வியாழன், 20 மே, 2010

முள்ளிவாய்க்கால்- தமிழரின் வரலாற்றில் என்றுமே மறக்கப்பட முடியாத மரணபூமி.

அப்பாவிப் பொதுமக்கள்- காயம்பட்ட, சரணடைந்த போராளிகள் என்று ஆயிரக்கணக்கானோரின் குருதி உறைந்து போன மண். அங்கு நடந்த கொடுமைகளும் கொடூரங்களும் உலகின் பார்வைக்கு இப்போது தான் வரத் தொடங்கியுள்ளன. சரணடைந்த போராளிகளை ஈவு இரக்கமின்றிச் சுட்டுக் கொல்லும் காட்சிகள் உலகத் தொலைக்காட்சிகளில் வந்து அதிர்ச்சியை ஏற்படுத்தின. போராளிகளின் உயிரற்ற உடல்களை சிதைத்துச் சின்னாபின்னப்படுத்தி கேவலப்படுத்தும் காட்சிகளை புகைப்படங்கள் காண்பித்தன. இருபத்தோராம் நூற்றாண்டில் இப்படியும் மனிதர்களா- என்று உலகமே ஒரு கணம் வெட்கித் தலைகுனிந்தது. சிங்கள தேசத்தின் படைகள் போரிடும் வீரர்களைக் கொண்டதல்ல- மனித முகத்தோடு இரத்த வெறிகொண்டு அலையும் மிருகங்கள் என்பது நிரூபணமானது.
 சரணடைந்த போராளிகளை நிர்வாணமாக்கி- பின்புறம் கைகளைக் கட்டி வைத்திருக்கும் காட்சிகள் இப்போது வெளியாகியுள்ளன. இப்படி போர்க்களத்தில் நடந்த ஆயிரமாயிரம் கொடுமைகள் உலகின் பார்வைக்கு வந்து விடாது என்று நம்பியிருந்தது சிங்களதேசம்.
 அந்த நம்பிக்கையில் தான் தாம் செய்த போர்க்குற்றங்களை மறைத்து- மறுத்து வந்தது. ஆனால் இப்போது வெளியாகின்ற ஒவ்வொரு ஆதாரங்களும் சிங்களதேசம் போரின் போது கடைப்பிடிக்கப்படும் மரபுகளை எந்தளவுக்கு மீறியுள்ளது-என்பதற்குச் சாட்சியாகியுள்ளன. தமிழ்மக்களுக்கு இந்தப் போரில் கிடைத்தது போன்ற கசப்பானதொரு அனுபவம்- யாருக்குமே வந்து விடக் கூடாது. உலக வரலாற்றில் யூதர்களின் மீது நாசிப்படைகள் செய்த இனஅழிப்பு நடவடிக்கைகு கொஞ்சமும் குறைவற்றது சிங்களப் படைகளின் இனஅழிப்பு. கொடூரமான போரின் கதாநாயகர்களாக அவர்கள் இன்று உலா வருகிறார்கள். போர் விதிமுறைகளை மீறி சரணடைந்தவர்களைக் கூடக் கொன்று குவிக்கும் புதிய மரபை உருவாக்கிக் கொடுத்த சிங்கள தேசத்துக்கு இன்று செங்கம்பள வரவேற்பு. ஆனால் முள்ளிவாய்காலில் செங்குருதி சிந்திய மக்களுக்கு அடிமை வாழ்வு. இத்தனை கொடூரங்களைப் புரிந்த பின்னரும் சிங்கள தேசத்துக்குப் பின்னால் ஒரு பகுதித் தமிழர்கள் மறைந்து நின்று பூச்சாண்டி காட்டுகிறார்கள். ஆயிரக்கணக்கான மக்களை கொன்றழிக்கக் காரணமாக இருந்த சரத் பொன்சேகாவுக்கு வாக்களிக்குமாறு கோரினார்கள். இத்தனை அவலங்களுக்கும் காரணமான மகிந்தவுக்காக இன்னொரு பகுதித் தமிழர்கள் வாழ்த்துப்பா பாடுகிறார்கள். இது தான் இராஜதந்திரமாம். இவையெல்லாம் எதை உணர்த்துகின்றன? எமக்கு இன்னமும் சரியான பாதை தெரியவில்லை. சிங்கள தேசத்தை நம்பி நம்பியே பழக்கப்பட்டுப் போனவர்கள் நாம். இப்போதும் அவர்களை நம்பும் நிலைக்கு வந்திருக்கிnறோம். இந்தளவுக்கு தமிழினம் அவலங்களைச் சந்திக்கக் காரணமானவர்களை- எதையாவது செய்வார்கள் என்று நம்புவது தான் ஆச்சரியம். கொன்று குவித்தவர்கள், கொல்லச் சொல்லிக் கட்டளை இட்டவர்கள் எல்லோரையும் மன்னிக்கும் அளவுக்கு நாம் வந்து விட்டோம். இதுதான் தமிழரின் பெருந்தன்மையைக் காட்டவில்லை. நாம் ஏமாந்தவர்கள் என்பதை- இன்னும் ஏமாற்றப்படவுள்ளோம் என்பதை காட்டுகிறது. இன்னும் பேரழிவுகளை சந்திக்கப் போகிறோம் என்பதைக் காட்டுகிறது. மகிந்தவோ பொன்சேகாவோ எமக்கு ஒருபோதும் உரிமைகளையோ அதிகாரங்களையோ தந்து விடப் போவதில்லை. இது நாம் காலம் காலமாக அவர்களிடத்தில் கற்ற பாடம். முள்ளிவாய்க்காலில் கூட நாம் சிங்களதேசத்தின் தலைவர்கள் ஈவு இரக்கமற்ற பேரினவாதிகள் என்பதை மீளவும் உறுதிப்படுத்திக் கொண்டோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக