வியாழன், 6 மே, 2010

சதியை முறியடித்து விட்டார்களாம்???!!!

தகுதி வாய்ந்தவர்கள் முன்னே செல்லட்டும் ‘நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்‘ என்ற போர்வையில் தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டத்தின் அடிப்படை இலட்சியங்களை சிதறடித்துக் காற்றில் பறக்க விடுவதற்கு சில நாசகார சக்திகள் எடுத்த முயற்சிகள் புலம்பெயர்வாழ் தமிழீழ தேசிய உணர்வாளர்களால் வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டிருப்பதை நடைபெற்று முடிந்த நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்திற்கான தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்தி நிற்கின்றன.
தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டம் என்பது தமிழீழ தாயகத்தை மையமாகக் கொண்டு நகரும் ஒரு மாபெரும் ‘அசைவியக்கம்‘. இந்த மாபெரும் அசைவியக்கத்தின் இயங்குசக்தியாக விளங்குவது ‘பிரபாகரன்‘ என்ற ‘அடிநாதம்‘. ‘பிரபாகரன்‘ என்ற இந்த அடிநாதத்தை மறுதலித்து, மறைத்து, தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டத்தின் அசைவியக்கத்திற்கு மாற்றீடான பல்தேசியக் கட்டமைப்புக்களை உருவகிப்பதன் ஊடாகத் தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டத்தை நிரந்தரமாக துடைத்தழிப்பதே, கடந்த ஓராண்டாக இந்திய – சிங்கள அரசுகளின் கூட்டு நிகழ்ச்சித் திட்டமாக விளங்கி வந்துள்ளது. இதற்கு உயிரூட்டமளிக்கும் வகையில், தமிழீழ தாயகத்தை மத அடிப்படையில் துண்டாடுவதற்கான திட்டங்களை இந்திய – சிங்கள அரசுகளின் கைக்கூலி ‘மதியுரைக் குழுக்கள்‘ அண்மைக் காலங்களில் வகுத்து நடைமுறைப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன. இதற்கான கருவியாக மாறும் அறிகுறிகளை அண்மைய மாதங்களில் நாடுகடந்த தமிழீழ அரசமைப்புக் குழு வெளியிட்டு வந்த நிலையிலேயே, நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்திற்கான தேர்தல் களத்தில் தமிழ்த் தேசிய உணர்வாளர்கள் களமிறங்கியிருந்தார்கள். பன்னாட்டு அரங்கில் தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டத்தின் நியாயங்களை எடுத்துரைப்பதற்கான பரப்புரைத்தளம் தவறான தரப்புக்களின் கைகளில் சிக்கிச் சிதறுண்டு போவதைத் தடுப்பதே தமிழ்த் தேசிய உணர்வாளர்களின் முதன்மை நோக்கமாக விளங்கியிருந்தது. ஒருபுறம் ‘நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்‘ என்று சுயமுத்திரை குத்தியவாறு, தம்மையொரு பல்தேசிய ‘கொம்பனியாகவும்‘, அரசுசாரா அமைப்பாகவும் மாற்றிக்கொள்ள முற்பட்ட ‘மதியுரைக் குழுக்கள்‘, மறுபுறம் முஸ்லிம் தாயகம் பற்றியும், முஸ்லிம் சுயநிர்ணய உரிமை பற்றியும் பேசி, எமது இஸ்லாமிய சகோதரர்களை தமிழீழ தேசத்தில் இருந்து நிரந்தரமாக அந்நியப்படுத்துவதற்கு முற்பட்டிருந்த வேளையிலேயே தமிழ்த் தேசிய உணர்வாளர்களின் களமிறக்கம் நிகழ்ந்தேறியது. ஆரம்பத்தில் இருந்தே தவறான கருத்துக்களை விதைக்கும் நடவடிக்கைகளில் நாடுகடந்த அரசமைப்புக் குழுவின் நாடுவாரியான செயற்குழுக்கள் ஈடுபட்டிருந்த நிலையில், நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அமைக்கும் முயற்சி என்பது தமிழீழ தேசத்தையும், அதற்கான அடிப்படை இலட்சியங்களையும் விலைபேசும் அரங்காக மாறிவிடும் என்ற அங்கலாய்ப்பும், அதனால் எழுந்த சலிப்பும் புலம்பெயர்வாழ் தமிழீழ மக்களிடையே மேலோங்கியிருந்தது. இதனை தமக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள முற்பட்ட ‘மதியுரைக் குழுக்கள்‘, தமது நாடுவாரியான செயற்குழுக்களின் உறுப்பினர்களை தேர்தலில் களமிறக்கி, போட்டியின்றி நாற்காலிகளைக் கைப்பற்றுவதை இலக்காகக் கொண்டு தமது காய்களை நகர்த்தியிருந்தன. ஆனால் இவையெல்லாவற்றிற்கும் ஆப்பு வைக்கும் வகையில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்திற்கான தேர்தலில் தமிழ்த் தேசிய உணர்வாளர்கள் களமிறங்கியமை எவருமே எதிர்பாராதது. இதில் ‘மதியுரைக் குழுக்களை‘ மீளமுடியாத அதிர்ச்சியில் ஆழ்த்திய விடயமாக நடந்தேறிய தேர்தல் முடிவுகள் அமைந்துள்ளன. தமிழீழ தாயகத்தைத் துண்டாட முற்பட்ட தரப்புக்களை தோற்கடித்து அமோக வெற்றியைத் தமிழ்த் தேசிய வேட்பாளர்கள் பெற்றிருப்பது, நாடுகடந்த அரசமைப்புக் குழுவின் மதியுரைக் குழுக்களும், நாடுவாரிக் குழுக்களும் சற்றுமே எதிர்பாராதது. இப்படியான பின்புலத்தில், தேர்தலில் வெற்றியீட்டிய தமிழ்த் தேசிய உணர்வாளர்களுக்கு எதிரான அவதூறுப் பரப்புரைகளில் தற்பொழுது ‘மதியுரைக் குழுக்கள்‘ இறங்கியுள்ளன. இதற்கு உடந்தையாக பிரித்தானியாவில் இருந்து ஒளிபரப்பாகும் ‘இலவச தமிழ் செய்கோள் தொலைக்காட்சி‘ கச்சையை வரிந்து கட்டிக் கொண்டு இறங்கியுள்ளது. இதில் முக்கியமாக, சனநாயகத்தின் தாய் என்று வர்ணிக்கப்படும் பிரித்தானியாவில் நடந்தேறிய தேர்தலில் வாக்குமோசடிகள் நிகழ்ந்திருப்பதாகக் கூறி சில தொகுதிகளில் மறுதேர்தலுக்கும், மறுவாக்கெடுப்பிற்குமான அறிவிப்புக்களை நாடுகடந்த அரசமைப்புக் குழுவின் பிரித்தானிய தேர்தல் ஆணையம் விடுத்துள்ளது. இவற்றின் பின்னணி என்ன? உண்மையில் இவ்வாறான வாக்குமோசடிகள் நடைபெறுவதற்கு வாய்ப்புக்கள் உள்ளனவா? என்பதே இன்று தமிழ்த் தேசிய உணர்வாளர்களிடையே உள்ள கேள்விகளாகும். அதாவது, பிரித்தானியாவில் நடைபெற்ற தேர்தலில் சகல வாக்குப் பதிவுநிலையங்களும் நாடுகடந்த அரசமைப்புக் குழுவின் தேர்தல் ஆணையத்தினாலேயே ஒழுங்கமைக்கப்பட்டிருந்தன. இதில் கடமையாற்றுவதற்கான பணியாளர்கள் கூட தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்டதோடு, வாக்குச்சீட்டுக்களும் தேர்தல் ஆணையத்தின் வசமே இருந்தன. இப்படியிருக்கும் பொழுது வாக்குமோசடிகள் எவ்வாறு நிகழ முடியும்? அவ்வாறான வாக்குமோசடிகள் நிகழ்ந்தேறியிருந்தால் அவற்றை தேர்தல் ஆணையத்தின் பணியாளர்களே நிகழ்த்தியிருக்க முடியும். அல்லது வாக்குமோசடிகளில் தேர்தல் பணியாளர்கள் ஈடுபட்டிருக்காத பட்சத்தில், வாக்குப் பெட்டிகளை வாக்கும் எண்ணும் நிலையத்திற்கு எடுத்துச் சென்ற தேர்தல் ஆணையத்தின் அதிகாரிகள் மோசடியில் ஈடுபட்டிருக்க வேண்டும்! அப்படியாயின் மோசடிகாரர்களின் கூட்டமைப்பாகவா நாடுகடந்த அரசமைப்புக் குழுவின் தேர்தல் ஆணையம் விளங்கியது? இதுவரை வெளியிடப்பட்ட முடிவுகளின்படி நாடுகடந்த அரசமைப்புக் குழுவால் களமிறக்கப்பட்ட சகல பிரித்தானிய வேட்பாளர்களும் தேர்தலில் படுதோல்வியைத் தழுவி மண்கவ்வியிருப்பதாகவே அறிய முடிகின்றது. ஓரிரு சுயேட்சை வேட்பாளர்களைத் தவிர சே.ஜெயனாந்தமூர்த்தி அவர்களின் தலைமையிலான தமிழ்த் தேசிய உணர்வாளர்களே பிரித்தானிய தேர்தலில் அமோக வெற்றியைப் பெற்றுள்ளார்கள். இதனை சகித்துக் கொள்ள முடியாத நாடுகடந்த அரசமைப்புக் குழுவின் ‘மதியுரைக் குழுக்களும்‘, ‘நாடுவாரிக் குழுக்களும்‘, இப்படியான தேர்தல் மோசடி நாடகம் ஒன்றை நிகழ்த்தி தேர்தல் முடிவுகளைக் குழப்ப முற்படுகின்றார்களா? என்ற ஐயம் தமிழ்த் தேசிய உணர்வாளர்களிடம் இயல்பாக எழுகின்றது. சுயாதீனமாக செயற்படுவதாக தேர்தல் ஆணையத்தினர் கூறிக்கொண்டாலும், தம்மை நியமித்த ‘மதியுரைக் குழு‘ எசமானர்களுக்கு இவர்களை துணைபோகின்றார்களா? என்ற சந்தேகம் மக்களிடையே வலுவாகவே எழுகின்றது. சரி, இவை ஒருபுறம் இருக்கட்டும். நடைபெற்று முடிந்த தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவர் வெற்றியீட்டியுள்ளார்கள்: ஒருவர் சேனாதிராஜா ஜெயானந்தமூர்த்தி, மற்றையவர் ம.க.ஈழவேந்தன். இவர்களில் சே.ஜெயனாந்தமூர்த்தி அவர்கள் அதிக அளவிலான விருப்பு வாக்குகளைப் பெற்றுள்ளார். சரியான தரப்புக்களின் கைகளில் இன்று நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கிட்டியுள்ள நிலையில், தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டத்திற்கான அனைத்துலகப் பரப்புரைத்தளமாக விளங்கப் போகும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தை தலைமையேற்று வழிநடத்துவதற்கு சே.ஜெயானந்தமூர்த்தி போன்றவர்களே தகுதியானவர்கள். நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பெயரில் தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டத்தை தவறான சக்திகளிடம் விலைபேசுவதற்கும், சூரியத்தேவனுக்கு சவால்விடுக்கும் வகையில் தமிழீழ தாயகத்தை மத ரீதியில் துண்டாடுவதற்கும் இதுவரை முற்பட்டவர்கள் இனியாவது ஒதுங்கியிருந்து சட்டஆலோசனை வழங்குவது பொருத்தமாக இருக்கும். இதுதான் தமிழ்த் தேசிய உணர்வாளர்களின் ஒருமித்த கருத்து. இதுவே புலம்பெயர்வாழ் தமிழீழ மக்களின் எண்ணக்கருத்துமாகும்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக