வியாழன், 20 மே, 2010

சிங்கள நினைவு தூபிகளையும், குடியேற்றங்களையும் அமைப்பது எந்த வகையில் நீதியானது?


தன்னுடைய படைகளை, ஆசுவாசப்படுத்துவதற்காக நினைவுச்சின்னங்களை எழுப்புவது தவறில்லை, ஆனால் அதை தமிழர்கள் பிரதேசத்தில் நிறுவுவது, தமிழர்களை மேலும் அவமானப்படுத்துவதாகவும் கேலிசெய்வதாகவும் காணப்படுகின்றது. இவ்வாறான நினைவுச்சின்னங்களை அமைத்து, தமிழ்ப்பிரதேசங்களையும் தமிழர்களையும் உல்லாசப்பயணிகளின் பார்வைக்குவைத்து நிதியீட்ட முனைகின்றார் என்பது வெளிச்சம்.
 மேலும் அவ்வாறான நினைவுத்தூபிகளை அமைப்பதிலிருந்து இலங்கை முழுவதும் சிங்கள தேசம் என்று நிலைநாட்டவே பார்க்கின்றார்… அவ்வாறான நிலைகளைப்பார்க்கும்போது, தமிழர்கள் வெட்கித்தலைகுனிந்து “நீங்கள் எங்களுக்கு அடிமை” என்ற குற்றுணர்வை ஏற்படுத்தும் நோக்கிலும், தான் எது செய்தாலும் தமிழ் அரசவை உறுப்பினர்கள் தலையாட்டி, வாய்பொத்தி, கைகட்டி நிற்கவும் வேண்டும் என்பதனையும் வலியுறுத்துகின்றார். புலிகள் முற்றாக முடக்கப்பட்டார்கள் … ! ?இதன்மூலம் தமிழர்களின் ஆயுதக்கட்டமைப்பு ஒழிக்கப்பட்டது … அதுகும் …?! அதற்காகத் தமிழ்ப் பகுதிகளை சிங்கள நினைவுத்தூபிகளையும், குடியேற்றங்களையும் அமைப்பது எந்த வகையில் நீதியானது என்பதனை அவர் உலகிற்கு வெளிப்படுத்து வதோடு, அவ்வாறான நினைவுத்தூபிகளை தேசத்தின் ஒருமைப்பாட்டைக்கருத்தில் கொண்டு அகற்றவேண்டும் என்பதற்கு அனைத்து பாராளுமன்ற தமிழ் உறுப்பினர்களும் குரல்கொடுக்கவேண்டும். “நம் … எலோரும் ஒரு.. …தய் புளைகள்…” என்று தமிழில் கொச்சையாக கதைத்தால் மட்டும் தமிழர்களின் மனதில் இடம்பிடித்துவிடமுடியாது… தமிழர்களை மகிழ்ச்சிப்படுத்தவும், அவர்களின் உரிமைகளை குறைவுபடாது காப்பதோடு, அவர்களின் மன உளைச்சலையும் போக்குவதே ஒரு தலைவனுடைய கடமை… ஒரு தேசத்தில் வாழும் ஒரு இனமான சிங்களவரை சந்தோசப்படுத்தவென்று அதே தேசத்தில் வாழும் தமிழ் இனத்தை அடிமைப்படுத்துவதோ, இழிவுபடுத்துவதோ பொருத்தமற்றது… மிஸ்டர் பிரசிடன்ற். புலிகளை அழிப்பதாக மனிதர்கiளுயும், மனித நேயத்தையும் தமிழர்கள்பால் அழித்தாகிவிட்டது… “ஒரு இனத்தின் மன உளைச்சலை அதிகரிப்பதும்” இனப்படுகொலையே! என்பதனை சட்டத்தரணியான மகிந்தவிற்கு நாம்சொல்லித் தெரிய வேண்டியதில்லை. எனக்கும் சிங்களம் கதைக்க ஆசை என்றோ அல்லது தேவை என்றோ அதனைத்தவறாக கதைத்தால், சிங்களவர்கள் ஏற்றுக்கொள்வார்களா? … “பிள்ளை”களுக்கும், “பிழை” களுக்கும் கருத்துக்களில் பலத்த வேறு பாடுகள் தமிழில் இருக்கின்றது என்பதனை மகிந்தவிற்கு பக்கத்தில் இருக்கும் தமிழர்கள் விளக்கமாட்டார்களா??? மகிந்த தமிழ் கதைக்கத்தேவையில்லை… அவர் கதைப்பதை முழுமையாகத் தமிழில் ஒருவர் மொழிபெயர்த்தாலே போதுமானது. ஆதன்மூலம் தமிழர்கள் இலகுவாகவும் சரியாகவும் புரிந்து கொள்வார்கள். முஸ்லீம் இனத்தை மகிழ்ச்சிப்படுத்தவென்று அவர் என்ன “குறானை”படித்துவிட்டா வரப்போகின்றார்… அல்லது, அவர்களுடைய காரியப்படி மேற்படி விடயங்களை மேற்கொண்டா மகிழ்ச்சிப்படுத்தப்போகின்றார்… எமக்கு மகிந்த தமிழ் கதைப்பது அவசியமல்ல, தமிழர்கள் தமிழ் கதைப்பதே அவசியம். இவருடைய போக்கு சிங்களவர்கள் தமிழ் அறிகின்றார்களோ இல்லையோ தமிழர்களை தமிழ் மறக்கச்செய்ய எத்தணிக்கின்றார்… அத்தோடு தமிழ் அடிச்சுவடுகளை அடியோடு மாற்ற அதாவது அழிக்க எத்தணிக்கின்றார். அது சிங்கள இனம் கூண்டோடு சேர்ந்து போர்தொடுத்தாலும் தமிழ் இனத்தையோ தமிழ் மொழியையோ மகிந்தவால் ஒன்றும் செய்யமுடியாது… தமிழ் மொழி இரு கருக்குள்ள பட்டயம்… அது அழிக்க அழிக்க கூர் அதிகமாகிக்கொண்டே போகும். தற்காலிக பின்னடைவுகளை முன்பெல்லாம் தமிழர்கள் சந்திக்காமல் இல்லை! மகிந்த அரசு தமிழ் பிரதேசங்களை சிங்கள பகுதியாக ஆக்கிரமிப்பது முறையற்றது, என அவர் பகிரங்கமாக மன்னிப்புக்கோரவேண்டும். அத்துடன் அவற்றை அகற்றவும் வேண்டும். தமிழர்கள் குடியேறவே ஆயிரம் பின்னடைவுகளைக்கூறும் இந்த வேளையில், நினைவுத்தூபி கட்டுவதற்கு ஏன் இவ்வளவு முன்னடைவு. தமிழர்கள் கையாலாகாதவர்கள் என்ற ஏழனத்தைக் காட்டுவதாகவே இது இருக்கின்றது. எனவே மதிப்பிற்குரிய இலங்கை அதிபர் அவ்வாறான தூபிகளை சிங்கள பிரதேசங்களுக்குள் கட்டும்படியும் தமிழ்ப்பிரதேசங்களில் தமிழ் நினைவுச்சின்னங்களை எமது தமிழர்கள் எண்ணப்படி அமைத்துக்கொள்வார்கள் என்பதனை உணர்ந்து கொள்ள வேண்டும். தயவுசெய்து “வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சாமல்” தமிழர்களின் மனதை இடம்பிடிக்கக்கூடிய யாப்பை மாற்றியமைத்து அவர்களும் சுதந்திரமாக சகல உரிமைகளையும் அடைய ஆவண செய்யவேண்டுகின்றேன்.
அடிச்சுவடு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக