ஞாயிறு, 30 மே, 2010

விரிவடையும் பாதுகாப்பு அமைச்சின் அதிகாரங்கள்................



போர் முடிவுக்கு வந்து ஒரு வருடம் கடந்துள்ள நிலையிலும் பாதுகாப்பு அமைச்சு தன் நாட்டின் வரவுசெலவுத் திட்டத்தில் பெரும் பகுதி நிதியை விழுங்கும் அமைச்சாக மாறியிருக்கிறது. அடுத்த மாதம் சமர்ப்பிக்கப்படவுள்ள வரவுசெலவுத் திட்டத்தில் பாதுகாப்பு அமைச்சுக்கு 20,222 கோடி ரூபாவை அரசாங்கம் ஒதுக்கீடு செய்வதற்குத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.


இதில் மூலதனச்செலவு என்பது
1093 கோடி ரூபா தான். பாதுகாப்பு அமைச்சுக்கான மீண்டெழும் செலவுகள் தான் அதிகம். அதுவே 19,129 கோடி ரூபாவாக உள்ளது. போர் நடைபெற்ற காலங்களில் பாதுகாப்புச் செலவினம் அதிகரித்திருந்தது. ஆனால் போர் முடிவுக்கு வந்துள்ள போதும் பாதுகாப்புச் செலவினத்தை அரசாங்கம் குறைக்கவில்லை.


முன்னர் கல்வி அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடு அதிகமாக இருந்தது. கடந்த மூன்றாண்டுகளில் பாதுகாப்புச் செலவின அதிகரிப்பினால் கல்வி அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடு 42 வீதத்தால் குறைக்கப்பட்டுள்ளது. 2007இல் கல்வி அமைச்சுக்கு 8000 கோடி ரூபா ஒதுக்கப்பட்டது. 2008இல் அது 5200 கோடியாகக் குறைந்தது. 2009இல் அது 4600 கோடியாகக் சுருங்கிப் போயிருந்தது.


இந்த வருடத்துக்கான வரவுசெலவுத் திட்டத்தில் கல்விக்கான நிதி ஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்துள்ளன. ஆனால் அரசாங்கமோ அதுபற்றிக் கவனத்தில் எடுத்துக் கொண்டதோ, இல்லையோ பாதுகாப்பு அமைச்சுக்கான நிதி ஒதுக்கீட்டை அதிகரிப்பதிலேயே கவனம் செலுத்துகிறது.


போர் முடிவுக்கு வந்துள்ள நிலையிலும் போருக்காகத் திரட்டப்பட்ட, திரட்டப்பட்டு வரும் படையினருக்கான சம்பளங்கள் ஏனைய சலுகைகளுக்காகவும், போர்க்காலத்தில் கொள்வனவு செய்யப்பட்ட போராயுதங்கள், வாகனங்களின் பராமரிப்புக்காகவும் பெருந்தொகை நிதியை செலவிடுகிறது பாதுகாப்பு அமைச்சு.


இந்தவகையில் பாதுகாப்பு அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடுகளை அரசாங்கம் நியாயப்படுத்துகிறது. அதுமட்டுமன்றி போர்க்காலத்தில் சக்தி வாய்ந்த துறையாகக் கருதப்பட்ட பாதுகாப்பு அமைச்சின் செல்வாக்கையும், கட்டுப்பாட்டையும் அதிகரிக்கும் நடவடிக்கைகள் பல தற்போது எடுக்கப்பட்டுள்ளன.


பாதுகாப்பு அமைச்சராகப் பதவியில் இருப்பவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ. ஆனால் பாதுகாப்பு அமைச்சுத் தொடர்பான அவரது அதிகாரங்கள் அனைத்தையும் கையாள்பவராக இருப்பவர் கோத்தாபாய ராஜபக்ஷ தான். புதிய அரசாங்கத்தின் அமைச்சுக்களுக்கான அதிகாரங்கள் பகிரப்பட்ட போது பாதுகாப்பு அமைச்சின் வசம் சில புதிய திணைக்களங்களை ஒதுக்கியிருந்தது அரசாங்கம். தற்போது மேலும் சில திணைக்களங்களின் பிரிவுகளை பாதுகாப்பு அமைச்சின் வசம் கொண்டு வரும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கின்றன. கடந்த புதனன்று கூடிய அமைச்சரவைக் கூட்டத்தில் விசேட அதிரடிப்படையை பாதுகாப்பு அமைச்சின் நேரடிக் கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்கு அனுமதி வழங்கப்பட்டது.


இதற்கு முன்னர் பொலிஸ்மா அதிபரின் கட்டுப்பாட்டில் விசேட அதிரடிப்படை இருந்தது. 1983ஆம் ஆண்டு வடக்குகிழக்கில் ஆயுதப் போராட்டத்தை முறியடிக்கத் தோற்றுவிக்கப்பட்டதே இந்த விசேட அதிரடிப்படை. ஜே.ஆர் ஜயவர்த்தன உருவாக்கிய இந்த விசேட அதிரடிப்படை கிழக்கில் சக்திவாய்ந்த படையாக இருந்தது.


தற்போது இது விரிவாக்கப்பட்டுப் பலம் மிக்கதொன்றாக மாறியுள்ளது, போரின் போது முக்கிய பங்களிப்புச் செய்த இந்தப் படைப்பிரிவு போர்முடிவுக்கு வந்துள்ள நிலையில் முக்கிய பிரமுகர்களின் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. முக்கிய பிரமுகர்கள் பாதுகாப்புப் பணியில் இருந்து இராணுவம் விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது.


அதையடுத்து இந்தப் பொறுப்பு முழுமையாக விசேட அதிரடிப்படையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. விசேட அதிரடிப்படையை பாதுகாப்பு அமைச்சு 2006இல் தன்வசம் கொண்டு வந்தது. பின்னர் மீளவும் 2007இல் பொலிஸ்மா அதிபரிடம் ஒப்படைத்தது. இப்போது மீளவும் அது பாதுகாப்பு அமைச்சின் வசம் கொண்டு வரப்பட்டுள்ளது.


போர் நடைபெற்ற காலங்களில் இந்த மாற்றம் நிகழ்த்தப்பட்டிருந்தால் அதன் அர்த்தம் வேறு. ஆனால், இப்போது இந்த மாற்றம் நிகழ்ந்துள்ளது. அதுபோலவே, கடந்த காலங்களில் பாதுகாப்பு அமைச்சு ஊர்காவல் படையை தனது பொறுப்பில் எடுத்து சிவில் பாதுகாப்புப் படை என்றும், கடற்றொழில் நீரியல் வளங்கள் திணைக்களத்தைப் பொறுப்பேற்று கரையோரப் பாதுகாப்பு படை என்றும் உருவாக்கியுள்ளது.


அதுமட்டுமன்றி, அண்மையில் நகர அபிவிருத்தி அதிகார சபையையும் பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டு வந்துள்ளது அரசாங்கம். கடந்த வாரம் நடந்த செய்தியாளர் சந்திப்பில் நகர அபிவிருத்தி அதிகாரசபை மட்டுமன்றி, உள்நாட்டு விவகார அமைச்சு பற்றிய தகவல்களையும் பாதுகாப்பு ஊடகத் தகவல் மையமே வெளியிடும் என்று அறிவிக்கப்பட்டது.


உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு தனியான தொன்றாக இருந்தபோதும் அது பற்றிய செய்திகள் பாதுகாப்பு அமைச்சின் ஊடாகவே வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டிருப்பது முக்கியமானது. இதைவிட அண்மையில் வர்த்தமானி அறிவித்தல் மூலம் காணி மறு சீரமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையும் பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டு வரப்பட்டது.


அத்துடன், ஆட்பதிவுத் திணைக்களம், குடிவரவு குடியகல்வுத் திணைக்களம் போன்றனவும் பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன. பொதுவாக இந்தத் திணைக்களங்கள் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் கீழேயே இருப்பது வழக்கம்.


ஆனால்,


இப்போது பாதுகாப்பு அமைச்சே பிரதான திணைக்களங்கள், சபைகளை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளது. இராணுவம், கடற்படை, விமானப்படை, குடிவரவு குடியகல்வுத் திணைக்களம், ஆட் பதிவுத் திணைக்களம் பொலிஸ், சிவில் பாது காப்புப் படை, கரையோர காவல் திணைக்களம், கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக் கழகம், பாதுகாப்பு சேவை அதிகாரிகள் கல்லூரி, பாதுகாப்பு சேவைகள் பாடசாலை, ரணவிரு சேவா அதிகாரசபை, லங்கா லொஜிஸ்டிக் நிறுவனம், தேசிய அபாய மருந்துகள் கட் டுப்பாட்டுச் சபை, அரசசார்பற்ற நிறுவனங்களுக்கான செயலகம், ரக்ன ஆரக்லிக லங்கா நிறுவனம், தேசிய கடெற் படை, தேசிய பாதுகாப்பு நிதியம், அரச புலனாய்வுச் சேவை, நகர அபிவிருத்தி அதிகாரசபை, காணி மறுசீரமைப்பு மற்றும் அபிவிருத்திக் கூட்டுத்தாபனம் என்று 21 துறைகளை உள்ளடக்கியதாக பாதுகாப்பு அமைச்சு பட்டியலிடப் பட்டிருந்தது.
ஆனால், தற்போது இதில் 22ஆவது பிரிவாக விசேட அதிரடிப்படையும் சேர்த்துக் கொள்ளப்படவுள்ளது. ஜனாதிபதியின் கட்டுப்பாட்டில் உள்ள பாதுகாப்பு அமைச்சு போர்க் காலத்தில் இருந்ததை விடவும் சக்திவாய்ந்த துறையாக மாற்றம் பெற்றுள்ளது.


போருக்குப் பின்னர் பாதுகாப்பு அமைச்சின் முக்கியத்துவம், குறைந்து போகாத வகையில் இந்த மாற்றங்கள் இடம்பெற்றுள்ளன.


பாதுகாப்பு அமைச்சின் அதிகாரங்களும், அதன் எல்லைப் பரப்பும் விரிவடைந்து செல்கின்ற நிலையில், பாதுகாப்பு அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடுகளை அரசாங்கம் அதிகரிக்க வேண்டும்.


பாதுகாப்பு செலவின அதிகரிப்புக்கு இதை ஒரு காரணமாக முன்வைப்பதற்கு அரசாங்கத்துக்கு இது வசதியாகப் போய்விட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக