செவ்வாய், 25 மே, 2010

இரத்தத்தாலும், கண்ணீராலும் எழுதப்பட்ட வரலாறு.............


இலண்டனில் அமைந்துள்ள ஒரு உணவு விடுதி.
ஒரு நிறைமாத கர்ப்பிணித் தாயும், அவரது மகனும் உட்கார்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். அந்தத் தாய் ஒரு இந்தியப் பெண்மணியாகவோ அல்லது இலங்கைப் பெண்மணியாகவோ இருக்கலாம். அத்தாயின் அடையாளம் அப்படித்தான் இருந்தது.
ஆனால் அக்குழந்தை ஒரு பிரித்தானியருக்கு பிறந்தவராக இருக்கவேண்டும். அக்குழந்தையின் தோற்றம் அப்படித்தான் இருந்தது. ஆனால் எனது பிரச்சினை அதுவல்ல.

அன்று ஒரு வெள்ளிக்கிழமை. வெள்ளிக்கிழமைகளில் இலண்டனில் அமைந்திருக்கின்ற இலங்கை உணவு விடுதிகளில் 'தாளி' மிகவும் பிரபல்யம். தாளியை தாயார் சாப்பிட, மகன் பூரி சாப்பிட்டுக் கொண்டிருந்தான்.
ஒரு கட்டத்தில் தாயின் கன்னத்தை வருடிய அக்குழந்தை தாயின் உணவுத் தட்டிலிருந்து உணவை எடுத்து தாய்க்கு ஊட்டுகின்றான். தாயைக் கட்டி அணைத்து முத்தமிட்ட அக்குழந்தை, மீண்டும் தாய்க்கு உணவு ஊட்டுகின்றான்.பிறகு, தனது பிஞ்சுக் கரங்களால் தன் சகோதரனை அல்லது சகோதரியை கருவறையில் சுமக்கும் தாயின் வயிற்றினை அவன் தடவி விடுகின்றான். தனது தலையை தாயின் வயிற்றோடு சாய்த்து கட்டி அணைக்கின்றான்.
மீண்டும் தாய்க்கு அவன் உணவு ஊட்டுவதும், அவளின் கன்னங்களை வருடி விடுவதுமாக அக்குழந்தை தொடர்ச்சியாக செயற்பட்டுக் கொண்டிருந்தது.
என் விழிகள் நிரம்பி கண்ணீர் வடிய எழும்பிச் சென்று அப்பெண்ணிடம் கேட்டேன்.
'உங்கள் மகனுக்கு எத்தனை வயது?'
'மூன்று வயது' - எனது கேள்வியின் உள்ளர்த்தத்தை புரிந்து கொண்டு மகனைப் பார்த்து புன்னகைத்தபடி தாயார் சொன்னார்.
என் நினைவுப் புத்தகத்தை புரட்டிப் பார்க்கின்றேன்.
கடந்த வருடம் நடைபெற்ற வன்னிப் போரின் போது ஒரு நிறைமாத தாயார் படையினரின் குண்டுகளுக்கு இரையாகி வயிறு பிளந்து, குழந்தையின் கால் சிதறிய காட்சி என் நினைவுக்கு வந்தது.
வன்னிப் போர் தொடர்பில் வெளிவந்த புகைப்படங்களில் இதனை நான் பார்த்திருந்தேன். எனை உறையவைத்த பதிவு அது.
ஒரு உயிரின் பெறுமதியை முன்குறிப்பிட்ட குழந்தை உணர்ந்திருந்த அளவுக்காவது தேவையில்லை - குறைந்த பட்சமாவது படையினரோ அல்லது அதை ஏவிவிட்ட சிங்கள அரச தரப்போ நினைத்துப் பார்க்கவில்லை.
இதற்கு மேல் இவ்விரு சம்பவங்கள் குறித்தும் மேலதிக விபரணங்கள் வேண்டாம்.வன்னி. எவருக்குமே தலைவணங்காத பூமி. முழு இலங்கைக்குமே உணவு போட்ட விளைநிலம்.
சிறிலங்காவின் முக்கிய படைத்த தளங்களான ஆணையிறவு, மாங்குளம், முல்லைத்தீவு போன்ற படைத்தளங்கள் தமிழீழ விடுதலைப் புலிகளால் முற்றாகத் தகர்க்கப்பட்டு வன்னிப் பிராந்தியம் முழுவதும் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டிருந்தது.


இங்கு தான் சர்வதேச சமூகமும் வியக்கும் வண்ணம் தமிழீழ விடுதலைப் புலிகள் ஒரு அரசாங்கத்தையே நடாத்திக் கொண்டிருந்தார்கள். இங்கு தான் காவல்துறை, கடற்படை, விமானப்படை மற்றும் நீதிமன்றம் என எல்லாவிதமான கட்டமைப்புக்களையும் உருவாக்கினார்கள். இங்கிருந்து கொண்டு தான் முழுத் தமிழ் மக்களையும் தம்பக்கம் வைத்திருந்தார்கள்.
இந்திய அமைதி காக்கும் படையினருக்கும், விடுதலைப் புலிகளுக்கும் மிக உக்கிரமாக போர் நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை பாதுகாத்து வைத்திருந்தது இந்த வன்னிக்காடும், அம்மக்களும்தான்.
இறுதியில் இந்த வன்னிப் பூமியும் வரலாற்றில் இரண்டாவது தடவையாக தோற்கடிக்கப்பட்டது.
2009 ஆம் ஆண்டு மே மாதம் 18ஆம் திகதி.
தமிழீழ வரலாற்றில் முள்ளிவாய்க்கால் ஒரு முக்கியமான பகுதி. இப்பகுதியில் தான் தமிழ் தேசிய இனத்தின் மீது என்றுமே மறக்க முடியாத வகையில், வரலாறு மருந்தால் ஆற்றுப்படுத்த முடியாத மிகவும் கொடூரமான மனக் காயத்தை ஏற்படுத்தி விட்டுச் சென்றுள்ளது.
நெஞ்சு கனக்க 2009ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் மே மாதம் 18ஆம் திகதி வரை நகர்ந்த நாட்களை எப்படிச் சொல்ல? உலகில் வார்த்தைகள் அற்ற கணங்கள் எவை என எவரும் கேட்டால், இக்கணங்களை விட வேறொன்றும் இருக்க முடியாது.
ஒன்றா? இரண்டா? சொல்வதற்கு. பல்லாயிரம் பக்கங்களைக் கொண்ட முப்பது வருடங்களாக இரத்தத்தாலும், கண்ணீராலும் எழுதப்பட்ட வரலாறு அல்லவா அது.
இந்த வரலாறு குறித்து பலருக்கு அபிப்பிராய பேதங்கள் இருக்கலாம். ஏன் எனக்கும் தான் இருக்கின்றது. ஆனால் அவைகளை விடுத்து இந்த திட்டமிட்ட இனச்சுத்திகரிப்பு நடவடிக்கை சொல்லுகின்ற சேதி தான் என்ன?
இனி வரும் காலங்களில் எந்தவொரு தேசிய இனமும் தன்னெழுச்சியுடன் எழுந்துவிடக் கூடாது என்ற ஒரேயொரு நோக்கத்துடன் அடிக்கப்பட்ட ஒரு எச்சரிக்கை மணி இது.
வன்னிப் போரின் இறுதிக் காலங்களில் சுமார் 80,000 உயிர்கள் கொல்லப்பட்ட போது முழு உலகமும் பார்த்துக் கொண்டிருந்ததே! அதனைத் தான் என்னவென்று சொல்ல? மானுடமும், மனச்சாட்சியும், நீதியும், நியாயமும் எங்குதான் சென்றது?
இவை எல்லாம் ஏற்னெவே சவப்பெட்டிக்குள் போட்டு உலக சமூகத்தால் புதைக்கப்பட்டாயிற்றா?
ஒரு இனம் தனது அரசியல் அதிகாரத்தைப் பெற்றுக் கொள்வதற்காக போராடியதும், அப்போராட்டத்திற்காக சரி, பிழைகளுக்கு அப்பால் ஒரு இயக்கத்தின் தலைமையின் கீழ் அணிதிரண்டதும் தவறென்றால், இன்றைய உலக வரலாறுகள் முழுவதும் தவறானவை தான்.
சிங்களப் பௌத்த மேலாதிக்க வாதத்தின் அரச பயங்கரவாதத்தை எதிர்த்து தமிழ் மக்கள் ஆயுதமேந்திப் போராடியது தவறென்றால், இன்று முழு உலகமுமே அழிக்கப்பட வேண்டியதுதான்.இலங்கையில் சிங்கள பௌத்த மேலாதிக்கவாத அரசால் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட இனச் சுத்திகரிப்பு நடவடிக்கையை ஒரு நாட்டின் உள்விவகாரம் எனக் கூறி, படுகொலைகளில் இருந்து மனித உயிர்களைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பிலிருந்து முழு உலகமும் விலகிக் கொண்ட வெட்கக்கேடான செயலை என்னவென்று சொல்வது?
முழு உலக ஊடகங்களும் இந்த பேரவலம் குறித்து செய்திகளை வெளியிட்ட போது, உலக நாடுகள் வாழாவெட்டிகளாக இருந்தனவே?
ஒரு இனத்தின் விடுதலைக்காகப் போராடிய ஒரு விடுதலை இயக்கமும், அதன் கீழ் அணிதிரண்டிருந்த மக்கள் கூட்டமும் கொன்றொழிக்கப்படுவதற்கு துணை போன வல்லரசுகளையும், பெரும் மனித அவலம் ஒன்று அரங்கேறிக் கொண்டிருந்த போது வாய்மூடி மௌனிகளாக பார்த்துக் கொண்டிருந்த உலக சமுதாயத்தையும் யார்தான் தண்டிக்கப் போகின்றார்கள்?
'ஊரான ஊரிழந்தோம்
ஒற்றைப் பனைத் தோப்பிழந்தோம்!
பாராள வந்தவரே
உமையும் தான் நாமிழந்தோம்'
தமிழீழ விடுதலைக்காக வீறுகொண்டு எழுந்தவர்களே உங்கள் நினைவுகள் நெஞ்சை கனக்க வைக்கின்றது. எங்களின் கண்களிலிருந்து வடிகின்ற கண்ணீராலும், இதயத்தில் இருந்து வடிகின்ற இரத்தத்தாலும் உங்களை ஆராதிக்கின்றோம்.போர்க் களத்தில் நேருக்கு நேர் நின்று போராடி வீரச்சாவடைந்த தளபதிகளுக்கும் அனைத்துப் போராளிகளுக்கும் மற்றும் பொதுமக்கள் அனைவருக்கும் எங்களின் அஞ்சலிகளைக் காணிக்கையாக்குகின்றோம்.
ஒரு கணம் எங்களை மறந்து எழுந்து நின்று மௌனமாக தலை வணங்குகின்றோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக