திங்கள், 31 மே, 2010

நல்லிணக்கக் குழு மீது எமக்கு எவ்வித நம்பிக்கையும் இல்லை – செல்வம் அடைக்கலநாதன்



ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்ட நல்லிணக்கக் குழு மீது எமக்கு எவ்வித நம்பிக்கையும் இல்லை. இந்தக் குழுவால் தமிழ் மக்களுக்கு விமோசனம் கிடைக்குமா என்பது சந்தேகமே.
போர்க்குற்றம் தொடர்பில் இலங்கை அரசுக்கு இன்று ஏற்பட்டுள்ள சர்வதேசத்தின் அழுத்தங்களைத் தணிப்பதற்கான ஒரு தந்திரமாகவே இதனைப் பார்க்கிறோம் என தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் (கேசரி வார வெளியீட்டுக்க ) வழங்கிய விசேட செவ்வியில் தெரிவித்துளார்
.


அவர் அளித்த செவ்வி விபரம் பின்வருமாறு:


கேள்வி: ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்ட நல்லிணக்கக் குழு தொடர்பில் தங்களது கருத்து என்ன?


பதில்: இதில் எமக்கு எவ்வித நம்பிக்கையும் இல்லை.


இந்தக் குழுவால் தமிழ் மக்களுக்கு விமோசனம் கிடைக்குமா என்பது சந்தேகமே. போர்க்குற்றம் தொடர்பில் இலங்கை அரசுக்கு இன்று ஏற்பட்டுள்ள சர்வதேசத்தின் அழுத்தங்களைத் தணிப்பதற்கான ஒரு தந்திரமாகவே இதனைப் பார்க்கிறோம். கடந்த காலங்களில் தமிழ் மக்களின் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்காக எத்தனையோ குழுக்கள் நியமிக்கப்பட்டன. அவை எவற்றினாலும் எந்தப்பயனும் கிடைக்கவில்லையென்பதனை நாம் யதார்த்தபூர்வமான அனுபவத்தின் ஊடாகக் கண்டுள்ளோம். இலங்கை அரசாங்கங்கள் நியமிக்கும் ஆணைக்குழுக்கள் என்பவை அந்தந்தக் காலகட்டத்தில் சூடுபிடிக்கும் பிரச்சினைகளைத் தவிர்த்துக் கொள்வதற்கான ஒரு தற்காலிக தந்திர ஏற்பாடாகவே இருந்து வருகிறது.


கேள்வி: விடுதலைப் புலிகளுடான யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டும் இதுவரை தமிழ் மக்களின் பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் அரசாங்கம் எவ்வித முன்னெடுப்புகளையும் மேற்கொள்ளவில்லை என்று குற்றம் சாட்டப்படுகிறது. இந்த அரசாங்கம் தமிழ் மக்களின் பிரச்சினைக்குத் தீர்வு காணும் என்று நம்புகிறீர்களா?


பதில்: இன்றைய அரசாங்கம் தமிழ் மக்களின் பிரச்சினைக்குத் தீர்வு காண்பது தொடர்பில் எதனையும் வெளிப்படையாகவோ திடமாகவோ சொல்லவில்லை. இந்த நிலையில் எதிர்வரும் எட்டாம் திகதி இந்தியாவிடம் தீர்வுத் திட்டம் தொடர்பாக அரசாங்கம் ஓர் அறிக்கையைக் கையளிக்கவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் அடங்கியுள்ள விடயங்கள் கூட எமக்குத் தெரியாது. இவற்றினையெல்லாம் நோக்கும் போது இன்றைய அரசு தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு காணுமா அல்லது எவ்வாறான தீர்வினை முன்வைக்கும் என்று எம்மால் எதனையும் சொல்ல முடியாத நிலையே உள்ளது. அனைத்தும் கேள்விக்குறியே.


கேள்வி: இந்தியாவிடம் கையளிக்கப்படவுள்ள அறிக்கை எவ்வாறாக இருக்குமென நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள்?


பதில்: பெரும்பாலும் 13 ஆவது திருத்தச்சட்ட மூலத்தைக் கொண்டதான ஒரு தீர்வுத் திட்டமாக இருக்குமென நம்பலாம்.


கேள்வி: அது ஏற்கெனவே உள்ளது. அதுவும் இந்திய அரசினால் பரிந்துரைக்கப்பட்டது தானே? அதனைத் திருப்பி புதுடில்லி அரசிடம் கூறுவதில் என்ன பயன்?


பதில்: அந்தச் சட்டமூலத்தில் இதுவரை அமுல்படுத்தப்படாதுள்ள காணி, பொலிஸ் அதிகாரங்கள் தொடர்பில் சில ஏற்பாடுகள் இருக்கலாமென நினைக்கிறேன். எது எப்படியிருப்பினும் 13 ஆவது திருத்தச் சட்டத்துக்கு மேலாக அரசாங்கம் எதனையும் வழங்காது. சில வேளைகளில் அது குறைவடையவும் வாய்ப்புகள் உண்டு.


கேள்வி: அரசாங்கம் த.தே.கூட்டமைப்புடன் பேச்சு வார்த்தை நடத்த விரும்புவதாகத் தெரிவிக்கப்படுகிறதே?


பதில்: புரிந்து கொள்ளவேண்டும். வடக்கு, கிழக்கு தமிழ் மக்களின் ஏகோபித்த பிரதிநிதிகளாக நாம் தெரிவு செய்யப்பட்டுள்ளோம். அதற்கான ஆணையை மக்கள் எமக்கு வழங்கியுள்ளனர். ஆகவே, அந்த மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்கும் விடயத்தில் எம்முடனே பேச வேண்டும்.


அதுவும் அவ்வாறானதொரு பேச்சுவார்த்தை காலம் தாழ்த்தாமல் விரைவாக முன்னெடுக்கப்பட வேண்டும். காலத்தைத் தொடர்ந்தும் இழுத்தடிப்புச் செய்வது நல்ல தல்ல. ஆகவே, அரசாங்கமானது தமிழ் மக்களின் அடிப்படை மற்றும் இனப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்காக எம்டன் பேசுமென்ற நம்பிக்கையை இன்னும் இழந்து விடாமல் அழைப்புக் கிடைக்கு மென்றே எதிர்பார்க்கிறோம்.


கேள்வி: வடக்கும் கிழக்கும் இணைக்கப்படாத நிலையில் முன்வைக்கப்படும் தீர்வுத்திட்டத்தை உங்கள் கட்சி ஏற்றுக் கொள்ளுமா?


பதில்: நாடாளுமன்றத்தில் ஆளும்தரப்பு மூன்றிலிரண்டு பெரும்பான்மையைப் பெறக் கூடிய ஒரு நிலையில் உள்ளது. ஆகவே, அதனைப் பெற்றுக்கொண்டு வடக்கையும் கிழக்கையும் இணைப்பதில் பிரச்சினை இல்லை. இன்றைய நிலையில் இதனை இலகுவாகப் பெற்றுக் கொள்ள முடியும். ஆனால், வடக்கும் கிழக்கும் இணைக்கப்படாத நிலையில் முன்வைக்கப்படும் தீர்வுத்திட்டத்தால் எந்தப் பயனும் கிடைக்கப் போவதில்லை. வடக்கும் கிழக்கும் இணைந்த தீர்வுத் திட்டமே வேண்டும்.


கேள்வி: வடக்கும் கிழக்கும் இணைக்கப்படாத நிலையில் முன்வைக்கப்படும் தீர்வுத் திட்டத்தை நீங்கள் ஏற்றுக் கொள்ளவில்லையென்பதனை நீங்கள் வெளிப்படையாகக் கூறுகிறீர்களா?


பதில்: நிச்சயமாக, ஏற்றுக்கொள்ளவே மாட்டோம்.


வடக்கும் கிழக்கும் இன்று நில ரீதியாக இணைந்தே உள்ளன. இப்போதைய தேவை நிர்வாகரீதியான செயற்பாடே. வடக்கும் கிழக்கும் இணைக்கப்படாத தீர்வு ஒன்று முன்வைக்கப்படுமானால் நாம் அதற்கு எதிராக சர்வதேசத்தின் ஊடாக அழுத்தங்களை வழங்குவோம்.


கேள்வி: வடக்கு, கிழக்கு பிரிக்கப்பட்ட பின்னர் இந்தியாகூட அது தொடர்பில் வெளிப்படையாக எதனையும் கூறவில்லையே . இந்த நிலையில் சர்வதேசம் அழுத்தம் என்பது எந்தளவுக்கு வெற்றியளிக்கும்?


பதில்: உண்மையே. வெளிப்படையாக இந்தியா? கூறவில்லைதான். புதுடில்லியில் பிரதமர் மன்மோகன் சிங்கைச் சந்தித்த போதும் இது குறித்துத் தெரிவித்தோம். இலங்கைத் தமிழர் பிரச்சினை தொடர்பில் இந்தியாவுக்குத் தார்மிக பொறுப்புள்ளது. அதனை நாம் மீண்டும் வலியுறுத்துவோம்.


கேள்வி: சர்வதேச அழுத்தங்களுக்குத்தான் இலங்கை அரசாங்கம் அடிபணியப்போவதில்லையே?


பதில்: அது பொய்.. வெளியில் அப்படிக் காட்டிக் கொள்கிறார்களே தவிர, உள்ளே அப்படி ஒரு நிலை இல்லை.. சர்வதேச நாடுகளுடன் இணைந்து போகும் தன்மையுடனேயே இலங்கை அரசு செயற்படுகிறது. அன்று ஜி.எஸ்.பி. வரிச்சலுகை தேவையில்லை. அது இல்லாமல் நாட்டின் பொருளாதாரத்தை முன்னேற்றலாமெனக் கூறினார்கள்.


ஆனால், இன்று என்ன நடக்கிறது. இந்த வரிச்சலுகை கிடைக்கவேண்டுமென்பதற்காக பல நாடுகளுடன் இணக்கமான முறையிலேயே பேச்சுவார்த்தை நடத்துகிறார்கள். ஆகவே, இலங்கை அரசின் சர்வதேச உறவென்பது வெளியே முரண்பாடு. உள்ளே புரிந்துணர்வு. இதுதான் உண்மை நிலை.


கேள்வி: வடக்கு, கிழக்கு இணைப்புத்தேவை என்கிறீர்கள். கிழக்கு மாகாண மக்கள் இணைப்பை ஏற்றுக்கொள்வார்களா?


பதில்: சில தமிழ் அரசியல்வாதிகளே இவ்வாறானதொரு கருத்தைத் தெரிவித்து வருகின்றனர். நிச்சயமாக அவ்வாறு நடைபெறாது. தமிழ் மக்களைப் பெறுத்தவரையில் கடந்த தேர்தல்களின் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பக்கமே தமது ஆதரவைத் தெரிவித்துள்ளனர். நாங்கள் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுடனும் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு வருகிறோம்.


கேள்வி: முஸ்லிம் காங்கிரஸ் வடக்கு கிழக்கு இணைப்பை ஏற்றுக்கொண்டதா?


பதில்: இப்போதுதான் நாங்கள் அவர்களுடன் புரிந்துணர்வுடனான நிலைப்பாட்டை ஏற்படுத்தி வருகிறோம். இந்தப்பேச்சுவார்த்தைகள் தொடர்ச்சியாக நடைபெறும் பட்சத்தில் இவ்விவகாரம் தொடர்பிலும் அவர்களுடன் பேசுவோம். எதனையும் ஒற்றுமைப்பட்ட நிலையிலேயே நாம் கையாள்வோம். தமிழ் மக்களுக்கு நியாயமான தீர்வு வழங்க வேண்டுமென இன்று பெரும்பான்மையினத்தவர்களிடம் நாம் எவ்வாறு கேட்கிறோமே அதே போன்று எங்களை விடவும் சிறு பான்மையான முஸ்லிம் மக்களின் பிரச்சினைக்கு நாங்கள் நியாயமான தீர்வையே வழங்குவோம். எங்களுக்கு ஒரு நீதி அவர்களுக்கு ஒரு நீதியாக இருக்கக் கூடாது.


எங்களுக்குக் கிடைக்கக் கூடிய அந்தஸ்து, உரிமைகள் போன்று அந்த மக்களுக்கும் கிடைக்கவேண் டும். நாம் வழங்குவோம்.


கேள்வி: நாடு கடந்த தமிழீழ அரசினால் இலங்கைத் தமிழர்களுக்கு விமோசனம கிட்டுமா?


பதில் : இன்று இங்கு எமது மக்கள் விழுந்து கிடக்கிறார்கள் பல தேவைகளை அவர்கள் எதிர்பார்த்துள்ளார்கள். இந்த நிலையில் அவர்களின் தேவைக்கேற்ப நாங்கள் செயற்படவேண்டும். ஒரு வேளை உணவுக்காகக் கையேந்தக் கூடிய நிலைக்கு எமது இனம் வந்துள்ளது. யாராவது ஒருவர் உணவைக் கொடுத்தால் அவர்கள் பக்கமே எமது மக்கள் செல்லக்கூடிய வாய்ப்பு உள்ளது.


இவற்றினையெல்லாம் வைத்துப் பார்க்கும் போது நாடு கடந்த தமிழீழத்தின் கொள்கை தெளிவில்லாமல் உள்ளது. அவர்கள் இன்று இங்கு விழுந்து கிடக்கும் மக்கள் தொடர்பில் சிந்திக்கவில்லையென்றுதான் நான் நினைக்கிறேன். அவர்கள் இவை குறித்துச் சிந்திக்காமல் இருக்கும் ஒவ்வொரு வினாடியும் எங்கள் மக்களின் மனம் மாறிக் கொண்டே உள்ளது. இது எனது தனிப்பட்ட கருத்தாகும்.
அத்துடன் அவர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் எந்தத் தொடர்பினையும் வைத்துக் கொள்ளவும் இல்லை.


கேள்வி: அண்மையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வன்னி மாவட்டத்தின் பல பகுதிகளுக்கும் விஜயம் செய்து அந்தப் பகுதி மக்களைச் சந்தித்திருந்தது. ஆனால், வவுனியா, செட்டிகுளம் முகாமுக்குச் செல்வதற்கு உங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. பாதுகாப்பு அமைச்சின் அனுமதியை நீங்கள் பெறாமையே இதற்குக் காரணமென அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதே?




பதில்: இராணுவத் தரப்பு ஊடகப் பேச்சாளர் தெரிவித்த கருத்தினை நாம் ஏற்றுக் கொள்ளமாட்டோம். கடந்த நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரக் காலத்தில் நாம் எவரின் அனுமதியும் பெறாமலே முகாம்களுக்குச் சென்றோம். இந்த நிலையில் ஏன் இன்று மட்டும் எங்களுக்கு அனுமதி மறுக்கப்படவேண்டும்? பாதுகாப்புத் தரப்பு அனுமதி பெற்றுத் தான் செல்லவேண்டுமென்று வெளிப்படையாக எந்த அறிவிப்பும் கூட இல்லை.


அப்படியிருந்தும் நாம் வவுனியா செட்டிகுளம் முகாமுக்குச் செல்வது குறித்து ஜனாதிபதியின் செயலாளருக்கு தெரிவித்திருந்தோம். நீங்கள் போகும் இடங்களைக் குறிப்பிட்டு விட்டுச் செல்லலாமென அவர் வாய்மூலம் எமக்குத் தெரிவித்திருந்தார். அந்த நம்பிக்கையில் சென்ற நாங்கள் அனுமதி மறுக்கப்பட்டு திரும்பி வந்தோம். மேலும் நாங்கள் மக்களால் தெரிவு செய்யப்பட்ட அவர்களின் பிரதிநிதிகள். எங்களது மக்களைச் சந்திப்பதற்குப் பாதுகாப்பு அமைச்சின் அனுமதி பெறவேண்டுமென்பது இன்னொரு விதத்தில் வேடிக்கையானது.


கேள்வி: மீள்குடியேற்றப்பட்ட மக்களைச் சந்தித்தீர்கள். அந்த மக்களின் வாழ்க்கை எவ்வாறு உள்ளது.?


பதில்: அகதிமுகாமிலிருந்த மக்களை அவர்களது சொந்த இடங்களுக்கு அள்ளிச்சென்று கொட்டியுள்ளனர். அது ஒரு அவல மான வாழ்க்கை.
அதனை எப்படிக் கூறுவ தென்றே தெரியவில்லை. சென்று பார்ப்பவர்களின் மனம் விறைத்துவிடும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக