனால் எங்களால் அவ்வாறு அதிலிருந்து இலகுவாக விடுபட முடியவில்லை.
அதன் வலி, வேதனை இன்றும் தொடர்வதாகவே நான் உணர்கிறேன். அதாவது, வெடிச்சத்தம் கேட்டவுடன் தரையில் படுக்கவோ அன்றி பதுங்கவோ எண்ணத் தோன்றுகிறது. ஒரு மனிதனின் வாழ்வில் குடி தண்ணீர் எவ்வளவு முக்கியம் என்பதை எல்லோரும் அறிவர். அந்த தண்ணீரை எடுக்க வேண்டுமாயின் அதற்கு நான் கொடுக்க வேண்டிய விலை உயிரோ அன்றி காயப்படுதலோ ஆகும்.
யானை வரும் பின்னே மணி ஓசைவரும் முன்னே என்று சொல்வார்கள். அதுபோல எங்கள் வாழ்வும் அவ்வாறே அங்கு அமைந்திருந்தது. செல் குத்தியாச்சு. விழுந்துவிட்டது. வெடித்துவிட்டது. விழுந்துபடுங்கோ என அங்கு வாழ்ந்த எல்லோரும் எந்தத் துப்பாக்கியால், ஏவுகணையால், பீரங்கியால் அடிக்கிறார்கள் என்பதைக் கணிப்பெடுப்பர். போரில் வெறும் மக்களாய் இருந்த எங்களுக்கு, இன்று அது தொடர்பாக ஒரு வகுப்பு நடத்தச் சொல்லிக் கேட்டால் நடத்துமளவிற்கு எங்களை வன்னி இறுதி யுத்தம் கொண்டு சென்றுள்ளது.
இன்று எங்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்த, தொழிலின்றி அடுத்தவரை நம்பியிருக்கும் நிலை உருவாகியுள்ளதை எண்ணி வேதனை கொள்வதைத் தவிர வேறு என்ன செய்ய முடியும்? மறுவாழ்வு எடுத்த மாதிரி, அந்த இறுதி நேரத்தில், இறுதிக் கணத்தில் இருந்து மீண்ட எங்களுக்கு எதிலிருந்தும் மீள்வோம் என்ற நம்பிக்கையும் பிறந்திருப்பது எமக்கு ஒரு சிறப்புத்தான்.
அப்பாவையும் தம்பியையும் கணவரையும் புதைப்பதற்கு கஸ்ரப்பட்டேன். (செ.தமிழ்விழி-மாங்குளம்)
எங்களுடைய வாழ்க்கையே தலை கீழாக மாறிய இடம் இந்த முள்ளிவாய்க்கால். நாங்கள் வரலாற்றில் மறக்கமுடியாத சோகங்களும் அவலங்களும் நடந்த இடம் இந்த முள்ளிவாய்க்கால். இந்த முள்ளிவாய்க்கால் ஒன்றும் பெரிய இடமல்ல. மிகச் சாதாரணமான சிறியகிராமம்.
ஆனால், வரலாற்றில் மிகப்பெரிய அவலம் நடந்ததால் இப்ப முள்ளிவாய்க்கால் எல்லாருடைய வாயிலும் நினைவிலும் அடிபடுகிறது. முள்ளிவாய்க்காலில்தான் நான் என்னுடைய கணவரையும் என்னுடைய அப்பாவையும் தம்பியையும் பறிகொடுத்தேன். அதுவும் அந்தப்போர் முடிந்து சனங்கள் எல்லாம் பாதுகாப்பாக அங்கிருந்த வெளியேறுவதற்கு நான்கு ஐந்து மணித்தியாலயங்கள் இருக்கும் போதுதான் இவர்கள் இறந்தார்கள்.
(அவர் மேலும் சொல்ல முடியாமல் சற்று நேரம் அழுகிறார். பின்னர் சற்றுநேர மௌனத்துக்குப்பின்னர் கதைத்தார்) இறந்தவர்களை எப்படிப் புதைப்பது? ஒரு எறிகணை வீச்சில் அவர்களைப் பறிகொடுத்தோம். அதுவரையும் எப்படி, எவ்வளவு கஷ்டங்களை எல்லாம் சமாளித்துக் கொண்டு பாதுகாப்பாக இருந்தோம். ஆனால், இறு தியில் எல்லாவற்றையும் பறி கொடுத்து விட்டோம்.
யுத்தம் எப்படியும் எதிர்பாராத முடிவுகளோடுதான் முடியும். நாங்கள் இதற்குள்ளிருந்து எப்படியாவது தப்பிவிடவேண்டும். பிள்ளைகளை எப்படியாவது காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்று அடிக்கடி என்னுடைய கணவர் சொல்வார். ஆனால், அவர் ஆசைப்பட்டதைப் போல நான் பிள்ளைகளைக் காப்பாற்றி விட்டேன். அதேவேளை அப்பாவையும் தம்பியையும் கணவரையும் இழந்து விட்டேன். இதை என் கண்ணுக்கு முன்னே கண்டேன். அந்தக் காட்சியை என்னால் மறக்கவே முடியவில்லை. அவர்களை அங்கே புதைப்பதற்காக அப்பொழுது, அந்தச் சந்தர்ப்பத்தில் மிகவும் கஷ்டப்பட்டேன்.
அப்போது எல்லோருக்கும் அங்கிருந்து வெளியேறிவிட வேண்டும் என்ற ஒரே நோக்கம்தான் இருந்தது. அதனால், யாரும் உதவ முன்வரவில்லை. அதை நான் பிழை என்று இப்பொழுது சொல்ல முடியாது. அப்படித்தான் அங்கே நிலைமை இருந்தது.
நானும் அங்கே இருந்த யாரோ ஒரு அக்காவும் யாரோ ஒரு தம்பியுமாகச் சேர்ந்து இறந்த எங்கள் உறவுகளை ஒரு பங்கரில் போட்டு மூடிவிட்டு வந்தோம். இப்போது ஒரு வருடம் முடியுது. ஆனால், என்னைப் பொறுத்தவரை இந்த முள்ளிவாய்க்காலின் நினைவுகள் என்றைக்கும் மாறாது. அரசாங்க ம் இயக்கம் சேர்ந்து எங்களைக் கொன்றதுதான் மிச்சம்….

முள்ளிவாய்க்காலுடன் எங்கள் போராட்டம் முடியவில்லை. சி. விமலேஸ்வரி (மலர்) கிளிநொச்சி
நாங்கள் முகாமில் இருந்து வந்து பத்து நாள் ஆகின்றன. ஒரு வருடமாக முகாமில் தான் இருந்திருக்கிறோம். ஆனால், முள்ளி வாய்க்காலில் நாங்கள் பட்ட துன்பத்தையும் அங்கே இருந்து தப்புவதற்காக நாங்கள் பட்ட கஷ்டங்களையும் மறக்கவே இயலாது. சண்டை பிழைத்தால் அங்கே இருக்கிறதில எந்தப் பிரியோசனம் இல்லை எண்டு சனங்களுக்கு விளங்கிவிட்டது. ஆனால் அங்கிருந்து யாரும் வெளியேற முடியாது. என்னுடைய கணவரும் ஒரு போராளியாக இருந்தவர். அவர் இப்போது தடுப்பு முகாமில் இருக்கிறார்.
அவர் சொன்னார், பிள்ளைகளைக் கூட்டிக் கொண்டு சனங்களோட சனமாக நீ போ என்று என்னை எப்படியும் அங்கே இருந்து வெளியேறச்சொன்னார். ஆனால் அவர் சொன்னதைப் போல நாங்கள் வெளியேற முடியவில்லை. இயக்கம் விடவில்லை. இராணுவம் சண்டையை நிறுத்தவில்லை. மே 15ஆம் திகதி, ஒரு இரண்டு நாளைக்கு தாக்குப்பிடித்துப்பாப்போம். அதுக்குப் பிறகு என்ன வந்தாலும் வரட்டும் என்று இரண் டில் ஒரு முடிவை எடுக்க வேண்டியது தான் என்று கணவர் சொன்னார்.
இதற்கிடையில் எங்களுக்குத் தெரிந்தவர்கள் உட்பட பலர் எப்படியோ முள்ளி வாய்க்காலை விட்டு வெளியே போய் விட்டதாகச் சொன்னார்கள். அது உண்மை தான். அதைப்போல எங்களுக்குத் தெரிந்த பலர் அங்கே செத்தும் போனார்கள். சாப்பாட்டுப் பொருட்களும் இல்லை. தெரிந்தவர்கள் தந்த கோதுமை மாவை வைத்து மூன்று நாட்கள் சமாளித்தோம்.
எங்களுடைய பொருட்களை நாங்கள் பொக்கணை என்ற இடத்தில் அவசரத்தில் விட்டுவிட்டு வந்தபடியால் இப்படிக் கஷ்டப்பட்டோம். நிலைமை மிகவும் மோசமாகியது. ஒரு வழியும் தெரியவில்லை. ஆனால் சனங்கள் எப்படியோ வெளியேறிக்கொண்டேயிருந்தார்கள். எங்களுக்குத்தான் அது முடியவில்லை. கணவர் ஒரு காலை ஏற்கனவே இழந்திருந்த காரணத்தினால் அவரால் விரைவாக எதையும் செய்ய முடிவில்லை.
அதனால், வசதி கிடைத்தால், தன்னைப் பார்க்காமல் எங்களை போகும்படி தொடர்ந்து சொல்லிக் கொண்டே இருந் தார். ஆனால், அதற்கு வழி கிடைக்க வேண்டுமே!
கடைசியாக மே 16 ஆம் திகதி பின்னேரம் ஒரு மாதிரி ஒரு வழி கிடைத்தது. இரட்டை வாய்க்கால் பக்கமாக ஆயிரக்கணக்கான சனங்கள் வெளியேறினார்கள். போராளிகள் அங்கே இருந்து பின்வாங்கி விட்டனர். ஆனால், அப்படி நாங்கள் அங்கே இருந்து வெளியேறும்போது என்னுடைய கணவர் அழுதார். அந்தக் காட்சியை என்னால் மறக்க முடியவில்லை.
எத்தனை ஆண்டுகளாக நாங்கள் அலைந்து கொண்டிருக்கிறோம். முள்ளிவாய்க்காலுடன் எங்களுடைய அவலம் தீரவில்லை. முகாம்களில் கடுமையாகக் கஷ்டப்பட்டோம். பிறகு இப்பவும் அப்படித் தான் கஷ்டப்படுகிறோம். கணவரைப் பார்க்கப்போகிறதுக்கு, எங்கட ஊரில எங்கள் வீட்டைத் திருத்துவதற்கு என்று சரியாகக் கஷ்டப்படுகிறோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக