வியாழன், 20 மே, 2010

இயற்கை எனது நண்பன் ..............


ஓர் இனத்தின் வரலாறு தோற்கடிக்கப்பட்டதாக அறிவித்து, ஓராண்டு நிறைவெய்தி இருக்கிறது. கடந்த ஓராண்டிலே எத்தனையே விமர்சனங்கள் புதிது புதிதாக தோன்றி மறைந்து கொண்டிருக்கின்றன. விமர்சனங்களைப் பொறுத்தமட்டில் அதன் ஆளுமை மாந்த வாழ்வின் அடித்தளத்தை முன்னிருத்தியே அதன் நிலைத்தன்மை நீடித்திருக்கும். மார்க்சிய கோட்பாட்டின்படி இந்த மண்ணின் மேல் உள்ள எல்லா வகையானவையும் விமர்சனத்திற்குரியவை தான். ஆக,
 நேர்மையும் உண்மையும் கொண்டவர்கள் விமர்சனங்களைக் குறித்து அஞ்சத் தேவையில்லை. மாறாக, விமர்சனம் நம்மை செழுமைப்படுத்தும், கூர்மையாக்கும், அடுத்தக்கட்ட நகர்வுக்கு அசைவில்லாமல் அழைத்துச் செல்லும். அதே நேரத்தில் விமர்சனம் என்பதற்கும், புழுதி வாரி தூற்றுதல் என்பதற்கும் மிகப்பெரும் இடைவெளி இருக்கிறது. விமர்சனம் என்பது இதயத்தூய்மையோடு செய்யப்படுவது. புறம் சொல்வதென்பது ஒரு காரணியை கையில் எடுத்துக் கொண்டு அதையே உண்மை என்று பதிவு செய்ய துடிப்பது. இப்போது விமர்சனம் என்ற போர்வையில் புதிது புதிதாக விமர்சகர்கள் தோன்றியிருக்கிறார்கள். அவர்கள் தேசிய தலைமையைக் குறித்த விமர்சனங்களை தங்களுடைய முகங்களை மறைத்துக் கொண்டு செய்ய துவங்கியிருக்கிறார்கள். தேசிய தலைமையின் ஆளுமையை, அதன் செயல்திறனை விமர்சிப்பதென்பது அதன் உள்ளடக்கமாக இருக்கிறது. குறிப்பாக தமிழீழ தேசிய போராட்டத்தின் வரலாற்றுப் பக்கங்களை எப்படி புரட்டினாலும் அதன் மையப்புள்ளியாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் அடிப்படை கட்டமைப்பை வார்த்தெடுத்தப் பெருமை உலக வரலாற்றில் தமிழினத்தின் வல்லமையை, ஆற்றலை, அதன் துடிப்பை வெளிகொணர்ந்தவர் மேதகு தேசிய தலைவர் என்பதிலே இருவேறு கருத்துக்களுக்கு இடம் இருக்க முடியாது. காரணம், ஒரு போராட்டம் என்பது எப்படி வடிவமைக்கப்பட வேண்டும் என்பதிலே தலைவர் தெளிவாக இருந்தார். அந்த வடிவமைத்தலில் உள்ள குறைபாடுகளை களைந்தெறிவதில் கண்ணும் கருத்துமாக செயல்பட்டார். அவரின் ஒவ்வொரு அசைவும் தமது மக்களின் நீடிய வாழ்வியல் நெறிக்கு அரனாக இருக்க வேண்டும் என்பதிலே அவர் கொஞ்சமும் தம்மை சமரசம் செய்தது கிடையாது. ஆக, மக்கள் வாழ்வு தான் தமது வாழ்வு என்பதிலும் இந்த நாடு மக்களுக்கானது என்ற உயரிய கோட்பாட்டிலும் அவரின் சிந்தனையும், செயலும் ஒரே நேர்கோட்டில் பயணம் செய்தது. இதன் காரணமாக தொடர்ந்து 30 ஆண்டு காலமாக யாராலும் அசைத்துப் பார்க்க முடியாத ஒரு அரசோடு சமபலம் பொருந்திய ஆற்றல் வாய்ந்த பெரும்படையாக தமிழர் படை நீடித்தது. கடந்த மே திங்களில் நாம் ஒரு இடத்தில் முறியடிக்கப்பட்டோம் என்ற ஒரே காரணத்தைக் கொண்டு, தேசிய தலைமையை விமர்சிப்பதும், அல்லது வேறொருவரை தமிழ் தேசியத்தின் அடையாளமாக முன்னிருத்த முனைவதும், தமிழரின் விடுதலையை கருவறுக்கும் செயலாக இருக்குமே தவிர, அது எந்த விதத்திலும் தமிழர் தம் விடுதலையை வென்றெடுக்க உதவாது என்பதை உலக தமிழ் உறவுகள் புரிந்து கொள்ள வேண்டும். சிங்கள அரசப்படையும், இந்திய உளவுத்துறையும் இணைந்து தமிழர்களை பிரித்தாளும் சூழ்ச்சியில் தொடர்ந்து பணியாற்றிக் கொண்டிருக்கிறது. அந்த அடிப்படையில் புதிது புதிதாக போராளிகளை உருவாக்கி, அவர்கள் விரித்த வளையிலே தமிழர்களை விழ வைக்கும் செயலை செய்யத் துவங்கி இருக்கிறது. அதன் அசைவுகளை, ஆதாரங்களை உலக தமிழ் உறவுகள் ஊடகங்கள் வாயிலாக தொடர்ந்து அறிந்து வருகிறார்கள். ஒரு வரலாற்றை அழித்தொழிக்கும் பெரும் தொண்டை உளவுத்துறை சிரமேற்கொண்டு சிறப்புற செய்து கொண்டிருக்கிறது. அதற்கு எமது உறவுகளின் சில அமைப்புகளும் பலியாகிக் கொண்டிருக்கின்ற பெருங் கொடுமையை தடுத்து நிறுத்த வேண்டிய பொறுப்பு நமக்கு இருக்கிறது என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. இதற்கு என்ன செய்ய வேண்டும் என்றால், ஒரே ஒரு தீர்வு இருக்கிறது. இந்த தீர்வுக்கு மாற்று ஒன்றும் இல்லை. உலகத்தின் பாதைகள் அனைத்தும் ரோமை நோக்கி செல்லட்டும் என்ற சொல்லின்படி உலகத் தமிழர்களின் மனங்கள் எல்லாம் ஒரே பாதையில் தான் பயணிக்க வேண்டும். அது, தேசிய தலைவர் சொல்லும் பாதை, அவர் செல்லும் பாதை மட்டும் தான். அதை மறுத்து, வேறொன்றை சிந்திக்கவோ, அல்லது செயலாக்கவோ நாம் முனைந்தோமென்றால் நாம் தோற்கடிக்கப்படுவோம் என்பதை மறந்துவிடக் கூடாது. நமது போராட்ட வரலாறும் தோற்கடிக்கப்படும். நாம் செய்த ஈகங்கள், எமது மக்கள் சிந்திய குருதி, எமது மாவீரர்களின் அர்ப்பணிப்பு நிறைந்த வாழ்வு பொய்யாக்கப்பட்டுவிடும். அதை நீடித்த ஒரு நிலைக்கு அழைத்துச் செல்ல வேண்டிய முழு பொறுப்பும் உலகத் தமிழர்களிடம் தான் குவிந்திருக்கிறது. குறிப்பாக புலம் பெயர் வாழ் தமிழர்கள் தொடர்ந்து குழப்பப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். தலைமையின் உண்மை நிலைப்பாட்டை அவர்களால் சில நேரங்களில் புரிந்து கொள்ள முடியவில்லை. யார் சொல்வது சரியானது என்பதை அவர்கள் தொடர்ந்து சந்தேகிக்க வேண்டிய நிலைக்கு உள்ளாக்கப்படுகிறார்கள். ஆகவே அவர்கள் உளவியல் தன்மையும், பல்வேறு அசைவுகளுக்கு உட்படுத்தப்படுகிறது. ஒரு நிலத்தில் உயிரை பணயம் வைத்தவர்கள், உணவின்றி வாழ்பவர்கள், பாலியல் கொடுமைக்கு உள்ளாக்கப்படுபவர்கள், கேட்பார் இன்றி கொல்லப்படுபவர்கள் என ஒரு இனத்தின்மீது தொடுக்கப்படும் அடக்குமுறைக்கு அடுத்த ஒரு நிலை இருக்கிறது, அது அன்னிய மண்ணில் ஏதிலிகளாய் வாழ்வது. அந்தந்த நாட்டு அரசால் தொடர்ந்து நாம் கண்காணிக்கப்படுவது. நமது உளவியல் மற்றும் ஆளுமை தன்மைகள் விடுதலை உணர்வின்றி தகர்க்கப்படுவது. இதைவிட பெருங்கொடுமை இறந்துபோவதில் அடங்கிவிடும். அப்படி ஒரு ஏதிலி வாழ்வு வாழும் தமிழ் உறவுகள், தமது அரச சிந்தனையில் அரசியல் தெளிவை உள்ளடக்கிக் கொண்டு, அதை செயல்படுத்துவதற்கு தமது அரசியல் களத்தை முன்னெடுத்து, தமக்கான ஒரு அதிகாரத்தை கைப்பற்றுவதற்கு தொடர்ந்து போராட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள். நிலை இப்படி இருக்க, இந்த குழு சரியானதா? அந்த அணி சரியாக நகர்கின்றதா? காடுகளில் மறைந்து தேசிய தலைவரின் பணியை வேறொரு அணி தொடர்கிறதா? அதை கண்டு வர தமிழ்நாட்டிலிருந்து ஒரு அணி புறப்படுகிறதா? என்ற புறவழிச் சிந்தனைகளை நாம் புறந்தள்ள வேண்டும். நமது கருவி கப்பல்கள் நடுக்கடலில் மூழ்கடிக்கப்பட்டதும், நமது போராட்டம் துரோகிகளால் காட்டிக் கொடுக்கப்பட்டதும் தொடர்ந்து இப்படிப்பட்ட நிகழ்வுகளால்தான் இறுதி செய்யப்பட்டது என்பதை இந்த நேரத்திலே நாம் பதிவு செய்வதில் பொருத்தம் இருப்பதை உணர்கிறோம். இந்த நேரத்தில் நாம் எந்த சஞ்சலத்திற்கும் இடம் தரக்கூடாது. கருவிப் போராட்டத்தைவிட, கருவியின் தாக்குதலை விட, உளவியல் தாக்குதல் என்பது உயர்ந்த நிலைக் கொண்டது. ஒரு மனிதனை உளவியல் கோட்பாட்டளவில் வீழ்த்திவிடலாம் என்கின்ற யுக்தி, இரண்டாம் உலகப்போரிலேயே தொடங்கியது. கோயம்பால்ஸ் எந்தவித அடிப்படையும் இல்லாமல் தொடர்ந்து தமது நாடு வெற்றிப் பெற்றதாக அறிவித்து, மக்களை எழுச்சியுடன் வைத்துக் கொள்ள நடத்திய போராட்டங்கள் நாம் அறிந்ததுதான். ஆகவே, நமது மக்கள் எவ்வித உளவியல் பலகீனத்திற்கும் ஆளாகாமல் தொடர்ந்து ஒரே நேர்க்கோட்டில் பயணிக்கும் உள்ளார்ந்த பெருமையை பெற்றவர்களாக நீடிக்க வேண்டும். அர்ஜூனனுக்கு வில்வித்தை கற்றுத்தரும் போது இலை தெரிகிறதா? கிளை தெரிகிறதா? என்று கேட்டபோது, இல்லை என்ற பதில் வந்தது. உடனே விடு அம்பை என்று அவன் குரு சொல்கிறான். ஆக நமக்கு இடையில் இருக்கும் இந்த சிறு குழுக்களான இலைகளோ, கிளைகளோ பார்வையில் படக்கூடாது. அவை கனி என்கின்ற நமது தமிழீழத்தை மட்டுமே பார்க்க வேண்டும். அந்த தமிழீழத்தை நம்மிடம் பெற்றுத் தருவதற்கான தலைமைத்துவம் பொருந்திய நமது தேசிய தலைவரை மட்டுமே நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும். எந்த நிலையிலும் இந்த கருத்தில் இருந்து நாம் களையக்கூடாது. நமது தேசம், நமது தேசிய தலைவரின் தலைமையில்தான் அமையப் போகிறது. ஆகவே, தேசிய தலைவரை இருட்டடிப்பு செய்வதற்காக அவர் தம் வாழ்வில் நிகழ்த்திய சிறப்பு வாய்ந்த பல நிகழ்வுகளை குழி தோண்டி புதைப்பதற்காக சிங்கள பேரினவாத அரசு செய்யும் குறுக்கு வழி செயல்களை நாம் புரிந்து கொள்ள வேண்டும். எந்த நிலையிலும் நமது எண்ணமும், செயலும் எந்த சலனத்திற்கும் உட்படாமல் வெற்றி என்கின்ற அடிப்படை காரணியை நோக்கியே பயணிக்க வேண்டும். நமக்கு யாரோடு முரண்பாடு, யாரோடு சமரசம், யாரோடு சமாதானம் என்கின்ற அரசியல் அறிவு தெளிவாக்கப்பட வேண்டும். காரணம், நமக்கான அரசியல் அறிவு தெளிவாக்கப்படா விட்டால் இன்று நடக்கும் எந்த அரசியல் சரியான அரசியல் என்பதை நாம் புரிந்து கொள்ள முடியாது. இந்த புரிதலற்ற நிலை நம்மை தோல்விப் பாதைக்கு அழைத்துச் செல்லும். எனவே, எமது நாட்டின் வரலாற்றில், எமது வாழ்வின் மகிழ்வில், எமது மகிழ்வின் எல்லையில், எமது தேசிய தலைவரின் உருவம் மட்டுமே இருக்க வேண்டும் என்பதில் எந்த நேரத்திலும் நாம் குழப்பிக் கொள்ள வேண்டாம். தேசிய தலைவர் இல்லை என்பதை வேறு வழியில் சொன்னால், இப்படிப்பட்ட ஒரு குறுக்குவழி கையாளப்படுகிறது. ஆனால் எமது தலைவர் வருவார். தமிழர்களுக்கான மீட்பராக அவர் எழுச்சியோடு மீண்டும் களமாடுவார். அப்போது இந்த பதர்கள் எல்லாம் பறந்து போகும். அந்த மாபெரும் ஆற்றல் வாய்ந்த தலைவன் புயலாக வீசும்போது, அவருக்கெதிரான தமிழருக்கெதிரான எல்லா இலைகளும் பறந்துபோய் குப்பைகூளத்தில் சேர்க்கப்படும். நாம் தொடர்ந்து நமது விடுதலை பயணத்தை நடத்திச் செல்வோம். தேசிய தலைவர் நம்மிடம் பேசும் காலம் வெகுதூரத்தில் இல்லை. அவரின் குரல் சத்தத்திலே சிங்கள பாசிசம் குலைநடுங்கி செத்தொழியும். தேசிய தலைவர் அடிக்கடிச் சொல்வார், இயற்கை எனது நண்பன் என. இன்று சிங்கள பாசிச வெறியர்களுக்கு தேசிய தலைவரின் நண்பன் துணை புரிந்ததை கண்கூடாக காண முடிந்தது. எமது இனத்தின் குலை அறுத்த கொடியவன் ராஜபக்சேவின் கூட்டாளிகள், எமது மக்களை கொன்றொழித்த நாளை வெற்றி நாளாக கொண்டாடி மகிழ நினைத்தபோது, எமது தேசிய தலைவரின் நண்பன் துணைக்கு வந்தான், மழையாக, புயலாக, வெள்ளப் பிரளமாக. நின்றது வெற்றி விழா, வென்றது எமது தேசிய தலைவரின் தத்துவம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக