செவ்வாய், 25 மே, 2010

மாவீரர்களின் எண்ணங்களுக்கு ஏற்புடையவர்களாக...................


எதிரிகளிடமிருந்து நாம் பாடம் கற்க வேண்டும். சில நேரங்களில் அவர்களாகவே தமது அறியாமையை, அவர்கள் கற்றறிந்ததை, நாம் வெற்றிக் கொள்வதற்காக நம்மிடம் தாரைவார்த்துவிடுவார்கள். நாம் மண்ணைக் கீறி விதைத்த வித்துக்களிலிருந்து அறுவடைக்கான களத்திற்கு வருகிறோம். நாம் விளைச்சலை களத்துமேட்டில் சேர்க்கும் கட்டாய நிலைக்கு உட்படுத்தப்பட்டிருக்கிறோம்.
 எதிரிகளிடமிருந்து கற்ற பாடத்திலிருந்து நாம் நம்மை கல்லாக்கிக் கொண்டோம். எதிரி தொடர்ந்து நம்மை நிர்மூலமாக்குவான். நம்மை அழித்தொழிப்பதே அவன் கனவாக இருக்கும். கற்பனையிலாவது நம்மை ஒழித்ததாக அவன் முடிவு செய்து மகிழ்ந்து கொண்டாடுவான். பகைவரிடமிருந்து பல செய்திகளை நாம் கற்றுக் கொள்ள வேண்டி இருக்கிறது.


தமிழீழ விடுதலைப்போராட்ட களத்திலே விதைப்பதிலிருந்துதான் அறுக்க முடியும் என்ற தத்துவத்தை எதிரி நமக்கு கற்றுக் கொடுத்தான். ஒன்று இரண்டல்ல, ஆயிரக்கணக்காய் விதைத்தோம். அதை அறுத்தெடுக்கும் காலத்திற்கு நாம் வந்திருக்கிறோம். இந்த நேரத்தில் அவன் கருவிகளுக்கு பதிலாக, கருத்துக்களால் நம்மை சிதறடிக்க முனைப்புக் காட்டுகிறான். கேவலம் பணத்திற்காக அடிமையாகிப்போன நிலையில், நம்மில் சிலர் நாய்களைப்போல் நத்திப் பிழைக்கத் தொடங்கிவிட்டார்கள். பகைவனே பரவாயில்லை, நம் உறவுகளை விட. சில தமிழ் இணையத்தளங்கள் எமது தேசிய தலைவரை சாகடித்து மகிழ்கிறது. தேசிய தலைவரைக் குறித்து எழுதும்போது, அவர் களத்தில் மாண்ட மாவீரன் என்று குறிப்பு சொல்கிறது.


வஞ்சக புகழ்ச்சி அணி என்று தமிழ் இலக்கணத்திலே இருக்கிறதே. அதை மிக சிறப்பாக கற்றறிந்தவர்களாக நம்மவர்கள் நம்மிடையே உறவாடிக் கொண்டிருக்கிறார்கள். நம்மை களமாடி வெல்ல முடியாது என்கிற நிலையிலேதான் பகைவன் பல கரங்களாக இணைந்து நம் இனத்தை கொன்றொழித்தான். இன்னமும்கூட இவர்களை வெல்ல முடியாது என்பதை உணர்ந்த பகைவன், கருத்துக்களால் களமாட துவங்கி இருக்கிறான். அதற்கு நமது உறவுகள் சிலரே பலியாகி இருக்கும் சோகம் நம்மை அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது. ஆனாலும்கூட, தேசிய தலைவரை சாகடிக்கும் மகிழ்ச்சி அவர்களுக்கு எழுதுவதில் கிட்டுவதை நினைத்து நமக்கு வேதனையாக இருக்கிறது.


உலக வரலாற்றிலே கரந்தடி தாக்குதல் நடத்திய பல்வேறு தலைவர்கள் கொல்லப்பட்டதாக, இறந்துவிட்டதாக செய்திகளை அரசும், ஊடகங்களும் தொடர்ந்து சொல்லிக் கொண்டுதான் இருக்கும். ஆகவே, தலைவர் கொல்லப்பட்டார் என்று ஊடகங்களும் அரசு நடுவங்களும் சொல்கின்ற ஆரூடங்கள் நம்மை நகைப்புக்குள்ளாக்குகிறது. பகைவன் நம்மின் கருத்துக்களை அறிய, பரப்பும் கருத்துரைகள்தான் இவை என்பது நாம் அறியாததொன்றும் இல்லை. ஒருவேளை இப்படிப்பட்ட செய்திகளைக் கேட்டு, இதோ நான் இருக்கிறேன் என்று எமது தேசிய தலைவர் எதிரில் நிற்பார் என்கிற எதிர்பார்ப்பு பகைவர்களுக்குள் மண்டியிட்டு இருப்பதை நம்மால் தெரிந்து கொள்ள முடிகிறது. முட்டாள்தனமான சிந்தனைக்கு சொந்தக்காரர்களான அவர்களுக்கு வரலாற்றில் நிகழ்ந்த இந்த சம்பவத்தை வாசித்தறிந்து தெளிவாகிக் கொள்ளட்டும்.


"அடக்கடவுளே! குயென், நீங்கள் இன்னும் உயிரோடுதான் இருக்கிறீர்களா! நாங்கள் உங்களைப் புதைத்தே விட்டோம். அப்படியானால் பிரெஞ்சுக்காரர்களின் நம்பிக்கைப்படி நீங்கள் நீண்ட காலம் வாழ்வீர்கள் என்பது பொருள்" என்று, குயென்னின் தோளைத் தட்டியபடியே சொன்னார் பால். குயென்னின் புதிரான வியப்பான பார்வைக்குப் பதில் சொல்லும் முகமாக, ஆம், உண்மைதான். உங்களுக்கு நான் சொல்வது புரியாது" என்று தொடர்ந்து கூறினார் பால்.ஹாங்காங்கிலிருந்து நீங்கள் காணாமற் போய்விட்ட சிறிது காலம் கழித்து, ஹாங்காங் சிறைச்சாலையொன்றில் சங் மஞ்சூ மரணமடைந்து விட்டதாக ஒரு செய்தி பிரெஞ்சு நாளேடுகளில் வெளியாகியிருந்தது என்று தன் நண்பரிடம் சொன்னார் பால்.


எடுத்துக்காட்டாக, லே ஒப்பீனியன் இப்படி எழுதியது:பிரபலமாக அறியப்பட்ட போல்ஷ்விக் தலைவர் குயென் அய்கோக் காசநோய் மருத்துவமனையில் மரணமடைந்தார்". அந்த ஏடு குயென் படத்துடன் அவரது அரசியல் நடவடிக்கைகளையும் குறிப்பிட்டிருந்தது. அவரது தலைமைப் பண்பைப் பாராட்டி, ஹாங்காங் சிறை மருத்துவமனையில் மரணமடைந்த இந்த அன்னாம் வியட் நாமியர், சரியான பாதையைத் தேர்ந்தெடுத்திருப்பாரானால், உண்மையிலேயே அவரது சொந்த நாட்டு மக்களுக்கும், பிரான்சுக்கும் மிகப்பெரிய பலன் கிடைத்திருக்கும்" என்று எழுதியிருந்தது. (ஹோசிமின், தமிழோசை பதிப்பகம்)


நமது பகைவர்களைவிட, நமது உறவுகளே நமது எதிரிகளாக இருக்கிறார்கள். பல்வேறு இணையத்தளங்களில் தேசிய தலைவரை குறிப்பிடும்போது மறைந்த மாவீரர் என்றும், களப்பலியான மாமனிதர் என்றும் வர்ணனை செய்கிறார்கள். தேசிய தலைவரை சாகடித்து விட்டோம் என்கிற செய்தியை மக்கள் மனங்களில் விதைப்பதின் மூலம் அடுத்தக்கட்ட நகர்வுக்கு செல்லவிடாமல் நம்மை தடுப்பதே அவர்களின் நோக்கமாக இருக்கிறது. மேலே நாம் வாசித்தது, வியட்நாமிய போராளி ஹோசிமின் இறந்துவிட்டதாக நம்பப்பட்டு, அரசும் ஊடகங்களும் அதை உறுதி செய்துக் கொண்ட பிறகு, மீண்டுமாய் அவரின் களப்பணி முன்னைக் காட்டிலும் நேர்த்தியாகவும், முழுமையாகவும் நடைபெற்றது. உலகெங்கும் நடைபெறும் விடுதலைப் போராட்டக் களங்களில் ஆயுதங்களைக் காட்டிலும் பொய்களே முன்வரிசையில் நின்று களமாடும்.


இயக்கத்தின் தலைவரை கற்பனையிலாவது கொன்றுவிட வேண்டும் என்கின்ற அதிகார நடுவத்தின் விருப்பதை, அவர்கள் போடும் சில ரொட்டித் துண்டுகளுக்காக அப்படியே எழுதி குவிக்கும் மனப்போக்கும், அதை சுட்டிக்காட்டியே பரப்புரை செய்யும் மக்களும் அந்த காலத்திலிருந்து வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள். அதேபோக்கு இன்றுவரை நீடித்துக் கொண்டிருக்கிறது. ஒரு போராட்டத்தை நசுக்க, அவர்களின் கருவி பலன் உதவாதபோது, கருத்து பலன்தான் கைக்கொடுக்கும். அவர்களின் கருத்தாற்றலை வெளிப்படுத்துவதற்கு சில துரோகிகளை திட்டமிட்டு தேர்ந்தெடுக்கிறார்கள். எப்படியாவது கருத்தாற்றலால் வென்றுவிட வேண்டும் என்று வேகமாக பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள். நாம் மிகவும் எச்சரிக்கையான காலத்தில் நம்முடைய போராட்ட நகர்வை முன்னெடுத்துக் கொண்டிருக்கிறோம். இந்நேரத்தில் நம்முடைய ஒவ்வொரு அசைவும் நம்மை அடையாளம் காண பேருதவி புரியும். தேசிய தலைவரின் வழிக்காட்டுதல் நமக்கு ஒருவேளை தற்சமயம் கிட்டாவிட்டாலும்கூட, கடந்த காலங்களில் களமாடிய நமது போர்முறைகள் நமக்கு வழிகாட்டி நடத்திச் செல்லும்.


உலகெங்கும் இருக்கும் உறவுகள் இந்த நேரத்தில் ஒன்றிணைந்து, நமக்கான நாட்டை அமைக்கும் மகத்தான பணியை அர்ப்பணிப்போடு நிறைவேற்ற வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம். வளமான நமது வாழ்வுக்காக அல்ல, அது புதிய ஒரு வரலாற்றை தோற்றுவிப்பதற்காக. எதிர்காலத்தில் யாருமே எதிர்பார்க்காத ஒரு ஆவணமாய் நம்முடைய போராட்ட வடிவம் அமைந்திருக்கும். நமது சிந்தனை, சொல், செயல் அவை ஒரே நேர்க்கோட்டில் அசைவில்லாமல் பயணம் செய்ய வேண்டும். அதன் ஒவ்வொரு நெளிவும் நமக்கான எதிர்கால வாழ்வை தீர்மானிப்பதாக அமைய வேண்டும். தேசிய தலைவர் திரும்ப வரும்போது, நாம் செய்த பணி அவருக்கு பேருதவியாக அமைய வேண்டும். அதற்காக என்ன ஈகங்களை நாம் செய்யப்போகிறோம் என்பதை பிறகு பார்த்துக் கொள்ளலாம். ஆனால் கட்டாயமாக நாம் தமிழர்கள் என்கின்ற ஒரே அடையாளத்தை அணிந்து கொள்ள வேண்டும். இதிலிருந்து நாம் அன்னியப்பட்டுவிடக் கூடாது.


ஊடகங்களின் கருத்துப்பரவலை நம்முடைய கருத்தாற்றலால் சிதறடிக்க வேண்டும். நமது வெற்றிக்கான சிந்தனைகளை அழுத்தமாக பதிவு செய்ய வேண்டும். எவ்வித அச்சுறுத்தலுக்கும், அடக்குமுறைக்கு எதிர்த்து நிற்கும் மனதிடத்தை நாம் உள்வாங்கிக் கொள்ள வேண்டும். உயிரச்சம் என்பது கோழைத்தனம் என்கின்ற தேசிய தலைவரின் கொள்கையை நமது வாழ்வின் தாரக மந்திரமாக எடுத்துக் கொள்ள வேண்டும். இது எதற்காக என்றால், நமக்கான தேசம் அமையும், நமது பிள்ளைகள் எல்லாம் அந்த தேசத்திலே மகிழ்ச்சியோடு ஓடி விளையாடுவார்கள் என்ற நம்பிக்கையோடு மாவீரர்களாய் மாறிய அந்த மகத்தான சந்தன பேழைகளுக்கு, கார்த்திகை மலர்களுக்கு, கற்பூர தீபங்களுக்கு நமது காணிக்கையாக இருக்கும்.


தமது உயிரையும், உடலையும் துச்சமென மதித்து களமாடிய அந்த மாவீரர்களின் எண்ணங்களுக்கு ஏற்புடையவர்களாக நமது செயல்பாடு அமைய வேண்டும். எந்த லட்சியத்திற்காக தம்மை இழந்தார்களோ, அந்த லட்சியத்தை மீட்டு, அவர்களின் பாதங்களில் நாம் காணிக்கையாக்க வேண்டும். விடுதலைக்காற்றை நாம் சுவாசிப்பதற்காக தமது சுவாசக் காற்றை நிறுத்திக் கொண்ட அந்த ஈகச்சுடர்களை நாம் நன்றியோடு நினைவுக்கூற வேண்டும். அவர்கள் அளித்த உயிர்கொடைக்கு உண்மையிலேயே நாம் நன்றி உடையவர்கள் என்றால், நமக்கான ஒரு நாட்டை அமைக்க அவர்கள் தம்மை இழந்தார்கள். நாம் நம்மை இழந்தாவது அவர்களின் பாதங்களில், அவர்களின் கனவு தேசத்தை கட்டி அமைக்க வேண்டும். இது நமக்கான வரலாற்று கடமையாகும்.


இதை செய்யத் தவறினால் நாம் அந்த மாவீரர்களுக்கு நன்றி கெட்டவர்களாக மாறிவிடுவோம். வெறும் அவர்களின் படங்களைப்போட்டு, அவர்களுக்கு ஆண்டுவிழாவை கொண்டாடுவது நமது செயல்பாடாக இருந்துவிடக் கூடாது. அவர்கள் கொண்ட லட்சியத்தை, அவர்களின் எண்ணங்களை, ஏக்கங்களை, உயிர் அம்புகளாய், அவர்கள் சீறிப் பாய்ந்த உணர்வுகளை, குண்டடிக்காக கல்லறைகளாய், தம் உடலை மாற்றிக் கொண்ட அந்த உத்தமர்களை நாம் மனதில் ஏற்றிக் கொண்டு, நமக்கான கடமை இது என்பதை புரிந்து செயல்பட வேண்டும். தேசிய தலைவர் வருவார். வரும்போது, பொய் பேசிய கருத்தாளர்கள் வெட்கி தலைகுனிவார்கள். இது வரலாற்றில் பலமுறை நிகழ்ந்திருக்கிறது. நமக்கான கடமை என்று ஒன்று தெளிவாக இருக்கிறது. அதை மறக்க வேண்டாம்.


"மாபெரும் அபாயங்களின்போது, மாபெரும் பதட்டங்களின்போது, மாபெரும் படைப்புகளின் போது, எது தேவை என்றால், மாபெரும் எதிரிகளும், மாபெரும் குறிக்கோள்களும்தான். நாம் ஏற்கெனவே ஒப்புக் கொண்டிருக்கும் பட்சத்தில், நாம் எங்கு செல்கிறோம் என்பது நமக்கு புரிந்திருக்கும் பட்சத்தில், இதனால் யார் துயரப்படுவார்களோ அவர்கள் துயரப்படட்டும். நாம் நம் செயற்பாட்டை உடனே துவங்க வேண்டும்" என சே குவேரா 1960ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 19ந் தேதி ராணுவ வீரர்களுக்கு ஆற்றிய சொற்பொழிவில் அழுத்தமாய் பதிவு செய்கிறார். இந்த நேரத்தில் நமக்கு மாபெரும் எதிரிகள் யார் என்று அறிந்துவிட்டோம். இப்போது நமது மாபெரும் குறிக்கோளை நோக்கி, நமக்கான அந்த மாபெரும் கனவை அடைவதற்காக, தேசிய தலைவரின் சிந்தனைகளை செயற்படுத்துவோம். தமிழீழம் என்பது தவிர்க்க முடியாதது. அது நம் உயிர் துளியாக ஒட்டியிருக்கிறது என்பதை மறக்க வேண்டாம். நமக்கான நாடு, அது தமிழீழம். விரைவில் மலரும். அதுவரை நாம் தொடர்ந்து களப்பணியாற்றுவோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக