ஞாயிறு, 30 மே, 2010

மஹிந்த ‘டைம்ஸ் ஒப் இந்தியா’ பத்திரிகைக்கு அளித்த பேட்டி


இலங்கையும் இந்தியாவும் வெறும் நண்பர்கள் அல்ல. நாம் உறவினர்களைப் போன்றுள்ளோம். இன்று எமது உறவு மிகவும் உயர்ந்த ஸ்தானத்தில் உள்ளது.
எம்மை கவனித்துக் கொள்ளவேண்டிய கடமை இந்தியாவுக்குள்ளது. எவ்வாறெனில், ஆதிக்க உணர்வுகொண்டதோர் மூத்த சகோதரனைப் போன்றல்லாது, தனது சிறிய சகோதரியைக் கவனித்துக்கொள்வதைப் போன்று அமையவேண்டும் என்று நான் கருதுகின்றேன் என ‘டைம்ஸ் ஒப் இந்தியா’ பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்
.

இலங்கை சீன உறவு அதிகரித்துவருவதால் இந்து சத்திரத்தில் சீனா காலூன்ற வழி வகுக்கும் என இந்தியா கவலைகொண்டுவரும் நிலையில் இலங்கை- இந்திய உறவு தொடர்பில் உங்களின் கருத்து என்னவென்று கேட்டகேள்வியொன்றுக்கு பதிலளிக்கையிலேயே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் வழங்கிய செவ்வி வருமாறு……,

கேள்வி: விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டு ஓராண்டு பூர்த்தியாகியுள்ளது. அவ்வமைப்பு ஏன் தோல்வியடைந்தது என நினைக்கின்றீர்கள்?

பதில்: அவ்வமைப்பினுள் என்ன நடைபெற்றுக்கொண்டிருந்தது என்பது அனைவருக்கும் தெரியும். அவர்களின் தோல்விக்கான காரணங்கள் அனைவரும் அறிந்ததே. அது ஓர் தன்னழிவுப் பாதை.

தனி ஈழம் குறித்த அவர்களின் கோரிக்கை எப்போதும் கேள்விக்ப்பாற்பட்ட விடயமாகவே இருந்தது. அதை நாம் அனுமதித்தே இருக்கமாட்டோம். முக்கியமாக அவர்களின் முத்திரையாக மாறி வந்த இரத்தக்களறியும் வன்முறையும் நிறுத்தப்படவேண்டியிருந்தது. இந்த நிலை தொடரக்கூடாது என்பதில் நான் உறுதியாக இருந்தேன். அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த முற்பட்டேன் ஆனால் அவர்கள் மறுத்துவிட்டார்கள். இதனையடுத்து தீர்க்கமான முடிவை எடுப்பதைவிட வேறெந்தத் தெரிவும் இருக்கவில்லை.

கேள்வி: புலிகளின் அத்தியாயம் முடிந்து விட்டது என கருதுகின்றீர்களா?

பதில்: நான் அவ்வாறு நினைக்கவில்லை. அவர்களின் உறங்கும் உறுப்பினர்கள் இருக்கிறார்கள். அவர்கள் பல்வேறு நாடுகளில் நன்கு பராமரிக்கப்படுகின்றார்கள். எனவே அவர்களின் சரித்திரம் முடிந்துவிட்டது என்று கூறடியாது.

இறுதிக் கட்டப் போரின்போது 20,000க்கும் அதிகமான பொதுமக்கள் கொல்லப்பட்டதாக சில அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இது சரியான தகவலாக இருக்க முடியாது. இலங்கை இராணுவத்தினர் மிகவும் ஒழுக்கமானவர்கள். பொதுமக்கள் கொல்லப்படக்கூடாது என்பதில் நாம் மிக மிகக் கவனமாக இருந்தோம். பிரபாகரனின் தாய் தந்தை மற்றும் அவரது குழாம் முழுவதும் எமது முகாம்களில் இருந்தனர். அவர்களுக்கே நாம் தீங்கிழைக்கவில்லையென்றால் பொதுமக்கள் கொல்லப்பட்டனர் என்ற கேள்விக்கே இடமில்லை. நாம் ஏன் பொதுமக்களைக் கொல்ல வேண்டும். அவர்களும் எமது மக்கள்தானே!

கேள்வி: இடம்பெயர்ந்த மூன்று இலட்சம் மக்களையும் 180 நாட்களுக்குள் மீள்குடியேற்றம் செய்வதாக நீங்கள் உறுதியளித்திருந்தீர்கள். அந்த உறுதிமொழி நிறைவேற்றப்பட்டுள்ளதா?

பதில்: ஆம். இது தொடர்பில் நான் மிகவும் திருப்தியடைந்துள்ளேன். மூன்று இலட்சம் மக்கள் இருந்த முகாம்களில் தற்போது 30 ஆயிரம் மக்களே உள்ளனர். இவ் வருடஇறுதிக்குள் அனைத்துப் பகுதிகளிலும் கண்ணிவெடிகள் அகற்ற்ப்பட்டு எஞ்சியுள்ளவர்களும் மீள்குடியேற்றப்படுவார்கள்.

கேள்வி: புலிகளுக்கு எதிரான உங்கள் யுத்தத்தில் இந்தியாவிடமிருந்து நீங்கள் எதிர் பார்த்த வெற்றி கிட்டியதா?

பதில்: ஆம். இந்தியா எமக்கு உதவியளித்தது. நாம் அதனை வெகுவாக பாராட்டுகின்றோம்.

கேள்வி: என்ன வகையான உதவிகள்? தார்மீக உதவிகளா அல்லது இராணுவ உதவிகளா?

பதில்: இரண்டும் ( சிக்கிறார்) எமக்கு இரண்டும் தேவையாக இருந்தன.

கேள்வி: உங்களுக்கு ஆயுதங்களை விற்பனை செய்வதற்கு சீனர்கள் முன்வரவில்லையா?

பதில்: ஆயுதக் கொள்வனவு என்பது இராணுவ தீர்மானமாகும். நாம் ஒரு யுத்தத்தில் ஈடுபட்டிருந்தோம். இந்நிலையில் சீனா, பாகிஸ்தான், ஐரோப்பிய ஒன்றியம், இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளிலிருந்து ஆயுதங்கள் கிட்டின. இந்தியாவிலிருந்து சாத்தியமான அனைத்தையும் நாம் பெற்றுக்கொண்டோம். எமக்கு யார் யார் விரைவாக வழங்கினார்களோ அவர்களிடமிருந்து ஆயுதங்களைப் பெற்றுக்கொண்டோம்.

கேள்வி: ஜூன் எட்டாம் திகதி இந்தியாவுக்கு நீங்கள் விஜயம் செய்வதாக உள்ளது. அப்போது இலங்கை இந்திய ஒப்பந்தம் புத்துயிர் பெறுமா?

பதில்: நாம் பல்வேறு விடயங்கள் குறித்து இச்சந்தர்ப்பத்தில் கலந்துரையாடவுள்ளோம். பொருளாதார அபிவிருத்தி இதில் முக்கியத்துவம்பெறும்.

கேள்வி: இந்திய மத்திய அரசு பிராந்திய அரசாங்கங்களின் பொலிஸ் கட்டுப்பாடுகளை கொண்டிருக்காமை உட்பட பல்வேறு தவறுகளை உணர்ந்துகொள்ள முடிவதாக நீங்கள் அண்மையில் கூறியிருந்தீர்கள். அந்த வகையில் இலங்கையின் மாகாண சபைகளுக்கு அதிகாரங்களை பகிர்ந்தளிக்கக்கூடிய 13 ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்தாமைக்கு இது ஒரு கார ணமா?

பதில்: இந்தியா மிகப்பெரிய நாடாகும். அதனை இலங்கையுடன் ஒப்பிடமுடியாது. நான் எப்போதும் கூறுவது யாதெனில் பொலிஸ் அதிகாரங்களை மாகாணங்களுக்கு வழங்க முடியாது என்பதேயாகும். மும்பாய் தாக்குதலின்போது கொமோண்டோ படையினரை வரவழைக்க எவ்வளவு நேரம் தேவைப்பட்டது? எனவே இதன் பொருட்டு பல்வேறு தேவைகளை பூர்த்தி செய்யவேண்டியிருந்தது. அதன் காரணமாகவே பொலிஸ் அதிகாரம் மத்திய அரசாங்கத்துடன் இருக்கவேண்டும் என நான் கருதுகின்றேன்.

கேள்வி: உங்கள் ஆட்சி ஒரு குடும்ப ஆட்சியாக இருப்பதாக கூறப்படுகின்றதே?

பதில்: அதற்கு நான் என்ன செய்யலாம். அவர்களை மக்கள் தெரிவு செய்துள்ளனர். அண்மையில் எனது குடும்ப உறுப்பினர் ஒருவருக்கு நாடளாவிய ரீதியில் வெற்றி கிட்டியது. எனவே அது மக்களின் தீர்மானம். அவர்களுக்கு தேவையில்லை என நினைப்பார்களேயானால் அன்றே அவர் கள் அனைவரையும் புறந்தள்ளிவிடுவார் கள்.

கேள்வி: கடுமையான வேலைக்கு பின்பு எவ்வாறு நீங்கள் ஓய்வெடுப்பீர்கள்? படங் கள் பார்ப்பதுண்டா?

பதில்: ஆம். நான் ஹிந்தி திரைப்படங்களை பார்ப்பேன்.

கேள்வி: அண்மையில் பார்த்த திரைப்ப டம் என்ன?

பதில்: மை நேம் இஸ் கான். அது மேற்குலகில் முஸ்லிம்களுக்கு எதிரான பாரபட்சத்தை எடுத்துக்காட்டுவதாக இருந்தது. மனித உரிமை மீறப்படுவதாக எம்மீது குற்றச்சாட்டுக்களை வைக்கும் அவர்கள் தங்கள் சொந்த நாட்டில் முஸ்லிம்களுக்கு எதிராக எவ்வாறு நடந்துகொள்கிறார்கள் என நான் சற்று சிந்தித்துப் பார்த்தேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக