திங்கள், 7 ஜூன், 2010

புலிகள் கேட்டதை நீங்கள் கேட்க கூடாது; வீடு கூட கட்டித்தர முடியாது - மஹிந்த

புலிகள் கேட்டதை நீங்களும் கேட்காதீர்கள்; சிங்கள மக்கள் வழங்கிய ஆணைப்படியே நான் நடப்பேன்; வீடு கூட கட்டித்தர என்னிடம் பணம் இல்லை என்று கூறியுள்ளார் மஹிந்த இராஜபக்‌ஷ அவர்கள். இன்று கூட்டமைப்பிற்கும் மஹிந்தவிற்கும் நடந்த பேச்சின் போதே இவ்வாறு கூறியுள்ளார்.



இலங்கை போர் காரணமாக நிர்மூலமான ஒரு லட்சத்து அறுபதினாயிரம் வீடுகளை கட்டித்தரக்கூடிய வசதி இலங்கை அரசாங்கத்திடம் கிடையாது என்றும், விவசாய அறுவடைகளின் பின்னர் மக்களே அவற்றைக் கட்டிக்கொள்வார்கள் என்றும் இலங்கை அரசாங்கத்தரப்பில் தம்மிடம் கூறப்பட்டதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.


இந்த பேச்சுவார்த்தையின் போது இலங்கையில் போரினால் இடம்பெயர்ந்த மக்களின் மீள் குடியேற்றம் குறித்து தாம் ஜனாதிபதியிடம் பேசியதாக கூறிய சுரேஸ் பிரேமச்சந்திரன் அவர்கள், இலங்கை அரசாங்க தரப்பில் ஒரு லட்சத்து அறுபதினாயிரம் வீடுகள் இவ்வாறு நிர்மூலமாகியுள்ளதாக தம்மிடம் கூறப்பட்டதாகவும், ஆயினும் அவற்றை மீளக்கட்டிக் கொடுப்பதற்கான வசதி அரசாங்கத்திடம் இல்லாத காரணத்தினால், இரண்டு அறுவடைக்காலங்களின் பின்னர் மக்களே அவற்றை கட்டிக்கொள்ள் வேண்டும் என்றும் அரசாங்க தரப்பில் தம்மிடம் குறிப்பிடப்பட்டதாகவும் தெரிவித்தார்.


ஆயினும் விவசாயத்துக்கான உதவிகளை மக்களுக்கு அரசாங்கம் வழங்கும் என்றும் அரசாங்க தரப்பில் தம்மிடம் கூறப்பட்டதாகாவும் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.


அரசியல் விவகாரம் குறித்து பேச முற்பட்ட வேளையில், விடுதலைப்புலிகள் கேட்டவற்றை நீங்கள் என்னிடம் கேட்கக்கூடாது என்று ராஜபக்ஷ அவர்கள் தம்மிடம் கூறியதாகவும், தனக்கு சிங்கள மக்கள் வழங்கிய ஆணைப்படியே தான் எதனையும் செய்ய முடியும் என்றும் அவர் கூறியதாகவும் சுரேஸ் பிரேமச்சந்திரன் குறிப்பிட்டார்.


ஆயினும் பேச்சுவார்த்தையின் இறுதியில், தமது கோரிக்கைகள் எல்லாம் தந்தை செல்வாவின் கொள்கைகளே என்று தாம் அவரிடம் வலியுறுத்தியதாக கூறிய பிரேமச்சந்திரன், ஒன்றுபட்ட இலங்கைக்குள் ஒரு தீர்வையே தாம் எதிர்பார்ப்பதாக ஜனாதிபதியிடம் வலியுறுத்தியதாகவும் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக