திங்கள், 7 ஜூன், 2010

சரத்துக்கு தூக்கு'கில்லர் கோட்டா மிரட்டல்'



இலங்கையில் கடந்த வருடம் நடந்த இறுதிப் போரின் போது இலங்கை இராணுவத்தின் உயர் அதிகாரிகள் போர்க் குற்றங்களுக்கான உத்தரவை விடுத்தார்கள் என்று இலங்கையின் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா அவர்கள், தொடர்ந்து சொல்வாரானால், ''அவர் தூக்கிலிடப்படுவார்'' என்று இலங்கையின் பாதுகாப்புத்துறை செயலாளரும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் சகோதரருமான கோட்டாபாய ராஜபக்ஷ எச்சரித்துள்ளார்.
பிபிசியின் ஹார்ட் டோக் நிகழ்ச்சிக்கான செவ்வியிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
தற்போது இராணுவ நீதிமன்ற விசாரணையை எதிர்நோக்கியிருக்கின்ற சரத் பொன்சேகா அவர்கள், ''தான் கோட்டபாய ராஜபக்ஷ அவர்களுக்கு எதிராக போர்க் குற்றச்சாட்டுக்களை சுமத்தியதற்காகவே இந்த சிரமங்களை எதிர்கொள்வதாக'' தன்னிடம் கூறியதாக தெரிவித்த பிபிசியின் செய்தியாளர், ''ஒரு சர்வதேச சுயாதீன விசாரணை நடக்குமாயின் அதற்கு தான் முழுமையாக ஒத்துழைப்பேன் என்றும் இந்த விடயங்களை அங்கு கூறுவேன்'' என்றும் பொன்சேகா கூறியிருக்கிறாரே என்று கோட்டபாய ராஜபக்ஷவிடம் கூறினார்.
அதற்கு பதிலளித்த கோட்டாபாய அவர்கள், ''அவர் அதனை செய்ய முடியாது. அவர் இராணுவத்தின் தளபதியாக இருந்திருக்கிறார். அவர் பொறுப்பு மிக்கவார இருந்திருக்க வேண்டும். இது ஒரு தேசத் துரோகம். அவர் அதனைச் செய்தால் அதற்காக அவரை நாங்கள் தூக்கிலிடுவோம். அது ஒரு துரோகம் . எவ்வாறு அவர் பொய் சொல்ல முடியும். அவர் எவ்வாறு நாட்டை காட்டிக்கொடுக்க முடியும்.'' என்று கூறீனார்.
ஜெனரல் பொன்சேகா அவர்கள் தூக்கிலிடப்படலாம் என்று கூறப்பட்டிருப்பது இலங்கையில் ஒரு அரசியல் கொந்தளிப்பை ஏற்படுத்தலாம் என்று எதிர் பார்க்கப்படுகிறது. சரத் பொன்சேகா இலங்கை நாடாளுமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு உறுப்பினர் என்பதுடன், கடந்த ஜனாதிபதி தேர்தலில் இலங்கை மக்களின் 40 வீத வாக்கையும் அவர் பெற்றிருக்கிறார். அத்துடன் கடந்த 35 வருடமாக இலங்கையில் எவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படவில்லை.
முன்னதாக, இலங்கையில் இறுதிப்போர் நடவடிக்கைகள் குறித்து ஒரு சர்வதேச சுயாதீன விசாரணை நடத்தப்படுவதையும் தான் நிராகரிப்பதாகவும் கோட்டாபாய அவர்கள் தெரிவித்தார்.
இலங்கையின் இறுதிக்கட்ட போரின் போது பல ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டதாக ஐ.நாவும் அரச சார்பற்ற நிறுவனங்களும் கூறுகின்ற போதிலும், இலங்கை இராணுவத்தினர் பொதுமக்கள் எவரையும் கொல்லவில்லை என்று இலங்கை அரசாங்கம் கூறிவருகிறது.
-BBC
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக