வியாழன், 10 ஜூன், 2010

செய்தித் துளிகள்..........


கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடத்திய 4496 பேர் தமிழகத்தில் கைது 149 பேர் பெண்கள்.
-------------------------------
சென்னை: ஜனாதிபதி ராஜபக்ஷவின் வருகையைக் கண்டித்து தமிழகம் முழுவதும் தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் கறுப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடத்த முயன்ற 4,496 பேர் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனர். இதில் 149 பேர் பெண்கள்.
சென்னையில் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்த முயன்ற ம.தி.மு.க. பொதுச்செயலர் வைகோ, இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் உள்ளிட்ட 459 பேர் கைது செய்யப்பட்டனர்.


ம.தி.மு.க., பா.ம.க. விடுதலைச் சிறுத்தைகள், புதிய தமிழகம், நாம் தமிழர் இயக்கம் ஆகிய கட்சிகளின் சார்பில் சென்னை உட்பட தமிழகம் முழுவதும் தடையை மீறி ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.


சென்னை மெமோரியல் « ஹோல் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன், கலைக்கோட்டுதயம், வன்னியரசு, ஆர்வலன் உட்பட நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர்.


சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே பா.ம.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில் பங்கேற்ற பா.ம.க. எம்.எல்.ஏ.வேல்முருகன், அம்பத்தூர் நகராட்சி தலைவர் சேகர் உட்பட பலர் கைது செய்யப்பட்டனர்.


நாம் தமிழர் இயக்கத்தின் தலைவர் இயக்குநர் சீமான் தலைமையில் அக்கட்சியினர் நுங்கம்பாக்கத்தில் சாஸ்திரி பவன் அருகே தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பேராசிரியர் தீரன் உட்பட நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர். பின்னர் சீமான் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள இலங்கைத் துணைத் தூதரகத்தின் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற புதிய தமிழகம் கட்சியினரை மியூசிக் அகாதெமி அருகே பொலிஸார் கைது செய்தனர். இவர்கள் அனைவரும் மாலையில் விடுதலை செய்யப்பட்டனர்.


‘சீபா’வானது உடன்படிக்கை அல்ல இந்தியர்களை தீவுக்குள் நிரப்பும் சதி அமைச்சர் விமல் வீரவன்ச
----------------------------------------------
இந்தியாவுக்கும் இலங்கைக்குமிடையே மேற்கொள்ள உத்தேசிக்கப்பட்டிருக்கும் பரந்துபட்ட பொருளாதார பங்குடமை உடன்படிக்கையானது (சீபா) ஒப்பந்தமல்ல என்றும் இந்தியர்களை இலங்கைத் தீவுக்குள் நிரப்புவதற்கான சதி என்றும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் அமைச்சருமான விமல் வீரவன்ச நேற்று புதன்கிழமை தெரிவித்துள்ளார்.




பத்தரமுல்லையிலுள்ள தேசிய சுதந்திர முன்னணியின் தலைமையகத்தில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் இது தொடர்பாக கருத்துத் தெரிவித்த அவர் சீபாவில் கைச்சாத்திட்டால் அது இலங்கையை மோசமாகப் பாதிக்கும் என்று கூறினார்.


தற்போது நடைமுறையிலுள்ள உடன்படிக்கைகள் மூலம் அதிகளவு பொருட்களை இலங்கைக்கு இறக்குமதி செய்ய முடியும். ஆனால், சீபாவானது தொழிலாளர்கள் இலங்கைக்கு அதிகளவுக்கு வருவதற்கு கதவைத் திறந்துவிடும் என அவர் கூறியுள்ளார்.


இப்போதுகூட இந்தியர்கள் சுற்றுலாப் பயணிகள் விசாவில் இங்கு வந்து வடக்கில் வயல்களில் வேலை செய்வதாகவும் சில சமயம் அறுவடைகளுடன் செல்வதாகவும் வீரவன்ச கூறியுள்ளார்.


உத்தேச அரசியலமைப்புத் திருத்தத்தின் மூலம் பிரதமர் மக்களால் தெரிவு செய்யப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார். அரசியலமைப்பு திருத்தங்கள் தொடர்பாக தேசிய சுதந்திர முன்னணி ஏற்கனவே யோசனைகளை சமர்ப்பித்துள்ளதாக அமைச்சர் கூறினார்.


ஜனாதிபதியின் பதவிக்காலம் இரு தடவையென்று ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டது. முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தனவின் வயதை கவனத்திற்கொண்டேயென்றும் அவரே ஆவணத்தின் சிற்பி என்றும் இன்றைய காலகட்டத்துக்கு அது பொருத்தமற்றது எனவும் வீரவன்ச கூறியுள்ளதாக அததெரண இணையத்தளம் குறிப்பிட்டது.


விஸ்வமடு சம்பவம் நிரூபிக்கப்பட்டால் ஆறு இராணுவத்தினர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் இராணுவப் பேச்சாளர்


விஸ்வமடு பகுதியில் இரு குடும்பப்பெண்கள் மீது பாலியல் வல்லுறவு குற்றம் புரிந்ததாக சந்தேகத்தின் பேரில் கைதான ஆறு இராணுவத்தினருக்குமெதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படுமென இராணுவத் தலைமையகம் அறிவித்துள்ளது.


இச்சம்பவத்துடன் இவர்கள் தொடர்புடையவர்கள் என நிரூபிக்கப்பட்டால் இவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படுமென இராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் எஸ்.ஏ.பி.பி.சமரசிங்க தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் பத்திரிகைகளுக்கு விடுத்துள்ள அறிக்கையில் இதனைத் தெரிவித்துள்ளார்.


இந்த ஆறு சந்தேக நபர்களும் கிளிநொச்சி நீதிமன்ற உத்தரவின்படி 14 ஆம் திகதி திங்கட்கிழமை வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். அன்று அடையாள அணிவகுப்புக்கும் நீதிவான் உத்தரவிட்டுள்ளார். பாதிக்கப்பட்ட பெண்கள் வவுனியா ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக